என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட்!- ஏன்? யாரிவர்?- முழு விபரம்

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்  வெள்ளதுரை சஸ்பெண்ட்!- ஏன்? யாரிவர்?- முழு விபரம்

2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளதுரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார். வீரப்பனை தேடும் சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்று இருந்தார். உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (AdSP) உயர்ந்துள்ளார். 2021 மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அச்சுறுத்தும் கும்பல்களைக் கண்காணிக்க வெள்ளதுரை டெப்டடேஷனில் நியமிக்கப்பட்டார். திருவண்னாமலையில் மாவ்ட்ட குற்றவியல் ஆவண காப்பாக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், மாநில டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவர் (ஹோபிஎஃப்) சங்கர் ஜிவால் அமைதியான முறையில் ஓய்வு பெற பரிந்துரைத்து இருந்தார். ஆனால், மாநில உள்துறை வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றியவர் வெள்ளத்துரை. பின்னர், அந்த வேலை பிடிக்காமல் விட்டு விலகினார். ஐந்து வருடங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் எஸ்.ஐ பணிக்கு அறிவிப்பு வெளியானது. அதைப் பார்த்து இன்டர்வியூவுக்குப் போய் தேர்வானார். வெள்ளத்துரை! தமிழக போலீஸில் எஸ்.ஐ-யாக 1997-ல் காலடி எடுத்துவைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் எஸ்.ஐ-யாக முதன்முதலில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, திருச்சிக்கு மாறுதல் ஆனார். 1998-ல் பாலக்கரை காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றியபோது, பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளியான கோ.சி.ஜான் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்பிலிருந்தார். அவர் போலீஸ் எஸ்கார்ட்டில் இருந்தபோது போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பி ஒட முயன்றபோது தற்காப்புக்காக வெள்ளத்துரை சுட்டதில் அதே இடத்தில் இறந்தார். இதுதான் வெள்ளத்துரையின் முதல் என்கவுன்ட்டர்.

இதன் பின் 2003-ல் சென்னையைக் கலக்கிவந்தவர் அயோத்திகுப்பம் வீரமணி. அவரைக் கைதுசெய்ய வெள்ளத்துரை டீம் சென்றபோது, அவர் இவர்களை திருப்பித் தாக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் 2004-ல் வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப்பகுதிக்குள் போய் அவரை ஆம்புலன்ஸ் வேனில் அழைத்துவருவதுதான் வெள்ளத்துரைக்கு இடப்பட்ட பணி. அப்படி ஒருவேளை, வீரப்பன் வரவில்லையென்றால், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றியும் தெளிவாக அப்போதைய அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் சொல்லியனுப்பினாராம். ஆனால், வீரப்பன் ஏதும் முரண்டுபிடிக்கவில்லை. வெள்ளத்துரை அழைத்ததும், உடனே வந்து வேனில் ஏறினாராம். `டிபன் இருக்கிறது. சாப்பிடுங்கள்’ என்றபோது, `வேண்டாம். பசியில்லை. பிறகு சாப்பிடுகிறோம்’ என்று தவிர்த்தாராம் வீரப்பன். ஒரு கட்டத்தில், ஆம்புலன்ஸ் வேனிலிருந்து வெள்ளத்துரையும், டிரைவர் சரவணனும் இறங்கி ஒட… அந்த இடத்தில் பதுங்கியிருந்த அதிரடிப்படையினர் வேனைச் சல்லடையாக துளைத்தனர். இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக இரட்டிப்பு பதவி உயர்வு வெள்ளத்துரைக்கு தரப்பட்டது. அப்படித்தான், தற்போது கூடுதல் எஸ்.பி-யாகப் பதவியில் இருந்தார்.

இதன் பின்னர் 2010-ல் மதுரையில் போலீஸ்காரர் ஒருவரின் மகனும், இன்னொரு நபரும் இணைந்து வீடு புகுந்து கொள்ளையடித்துவந்தனர். அவர்கள்மீது 80-க்கும் அதிகமான வழக்குகள் இருந்தன. அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் தப்பிக்க முயல, வெள்ளத்துரை டீம் என்கவுன்ட்டர் செய்தது. மேலும் 2012-ம் வருடம், அக்டோபர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ ஆல்வின் சுதனை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றனர் மூன்று ரௌடிகள். அதற்கு அடுத்த மாதம், இரண்டு ரௌடிகள் ஒரு தடவையும், மூன்றாவது ரௌடி வேறு ஒரு சந்தர்ப்பத்தின்போதும் வெள்ளத்துரையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இப்படி நீள்கிறது வெள்ளத்துரையின் என்கவுன்ட்டர் பட்டியல்..!

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று புகாரளிக்கப்பட்ட, ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலையான குமாரின் வழக்கு சிபி-சிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டது மற்றும் காவல் ஆய்வாளர் எஸ் கீதா தனது இறுதி அறிக்கையை 2023 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!