தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது

தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது

பொது சிவில் சட்டம் அரசியல் மற்றும் சமுதாய தளத்தைத் தொடர்ந்து அதிர வைத்து வரும் ஒரு விவாதக் கரு. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை அடிப்படை விழுமியமாக ஏற்றிருக்கும் ஒரு மதச்சார்பற்ற, குடியரசு தேசத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான தனியார் சட்டங்கள் இருக்கலாமா என்ற கேள்வி சாதாரணக் குடிமகனையும் சிந்திக்க வைக்கக் கூடியது. அண்மை யில் மறுபடியும் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில், பொது சிவில் சட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என மத்திய அரசை நோக்கி வினா தொடுக்க, அதற்கு மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கெளடா, பொது சிவில் சட்டம் இன்றையக் கட்டாயத் தேவை என்றாலும்கூட, ஒருமித்த கருத்தை உருவாக்கி பொது சிவில் சட்டத்தை இயற்றுவோம் எனப் பதிலளிக்க விவாதக்களம் மீண்டும் சூடுபிடித்துக் கொண்டது.

edit july 3

காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குதல், அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல் ஆகிய முப்பெரும் கோரிக்கையை பா.ஜ.க. நீண்ட நெடுங்காலமாகவே முழங்கி வருகிறது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்த பிறகு வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. ஆனால், இதுதான் நாங்கள் கொண்டு வரவுள்ள பொது சிவில் சட்டத்தின் வரைவு என்று எதையுமே அக்கட்சியோ, அதன் தலைமையில் அமைந்த அரசுகளோ இதுவரை முன்வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொது சிவில் சட்டத்தை முன்வைத்து நிகழ்த்தப்படும் மாயா வாதங்களின் விளைவாக சாதாரண மக்களின் மனதில் ஒரு போலித் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அது, இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமே தனியார் சட்டமும், சலுகைகளும் உள்ளன, மற்றவர்களுக்கு இல்லை என்பதே அந்தத் தோற்றம்.உண்மையில் நம் நாட்டின் உரிமையியல் சட்டங்களில் 99 விழுக்காடு எல்லோர்க்கும் பொதுவான சட்டங்களாகவே உள்ளன. தொழில் நடத்துதல், கொடுக்கல் வாங்கல், வாடகை, சொத்து விற்பனை உள்ளிட்டப் பல்வேறு செயல்பாடுகளில் அனைவருக்கும் பொதுவான சட்டங்களே பின்பற்றப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு முஸ்லிம் வங்கியில் வாங்கிய கடனை முறையாகத் திரும்பச் செலுத்தவில்லை. வட்டியுடன் கடன் தொகை அதிகரித்து, வழக்குமன்றத்துக்குப் போனால், இஸ்லாம் மார்க்கத்தில் வட்டி வாங்குவதும் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதால், நான் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாது என வாதிட முடியாது.இந்தியச் சட்டம் 18 வயதுக்குள்பட்டவர்களை மைனர் (சிறார்) என்கிறது. இஸ்லாம் மார்க்கத்தில் பருவமடைந்து விட்டாலே மேஜர்தான். எங்கள் மார்க்க சட்டப்படி 15 வயதில் மேஜர் ஆகிவிட்டதால் மைனருக்கான சட்டங்கள் எங்களைக் கட்டுப்படுத்தாது என யாரும் வாதிட முடியாது.

திருமணம், மண விலக்கு, வாரிசுரிமை, வக்ஃப், சொத்துகளின் நிர்வாகம் இவற்றில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையிலான தனியார் சட்டங்களை இந்திய அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது.இதேபோல, இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், இன்ன பிற பிரிவினருக்கும், அவர்களுக்கென சிறப்புத் தனியார் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு மட்டுமே தனியார் சட்டம் இருப்பது போல பரப்புரை செய்வது உண்மைக்கு மாறானது.பாபா சாஹேப் அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் நிர்ணய அவை, சுதந்திர இந்தியாவுக்கான சட்டங்களை வகுத்த நாள்களில், நீண்ட நெடிய விவாதங்கள் நிகழ்ந்தன. அம்பேத்கரும், நேருவும், இந்நாட்டிற்கு எம்மதமும் சார்ந்திடாத பொதுவான உரிமையியல் சட்டங்கள் அமைவதையே விரும்பினர். ஆனாலும், அது இயலாத சூழல் ஏற்பட்டு, பெரும்பான்மை வாதத்தால் சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படும் சூழலைத் தடுப்பதற்காகவே, தனியார் சட்டங்களை ஏற்கும் நிலைக்கு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக இந்திய அரசியல் நிர்ணய அவையில், தனியொரு மனிதராய் நின்று நெடும் போராட்டம் நிகழ்த்தி இந்நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தனியார் சட்டமென்னும் அடிப்படை உரிமை கிடைக்க வழி வகுத்தவர் கண்ணியமிகு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் என்பது குறிப்பிடத்தக்கது. 1948-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய அவையில் சமயச் சுதந்திரம் தொடர்பான விவாதம் நடந்தபோது, தனியார் சட்டங்கள் இல்லை என்றால், இந்திய அரசியல் சாசனத்தின் 25(எ) பிரிவான விரும்பிய சமயத்தைத் தேர்வு செய்தல், பின்பற்றுதல், பரப்புரை செய்தல் ஆகிய உரிமைகள் அர்த்தமற்றுப் போவதை எடுத்துரைத்து, தனியார் சட்டங்களை அரசியல் சாசனம் ஏற்பளிப்புச் செய்ய காயிதே மில்லத் காரணமாக இருந்தார்.

மற்றவற்றில் எல்லாம் பொதுவான சட்டத்தை ஏற்கும்போது, திருமணம், மண விலக்கு, வாரிசுரிமை, வக்ஃப் நிர்வாகம் ஆகியவற்றில் மட்டும் ஷரிஅத் சட்டங்களை கண்டிப்பாக முஸ்லிம்கள் பின்பற்றுவது ஏன் என்ற கேள்வி எழலாம். இவை ஒரு குடும்பத்திற்குள், ஒரு சமூகத்திற்குள் இருதரப்பும் ஏற்றுக் கொண்டு நிகழும் வாழ்வியல் செயல்பாடுகளாகும். இதனால் பிற சமயத்தினருக்கோ, தேசத்துக்கோ எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை. இஸ்லாம் மார்க்கத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம் அந்த நெறிமுறைகளின்படி, திருமணம் செய்து கொள்வதிலும், தங்களின் சொத்துகளைப் பகிர்ந்து கொள்வதிலும் பிறருக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்?

இந்தியாவிற்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு நம் நாட்டின் பன்முகத் தன்மை ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது வேர்க்கொள்கை ஆகும். இதை மிகச் சரியாக உணர்ந்திருந்த நமது முன்னோர்கள், இதன் சட்டங்களிலும் அதைப் பிரதிபலிக்கச் செய்துள்ளனர். அதேநேரம், இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளின் 44-ஆவது பிரிவு, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதைப் பரிந்துரை செய்வதைக் குறிப்பிட்டு பொது சிவில் சட்டத்திற்காக வாதிடுகின்றனர்.

வழிகாட்டு நெறிமுறைகளைப் பொருத்த வரை நீதிமன்றங்கள் இதை வலியுறுத்த முடியாது. வழிகாட்டு நெறிமுறைகளை நிறைவேற்றுமாறு வழக்கும் போட முடியாது. வழிகாட்டும் நெறிமுறைகளின் அதி முக்கியமான வழிகாட்டுதல்கள் பல அரசுகளால் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வரும் வேளையில், பொது சிவில் சட்டம் மட்டும்தான் வழிகாட்டி நெறிகளில் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி, தேச ஒற்றுமை என்ற கண்ணாடியை உடைத்து நொறுக்க முயற்சிக்கின்றனர்.

இந்திய அரசியல் சாசனத்தின் 36 முதல் 51 வரை உள்ள வழிகாட்டும் நெறிமுறைகளில், 47-ஆவது பிரிவு போதையூட்டும் மது வகைகள், உடலுக்குக் கேடு செய்யும் நச்சுத்தன்மை பொருந்திய பொருள்கள் ஆகியவற்றை அரசு தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த அரசுகள் இதைச் செய்வதுண்டா? அரசே மதுபானத்தை விற்கும் அவலம் அல்லவா இங்கே நடக்கிறது. அதுபோன்ற ஒரு வழிகாட்டும் நெறிமுறைதான் பொது சிவில் சட்டம் குறித்தது ஆகும். தனியார் சட்டங்கள் நம் நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் உள்ளனவா என்றால் இல்லை. புத்தமத நாடான தாய்லாந்திலும், சிங்களப் பேரினவாத இலங்கையிலும்கூட முஸ்லிம்களுக்குத் தனியார் சட்டங்கள் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் உள்பட எத்தியோப்பியா, உகாண்டா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் முஸ்லிம்களுக்குத் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.÷இது அந்த நாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு எவ்வகையிலும் ஊறு செய்யவில்லை.

இஸ்லாமிய தனியார் சட்டத்தில் ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையே இந்துக்கள் செய்தால் குற்றம். ஒரு நாட்டில் ஒரு செயல் இருவேறு வகையாக அளவிடப்படுவது சமதர்மமா என்ற வினாவை எழுப்புகின்றனர். பொது சிவில் சட்டம் தேவை என்பதற்கு பாஜக முன்வைக்கும் வலிமையான வாதமும் இதுதான்.சான்றிதழ்படி இந்துவாக உள்ளவர் பாரறிய பலதார மணம் செய்து கொண்டு, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, முதல் அமைச்சராக, சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகிப்பதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை (நாகரிகம் கருதி பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன).

சட்ட அனுமதி இருந்தாலும் இந்தியாவிலேயே மிகக் குறைவான அளவில் பலதார மணம் செய்தோர் முஸ்லிம்களே என்கிறது புள்ளிவிவரம். 1951 முதல் 1960 வரையிலான இந்தியாவின் பலதார மணப் புள்ளி விவரப்படி, முஸ்லிம்கள் 4.3 விழுக்காடும் இந்துக்கள் 23.58 விழுக்காடும் பலதார மணம் செய்துள்ளனர் என்கிறது. (Towards Equality என்ற அமைப்பு 1974-இல் வெளியிட்ட அறிக்கை.)

ஆர்.எஸ்.எஸ்.ஸை தனது தாயமைப்பாக ஏற்றுக் கொண்டுள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்களில் முக்கியமானவரான குரு கோல் வால்கர் பொது சிவில் சட்டம் குறித்து முன்வைத்துள்ள கருத்துகளை வசதியாக மறந்து விடுகிறது. ஆகஸ்ட் 20, 1972 அன்று, தீனதயாள் உபாத்யாய ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, “பாரத ஒற்றுமையைப் பாதுகாக்க பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்பது தவறு. இயற்கைக்கு எதிரானது விபரீத விளைவுகளை உண்டாக்கக் கூடியது’ என்று கூறியிருப்பது 21-8-1972 தேதியிட்ட மதர்லேண்ட் இதழில் வெளிவந்துள்ளது. ஒரு பன்மைத்துவ தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

ஜெ. ஹாஜாகனி

error: Content is protected !!