வாழ்க்கையை ஆரோக்கியமாக்க உதவும் வாழைப்பூ

வாழ்க்கையை ஆரோக்கியமாக்க உதவும் வாழைப்பூ

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இதில் உணவுக்கு சுவை சேர்க்கும் பதார்த்தமாக பல வகையான காய்கறிகளை சாப்பிடுகிறோம். அதில் பூ வகையை சார்ந்த, சத்துகள் மிகுந்த வாழைப்பூ ஒன்று. அந்த வாழைப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது ‘வாழைப்பூ’.

இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. இந்த நோய் வந்தவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

சிலருக்கு மலம் வெளியேறும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை, மருத்துவ உலகம் ‘ரத்த மூலம்’ என்ற பெயர் வைத்து அழைக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும்.

வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு தணியும்.

அதேபோல், இப்போது உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் பலரையும் பாதித்திருக்கும் பிரச்னை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.

அதேபோல், பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்னை வெள்ளைப்படுதல். இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பிரச்னை உள்ளவர்கள், இதை நல்ல பக்குவத்தோடு ரசம் செய்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் வெளியேறிவிடும். வாழைப்பூ ரசம் சாப்பிட, வறட்டு இருமலும் மறைந்து விடும்.

அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.

சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

வயிறு கோளாறு உள்ள ஆடு மாடுகளுக்கு கூட இது தான் மருந்தாக இருக்கிறது. இது பற்றிய நன்மை தெரிந்தவர்கள் தினந்தோறும் இதனை உணவிற்கு பயன்படுத்துவார்கள்.

வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு அதன் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் யாரும் மருத்துவமனையைத் தேடிச்செல்ல வேண்டிய அவசியமே இல்லை!.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!