கருடன் – விமர்சனம்!

கருடன் – விமர்சனம்!

டந்த 2013ம் வருஷம் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர். அதன் பின்னர் காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை டைரக்ட் செய்தார். அதையடுத்து வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 படத்தில் எழுத்தாளராக பணி புரிந்தார். அந்தக் காலக் கட்டத்தில் வெற்றிமாறன் எழுதிய ஒரு கதையை பரோட்டா காமெடியன் சூரிக்காக அணுஅணுவாக செதுக்கி சிட்டி ஜனங்களுக்கு கொஞ்சம் அந்நியமாக கருடன் என்ற டைட்டிலில் கொடுத்து இருக்கிறார்கள். அதற்காக வழக்கம் போல் நட்பு, களவாணிப் புத்தி, துரோகம், விசுவாசம், கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என்று ஏகப்பட்ட சீன்களுடன்  ஆடியன்ஸ் முகஞ்சுளிக்கும் விதத்தில் உருவாகியுள்ளதுதான் சோகம்.

அதாவது ஹீரோவாக இருந்து சப்போர்ட் ஆர்டிஸ்டாகி விட்ட சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் குழந்தை பருவத்தில் இருந்தே குளோஸ் ஃப்ரண்ட்ஸாக இருக்கிறார்கள். இவர்களிடயே ஆதரவற்ற சூரிக்கு சிறு வயது முதல் அடைக்களம் கொடுத்ததால், அவர் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான வேலைக்காரராக இருக்கிறார். அதே சமயம், சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவராகவும் உறவு பாராட்டுகிறார். இந்நிலையில், சில காரணங்களுககக உன்னி முகுந்தன் சசிகுமாருக்கு துரோகம் செய்ய முயற்சிக்க, சூரி விசுவாசத்திற்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா? அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் நியாயம் பக்கம் நின்றாரா? என்பதை முன்னரே சொன்னது போல் ரத்தகளரியுடன் எக்ஸ்போஸ் செய்திருப்பதுதான் ‘கருடன்’ கதை.

சொக்கன் என்ற என்ற கேரக்டரில் வெள்ளந்தி மனிதராகவும், முதலாளியின் வெறித்தனமான விசுவாசியாகவும் அதிரடி காட்டியிருக்கிறார் பரோட்டா சூரி.. யார் எதை கேட்டாலும் சொல்லாதவர் தனது முதலாளி கேட்டவுடன், எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேகமாக உண்மைகளை சொல்லும் காட்சிகளில் தியேட்டரே கலலக்கிறது. நாயகன் என்றாலும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரையும் பக்கபலமாக வைத்துக்கொண்டு முதல்பாதியை சாமர்த்தியமாக கடக்கும் சூரி, இரண்டாம் பாதியில் மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார்.

ஆதி ரோலில் கதைக்கு தேவையான, வழக்கமாக தன்னால் என்ன முடியுமோ அந்த ;சுந்ர்கரபாண்டியன்` நடிப்பை மிகச் சரியாக சசிக்குமார் வெளிப்படுத்த, நண்பனையும், விசுவாசம் காட்டும் சூரியையும் உபயோகித்துக் கொள்ளும் கர்ணா ரோலில் உன்னி முகுந்தன் பக்காவாக எடுபடுகிறார். பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு, கையறு நிலையில் வலம் வந்து, சரியான நேரத்தில் பேசும் ப்ராகடிகலான போலீசாக சமுத்திரக்கனி கச்சிதம். ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி என கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை சக நடிகர்கள் வழங்க, நெடுஞ்சாலை ஷிவதா இரண்டாம் பாதியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதையுடன் ஒன்ற வைக்கிறார்.

கேமராமேன் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா புழுதி நிறைந்த பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சிகளை ஆக்ரோஷமாக மட்டும் இன்றி இயல்பாகவும் படமாக்கி பார்வையாளர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. சூரியால் இது சாத்தியமா? என்ற கேள்வி பார்வையாளர்களிடம் சிறுதுளி கூட ஏற்படவில்லை, இதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் அவரை படம் முழுவதும் காட்டிய விதம் தான்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளை மக்கள் மனதில் நிற்க வைத்துவிடுகிறது.

பரோட்டா காமெடியன் சூரியை சூர்யா ஆக்க முடியும் என்று சொல்லவே எடுக்கப்பட்ட படம் என்பதுதான் உண்மை என்பதை ஒவ்வொரு ரசிகனுக்கும் உணர்த்தி விடுவதில் ஜெயித்து விட்டார்கள்

ஆனாலும் இந்த கருடன் – கணிப்பு ரொம்ப தப்பு

மார்க் 3/5

error: Content is protected !!