மோடி அரசுக்கு நான்கு விஷயங்கள் பெரும் நெருக்கடி!

மோடி அரசுக்கு நான்கு விஷயங்கள் பெரும் நெருக்கடி!

ரும் காலத்தில் மோடி அரசுக்கு நான்கு விஷயங்கள் பெரும் நெருக்கடியைக் கொடுக்க மிக அதிகபட்ச வாய்ப்பு உண்டு. அதில் முதலாவது ரயில்வே. சாதாரணப் பெட்டிகளுக்கு அதிக தேவை இருக்கும் போது அதன் உற்பத்தி சுமார் 85 விழுக்காடு குறைக்கப்பட்டு விட்டது. வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம், விரிவாக்கத்தின் மீது துளியும் அக்கறையற்ற தன்மை போன்ற பல பிரச்சனைகள் ரயில்வேயை சிக்கலில் வைத்திருக்கிறது.

மிகக் கடுமையான ஆள் பற்றாக்குறை இருப்பதால் இதனை சீராக்குவது அடுத்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட சாத்தியமில்லை. நாம் நம் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பியே டிக்கெட் எடுக்கவும் பயணம் செய்யவும் வேண்டும்.

அடுத்தப் பிரச்சனை வங்கித் துறைக்கு. வெறும் கடன்களைக் கொடுத்து மட்டும் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்துவிடலாம் எனும் அடிமுட்டாள் தனமான நம்பிக்கை மோடியின் கடந்த பத்தாண்டு கால அரசுக்கு இருந்தது. வங்கிக் கடன்கள் கண்டமேனிக்கு இறைக்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்களின் செல்வாக்கு மூலமும் கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்போது பல வங்கி மேலாளர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து சில கடன்களை வாராக் கடனாக மாறாமல் காப்பாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். முத்ரா கடன்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் இருப்பதால் அதன் NPA நிலவரம் தெரியவில்லை. இதுவும் விரைவில் பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்கும்.

அடுத்தது வேலை வாய்ப்பின்மை. ஐடி உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளின் வருமானத்தை நம்பியே ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏராளமான துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் துறைகளில் ஏற்படும் வேலை வாய்ப்பின்மை அதைச் சார்ந்து இருக்கும் பிற துறைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும். இதன் தொடர் விளைவு பல்வேறு சமூக பொருளாதாரக் குற்றங்களை நோக்கி இட்டுச் செல்லும்.

அடுத்த இன்னொரு தலைவலி சாலைப் போக்குவரத்துத் துறை. கமிஷன் வருவாய் இதில் அதிகம் இருந்ததால் ஏராளமான திட்டங்களுக்குப் பணம் ஏற்கனவே இதில் கொட்டப் பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நாம் கேள்விப்படும் பெருங்கட்டுமான விபத்துக்கள் சாலைப் போக்குவரத்துத் துறை சார்ந்தவை. ஒப்பந்தக்காரர்கள் இஷ்டம் போல தரத்தில் சமரசம் செய்ததால் இவையெல்லாம் நடந்திருக்கும். அப்படியானால் அதன் பின் விளைவுகளை நாம் இனிதான் கணிசமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வில்லவன் ராமதாஸ்

error: Content is protected !!