ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சியின் இறப்பின் விளைவுகள்?!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சியின் இறப்பின் விளைவுகள்?!

ரான் ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சி ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போயிருக்கிறார். ராய்சியின் ஆட்சிக்காலம் ஈரானின் மாற்றத்துக்கு முக்கியமான ஒரு மைல்கல்லாக இருந்திருக்கிறது. அவருக்கு முன்பிருந்த ஹசன் ரூஹானி ஒரு மிதவாதத்தலைவர். பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தியவர். அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தத்தை கையொப்பமிட்டதில் ரூஹானிக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டது ரூஹானி போன்ற மிதவாதிகளின் செல்வாக்கை பாதித்தது. குரூரக்கோமாளியின் அந்த தான்தோன்றித்தனமான செயல் ஈரானில் அடிப்படைவாதிகளின் கரத்தை பலப்படுத்தியது. இந்தப் பின்னணியில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனவர்தான் ராய்சி. ரூஹானிக்கு எதிர் துருவத்தில் இருப்பவர். மத அடிப்படைவாதத்தைப் போற்றியவர். ‘பேச்சு எல்லாம் கிடையாது, சும்மா வீச்சுதான்’ என்று இயங்கியவர். தன் ஆட்சியின் கீழ் ஹெஸ்போல்லா, ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்தவர். மத உரிமைகளை மட்டுமே போற்றி, மனித உரிமைகளை துச்சமாக மதித்து நடந்து கொண்டவர். ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் இவர் ஆட்சியில்தான் துவங்கின.

இவர் ஆட்சியில்தான் அவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டன. ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்தப் போராட்டங்களில் அரசினால் கொலை செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கு எதிரான ட்ரோன் ராக்கெட் தாக்குதல்கள் இவர் ஆட்சியில்தான் நடத்தப்பட்டன. ஈரானின் சீனியர் ராணுவ அதிகாரிகள் பலர் இஸ்ரேல் கையால் கொல்லப்பட்டதும் இவர் ஆட்சியில்தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூட இஸ்லாமிய குடியரசுக்கு ஆதரவாகவே இவரது அணுகுமுறைகள் இருந்திருக்கின்றன.

எண்பதுகளில் ஈரான்-ஈராக் போர் நடந்து கொண்டிருந்த போது கொமேனியுடன் இணைந்து ‘தேசத் துரோகிகள்’ என்று அறியப்பட்டவர்களை கொலை செய்ய ஒரு கமிட்டி (!) அமைக்கப்பட்டது. அதில் உறுப்பினராக இருந்தவர் ராய்சி. ஆயிரக்கணக்கான துரோகிகள் (!) இந்தக் கமிட்டி மூலம் அடையாளம் காணப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே மத்திய கிழக்கு எரிந்து கொண்டிருக்கும் வேளையில் ராய்சியின் இந்த அகால மரணம் நிலைமையை மேலும் மோசமடைய செய்யப்போகிறது. இந்த மரணம் விபத்தினால் நிகழ்ந்ததா அல்லது சதி மூலம் நிகழ்ந்ததா என்ற விவாதங்கள் துவங்கி இருக்கின்றன. ஒருவேளை இதில் சதிக் கோணம் கண்டுபிடிக்கப்பட்டால் அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளை யோசிக்கவே முடியவில்லை.

எது எப்படி இருந்தாலும் இப்ராஹீம் ராய்சியின் இறப்பு மத்திய கிழக்கு அரசியலில் பெரும் மாற்றங்களை விளைவிக்கப் போகிறது என்பது மட்டும் யோசிக்க முடிகிறது.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!