உபியில் மத வழிபாட்டு கூட்டநெரிசலால் 127 பேர் மரணம் – பலர் கவலைக்கிடம்!

உபியில் மத வழிபாட்டு கூட்டநெரிசலால் 127 பேர் மரணம் – பலர் கவலைக்கிடம்!

த்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் போலேபாபா என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று அவரது ஆசிரமத்தில் சத்சங்கம் எனப்படும் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு ஒரே நேரத்தில் குவிந்திருந்தனர். கூட்டம் முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பிய போது கடும் நெரிசல் ஏற்பட்டது.கூட்டம் சற்றே கலைந்தபோது 100க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சோதித்த போது, அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுவரை 3 குழந்தைகள், 2 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் உட்பட 127 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

மேலும் விசாரித்ததில் ஹத்ராஸ் அருகே உள்ள ரதிபன்பூரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே இடத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனராம் சரியான முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் கடும் தாமதமாகி உள்ளது . பாதிக்கப்பட்டவர்கள் பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பலி எண்ணிக்கை அதிகமானதாக கூறப்படுகிறது.

உயிருக்கு போராடும் நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகந்த்ரா மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.சிகந்த்ரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லை என்றும் மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் மருத்துவமனை முழுவதும் உடல்கள் நிரம்பி வழிவதாகவும் பொதுமக்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். மேலும் பலர் எட்டா, மதுரா, அலிகார் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார். மேலும் மாநில அமைச்சர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச அமைச்சர் சந்தீப் சிங் கூறுகையில், “ஹத்ராஸ் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, அரசு சார்பில் தேவையான முடிவுகளை எடுக்குமாறு முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஹத்ராஸ்  மாவட்ட  ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், “மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மக்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 50-60 பேர் இறந்ததாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

error: Content is protected !!