ஊழல்வாதி என்று பெயரெடுத்த ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு!

ஊழல்வாதி என்று பெயரெடுத்த ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியில் மோசடி செய்ததாகவும், தனியார் நிறுவனம் தொடங்கிய குற்றச்சாட்டுக்கும் ஆளான பாஜக பிரமுகரான துணைவேந்தர்  ஜெகநாதனின் பதவி காலம் நாளையுடன் முடிவு பெற உள்ள நிலையில் அவரது பதவி காலத்தை வருகிற 2025ம் ஆண்டு மே 19ம் தேதி வரை நீட்டித்து  கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கவர்னரின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பதவியேற்றுக்கொண்ட 2021 முதற்கொண்டே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஜெகநாதனின் மூன்றாண்டுகால பதவிகாலம் நாளை 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய வேண்டிய நிலை இருந்தது.இதற்காக பல்கலைக்கழக சாசன விதிகள்படி ஆட்சிக்குழுவின் பிரநிதி, ஆட்சி பேரவையின் பிரதிநிதி, ஐஏஎஸ் அதிகாரி என்று 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு, அந்த தேடுதல் குழுவானது புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பது என்பது வழக்கம். 30ம் தேதி துணைவேந்தர் ஜெகநாதன் ஓய்வுபெறும் நிலையிலும் தேடுதல் குழுவானது இதுவரையிலும் அமைக்கப்படவில்லை. தேடுதல் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்து அதற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் கூட அந்த குழுவை அறிவிக்காமலே இருந்தது கவர்னர் மாளிகை.

இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் நாகப்பட்டினம் எம்.எல்.ஏவும், விசிக நிர்வாகியுமான ஆளூர் ஷாநவாஷ் கேள்வி எழுப்பியபோது, சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு பற்றி விசாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முறைகேடுகளில் சிக்கியிருக்கும் துணைவேந்தர் ஜெகநாதனுடன் தமிழக கவர்னர் எவ்வளவு நட்புடன் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை மீண்டும் துணை வேந்தராக்குவதற்கான காரியங்கள் நடந்து வருகின்றன என்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அத்துடன் தேடுதல் குழுவை அமைக்காததால், ஜெகன்னாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க திட்டமிடுகிறாரா கவர்னர் என்று, பல்கலைக்கழக தொழிலாளர் சங்கமும் சந்தேகம் எழுப்பி இருந்தது. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஜெகந்நாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி அதற்கான ஆணையை அவரிடம் வழங்கி இருக்கிறார் கவர்னர். ஜெகநாதன் பதவிக்காலத்தை 2025 ம் ஆண்டு மே 19ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்  கவர்னர் ஆர்.என்.ரவி.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் அரசு ஊழியர் ஒருவர் வர்த்தகம் சார்ந்த நிறுவனம் தொடங்க அனுமதி இல்லை என்கிற நிலை இருந்தும் முறைகேடாக பூட்டர் பவுண்டேஷன் எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி, அந்த நிறுவனத்தில் பலரையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு தனி நிறுவனம் தொடங்கி, அதில் பங்குதாரராக இருந்துள்ளார் ஜெகநாதன். இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் போலீசில் புகாரளித்திருந்தார். எஸ்.சி., எஸ்.டி. பட்டியலின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2.66 கோடி நிதியில் ஊழல் செய்துள்ளார் ஜெகநாதன் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதை அடுத்து இப்படி தனியார் நிறுவனம் தொடங்கி , அதன் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் நிதிகள் மோசடி செய்த குற்றச்சாட்டில், 8 பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்து கடந்த டிசம்பர் 26ம் தேதி அன்று கருப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதை அடுத்து ஊழல்வாதி என்று பெயரெடுத்த ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி இருப்பது பெரும் பரப்பரப்பையும், சர்ச்சையையும் எழுப்பி இருக்கிறது.

error: Content is protected !!