பாடத் திட்டத்தில் இருந்ததே எனக்குத் தெரியாது – அருந்ததி ராய் !

பாடத் திட்டத்தில் இருந்ததே எனக்குத் தெரியாது – அருந்ததி ராய் !

நம்ம நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது பருவத்துக்கான பாடத் திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய `வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ (walking with the comrades) என்ற புத்தகத்தின் பகுதிகள் இடம்பெற்றிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருப்பதால் மாணவர்கள் படித்து வந்தார்கள். ஆனால்,இந்த ஆண்டு இந்தப் புத்தகத்தைப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என திடீரென பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி வலியுறுத்தியது.

அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள், தேச விரோத மாவோயிஸ்ட் சிந்தனைகளை நேரடியாக ஆதரித்து வருவதாகவும், அதனால் இந்தப் பாடத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு நாட்டை பற்றியான எதிர்மறையான சிந்தனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஏ.பி.வி.பி அமைப்பு குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலாளரான விக்னேஷ் பாபு என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் கடந்த வாரம் மனு அளித்தார். அதில், ’தேச விரோதச் சிந்தனைகளைக் கொண்ட அருந்ததி ராயின் புத்தகத்தைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் என்ற புத்தகம் முதுகலை ஆங்கில பாடத்திட்டத்தின் மூன்றாம் பருவத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இது கல்வியாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து அருந்ததி ராய் விளக்கம்

“என்னுடைய புத்தகமான Walking with the Comrades ஏபிவிபியின் அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் பணிந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் படத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, வருத்தத்தைவிட மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஏனென்றால், அது பாடத் திட்டத்தில் இடம்பெற்றதே எனக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகளாக அது கற்பிக்கப்பட்டது சந்தோஷம்தான். இப்போது பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து எனக்கு பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை.

ஒரு எழுத்தாளராக எழுதுவது மட்டும்தான் என் வேலை. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதற்காக போராடுவது என் வேலையில்லை. இதை மற்றவர்கள் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது பரவலாக படிக்கப்படும்,

மேலும், எழுத்தாளர்கள் படிக்கப்படுவதை இம்மாதிரி தடைகளால் ஏதும் செய்ய முடியாது. தற்போதைய ஆட்சியில் இலக்கியம் குறித்து இம்மாதிரி குறுகிய, மேலோட்டமான, பாதுகாப்பு உணர்வற்ற தன்மையை வெளிப்படுத்துவது, அந்த ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை ஆதரிப்பவர்களுக்கும்கூட பின்னடைவாகத்தான் இருக்கும். உலக அரங்கில் ஒரு மரியாதையையும் கண்ணியத்தையும் பெற விரும்பும் ஒரு சமூகத்தின், நாட்டின் அறிவுஜீவித் திறனை இது கட்டுப்படுத்தும்” என்றும் அருந்ததி ராய் கூறியிருக்கிறார்.

அடிசினல் ரிப்போர்ட்:

அருந்ததி ராயின் தோழர்களுடன் ஒரு பயணம் தமிழ் நூலை பிடிஎப் வடிவில் தரவிரக்கம் செய்ய இணைப்பு. இது,

அருந்ததி ராயின் Walking with the Comrades நூலின் தமிழாக்கம் 

error: Content is protected !!