உலகக்கோப்பையின் நிஜ நாயகன் ஹர்திக் பாண்டியா!

உலகக்கோப்பையின் நிஜ நாயகன் ஹர்திக் பாண்டியா!

லகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் விராட் கோலி 76 ரன்கள் அடித்தார். அதனால் அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல இந்த தொடரில் குறைந்த ரன்கள் விட்டுக் கொடுத்து, 15 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவர் தான் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன ஆனால், வேறு ஒரு புள்ளி விவரம் இவர்கள் இருவரையும் தாண்டி மற்றொரு இந்திய வீரர் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முதல் காரணம் என குறிப்பிடுகிறது. எம் வி பி (MVP) எனப்படும் அதிக மதிப்புமிக்க வீரர் என்ற புள்ளிவிவரத்தில் ஒரு வீரரின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். அந்த புள்ளி விவரத்தின்படி பார்க்கும்போது ஹர்திக் பாண்டியா இந்த தொடரிலேயே அதிக மதிப்புமிக்க வீரராக இருக்கிறார். அவருக்கு 410.2 இம்பேக்ட் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் 8 போட்டிகளில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதே பட்டியலில் அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருக்கிறார். அவர் 408.9 புள்ளிகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா (398.8 புள்ளிகள்), நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டோனிஸ் (395.5) 5வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (366.4) உள்ளனர். தன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த உலகக்கோப்பையின் நாயகன் ஹர்திக் பாண்டியா தான். அவர் ஆல்ரவுண்டராக பெருமளவில் இந்திய அணிக்கு கை கொடுத்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய மாற்றம்! அதுவும் இவ்வளவு விரைவாக! ஏறக்குறைய 2011 இல் யுவராஜ் சிங் ஆடியதை போலவே இந்த உலகக்கோப்பையில் ஆடியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா! இறுதி நேரத்தில் அவர் பேட்டிங் செய்ய வருவதால் அவருடைய பங்களிப்பு பெரிதாக பேசப்படாமல் போய்விட்டது. அதே போல பும்ரா, அர்ஷ்தீப், அக்சர், குல்தீப் எல்லாமே சிறப்பாக வீச அங்கேயும் ஹர்திக் வெளியே தெரியாமல் போய்விட்டார்.

அவ்வளவு ஏன் ஒரு மாதம் முன்பு நினைத்துப் பாருங்கள், மும்பை வான்கடே மைதானம், அவர்களுடைய சொந்த மைதானத்தில் ரசிகர்களால் எள்ளி நகையாடப்பட்டவர், உள்ளே அழுவுறேன், வெளியே சிரிக்கிறேன் என ஒரு மாதிரி சமாளித்து ஐபிஎல் தொடரை நிறைவு செய்தார்.

அயர்லாந்து உடன் மூன்று விக்கெட், பாகிஸ்தான் உடன் இரண்டு விக்கெட், அமெரிக்கா உடன் 2 விக்கெட், வங்கதேசத்துடன் 1 விக்கெட், பைனலில் தென்னாப்பிரிக்கா உடன் 3 விக்கெட் என மொத்தமாக 11 விக்கெட்களை சாய்த்துள்ளார். அர்ஷ்தீப் 17, பும்ரா 15 விக்கெட்களுக்கு பின் பாண்டியா தான் 11 விக்கெட்களை எடுத்துள்ளார்.

பேட்டிங்கை பொறுத்தவரையில், 8 ஆட்டங்களில் பேட்டிங் ஆடவேண்டிய அவசியம் அயர்லாந்து, அமெரிக்கா அணிகளுக்கு எதிராக வரவில்லை, பைனல் உட்பட மூன்று ஆட்டங்களில் நாட் அவுட் ஆக இருந்தார். ஆப்கானிஸ்தான் உடன் 32, வங்கதேசத்துடன் 50, ஆஸ்திரேலிய உடன் 27, இங்கிலாந்துடன் 23 என கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.மொத்தமாக 95 பந்துகளில் 144 ரன்களை 150 ஸ்ட்ரைக்ரேட்டுடன் ஆடியிருக்கிறார். 11 பவுண்டரிகள், 9 சிக்சர்களையும் விளாசியுள்ளார். அவருடைய சராசரி 48 ரன்களாக உள்ளது. இந்திய தரப்பில் அதிக சராசரி கொண்டவர் இவரே!

ஆக பவுலிங்கில் 11 விக்கெட், பேட்டிங்கில் 144 ரன்கள் சேர்த்து அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். எந்த மக்கள் நகைத்தார்களோ, அவர்களே கொண்டாடும் ஆட்டத்தினை வெளிப்படுத்தி கதாநாயகனாக மாறி விட்டவர் ஹர்திக் பாண்டியா என்றால் அது மிகையல்ல!

ராஜேஷ்

Related Posts

error: Content is protected !!