எஃகு & அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி – டிரம்ப் அறிவிப்பு!
![எஃகு & அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி – டிரம்ப் அறிவிப்பு!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2025/02/tru-4.jpg)
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். எந்த நாட்டிற்கு என்பது பற்றி அவர் கூறவில்லை.
அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகளை மாற்றி அமைத்து வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரி விதிப்பால், உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் பெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசி நேரத்தில் டிரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார்.
ஆனால், தற்போது இரும்பு (எஃகு), அலுமினியம் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என டிரம்ப் கூறியுள்ளார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆனால் எந்த நாட்டிற்கு என்பது பற்றி அவர் கூறவில்லை. அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூடுதல் வரி விதிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.