உறக்கம் பற்றிய சில உண்மைகள்!

உறக்கம் பற்றிய சில உண்மைகள்!

வாட்ஸ் அப், பேஸ்புக்,ட்விட்டர் என்று கையில் வாழ்க்கையை சுமந்தபடி சிக்கி தவிக்கும் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாவது இயல்பு. அப்படி ஆகும் போது நமக்கு சில அறிகுறிகளை காட்டுகிறது. அதில் ஒன்று தான் தூக்கமின்மை. இதற்கு உரிய காரணத்தை கண்டறிய வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.பெரும்பாலும் வேலை காரணமாக மன அழுத்தம், உடல் நலம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றால் தூக்கம் பறி போய் விடுகிறது. மனச்சோர்வு, மூளையைத் தூண்டும் மருந்துகள், மது, புதிய சூழல், நீண்ட நாட்களுக்கு தூக்க மாத்திரை உட்கொள்வது, நாள்பட்ட நோய் போன்ற காரணங்களாலும் வரலாம். இப்பிரச்னையால் நாள் முழுவதும் பாழாகி போகும். அதுவே டென்ஷனை உருவாக்கும். மூளையிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். அதிலும் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றியிருப்பவர்களையும் டென்ஷனாக்கி விடுவார்கள். இதற்கு சரியான சிகிச்சை அவசியம். உடல், மனம், சூழல் இந்த மூன்றில் எதில் பிரச்னை இருந்தாலும் தூக்கமின்மை வரலாம். உடலில் என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மனம் என்றால் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்வு காண வேண்டும். சூழலை மாற்றுவதன் மூலமும் தூக்கத்தை திரும்ப பெற முடியும் என்கிறார்கள்
sleep nov 27
இதனிடையே மனிதன் எவ்வளவு நேரம் உறங்கலாம் என்பது அவனுடைய மரபியல் மூலக்கூறுகளுடன் தொடர்பு டையதாக உள்ளது என்பதை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். பொதுவாக நமது உறக்கம் மூளையின் மையப் பகுதியின் கட்டுப்பாட்டின் கீழ் நடை பெறுகிறது. இது மரபியலோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அதனால் உறக்கம் பிறப்பின்போதே திட்டமிடப்பட்டு நிகழ்கிறது என்றும் கருதுகிறார்கள்.இரட்டையர்களின் மூளை களின் மின்துடிப்பலை தொடர்பான இயக்கங் கள் பற்றிய ஆய்வுகளில் இருந்து இப்புதிய கருத்துகள் மேலும் உறுதி செய்யப்படுகின்றன. இரட்டையர்கள் உறங்கும்போது அவர்கள் உறக்கம் வர எடுத்துக் கொள்ளும் தொடக்க நேரம், அவர்களுடைய உறக்கத்தின் பல்வேறு நிலைகள், அவற்றின் காலம் இவற்றுக்கிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

உறக்கம் என்பது என்ன? புல உணர்வுகளின் விழிப்புணர்ச்சியில் இருந்து மாறுபட்ட ஒரு மயக்க நிலையே உறக்கம். இதனால் ஒரு சில புறச்சூழல் மாற்றங்களை உடனடியாக உணர்வதில் உள்ள திறமை தற்காலிகமாக இழக்கப் படுகிறது. மூளையின் செயல்பாடுகளில் பெரும் வியப்புக்குரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உறக்கத்தில் இரு வகைகள் உள்ளன. அவை, விழி இயக்க உறக்கநிலை, விழி இயக்கமற்ற உறக்க நிலை என்பனவாகும். முதலாவது வகையான உறக்கம் மொத்த உறக்க காலத்தில் 25 சதவிகிதம் ஆகும். இந்நிலையில் மூடிய இமைகளுக்குள் விழிகள் இங்குமங்குமாக இயங்கியவண்ணம் இருக்கின்றன. கனவுகள் ஏற்படுவது இந் நிலையில்தான். இந்நிலையில் இதயத்துடிப்பும், சுவாசித்தலும், ரத்த அழுத்தமும் சற்றே அதிகரிக்கின்றன. இதைத் தொடர்ந்து வரும் விழி இயக்கமற்ற உறக்க நிலையில் ரத்த அழுத்தம் குறைகிறது. அதைத் தொடர்ந்து இதயத் துடிப்பும், சுவாசித்தலும் குறைகின்றன. மூட்டுகளில் உள்ள தசை நாண்களின் உடனியக்கத்தன்மை குறைகிறது.

உறக்கத்தைத் தூண்டும் அடிப்படைக் காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. உறக்கம் என்பது வேதியியல் முறையின் பின்னணியில் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற வேதியியல் பொருட்கள் மின் துடிப்பலைகளைக் கடத்துவதற்கு துணை செய்து உறக்கத்தில் முக்கியப் பங்கேற்கின்றன.

உறக்கம் இல்லாமல் நீண்டகாலம் இருக்க முடியுமா? அதிக உறக்கத்தைத் தவிர்த்து விழிப்போடு இருக்கவேண்டிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், போக்குவரத்துக் கண்காணிப்பாளர்கள், லாரி ஓட்டுநர்கள், காவலர்கள், ஆலைத் தொழிலாளிகள் போன்ற பலரையும் ஆராய்ந்து பார்த்தபோது ஆண்களைவிட பெண்கள் உறக்கமின்மையை எளிதாகத் தாங்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்தது. பெண்களின் உடம்பில் காணப்படும் கூடுதலான கொழுப்புப் பொருட்களே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இளவயதினரோடு ஒப்பிடும்போது 40 வயதைத் தாண்டியவர்கள் பொதுவாக உறக்கமின்மையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

டாக்டர். செந்தில் வசந்த்

error: Content is protected !!