ஜல்லிக்கட்டில் மாட்டுக்கொம்புக்கு இரையாவது சரியா?
ஜல்லிக்கட்டிற்கு எதிராக எதையாவது சொன்னால் என் கதி என்னாகும் என்று தெரியும். ஆனாலும் சொல்லுவது என்றே துவங்குகிறேன்.வயிறு கிழிந்தால் மற்ற இடங்களிலில் தோலில் பிளவு ஏற்படுவது போல தைத்துக்கொள்ளலாம் என கனாக் காணாதீர்கள். பெரிடோனியல் கேவிட்டி என்னும் வயிற்றுக் குழியில் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடல் கிழியும் போது கசிந்து விடும். அதை அடுத்து இதுவரை அதனை சந்திக்காத உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் முதன் முதலாக குடல் பாக்டீரியாவினை சந்திக்கும்போது வெளிநோய்க்கிருமி என நினைத்து பெருங்குடல் சிறுகுடல் கணையம் கல்லீரம் சிறுநீரகம் இதயம் என எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குத்தாக்கி multiple organ failure ஐ நோக்கி இழுத்துப் போய் விடும். இச்செயல் அதிவேகமானது. இதனால் தான் குண்டடி பட்டவர்களை கூட காப்பற்றி விட இயல்கிறது மாடு முட்டி காயப்படுபவர்களை காப்பாற்றுவது கடினம்.
மாட்டினை பிடிக்கிறேன் என சாதித் தூண்டல் இல்லாமல், குலப்பெருமை இல்லாமல் சொல்லிவிட முடியுமா? அவைதானே பெரும்பாலான peer பிளஷராக உருவெடுக்கிறது. இது இரண்டாங்கெட்டான் வயதுள்ள இளைஞர்களை சாதிக்குள்ளே, படிப்பு பகுத்தறிவிலிருந்து தள்ளி வைக்கும் முயற்சி. உண்மையிலேயே இவை எதும் இல்லாமல் மாடோ புலியோ எது வேண்டுமானாலும் பிடிப்பேன் என்னுமளவு விளையாட்டின் மீதான காதல் ஒருவருக்கும் இல்லை. இதனை வீரம் கலாச்சாரம் பண்பாடு எதனோடு வேண்டுமானாலும் பொறுத்திக் கொள்ளலாம். தவறே இல்லை.
ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் வரும்போது மாற்றிக்கொள்ளவதில் மேற்கூறிய சமச்சாரங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை. உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, பால்யவிதவைகளை மொட்டையடித்து பாழ் செய்தது, பெண்களுக்கு கல்வி மறுத்தது, சகமனிதனை கீழ்சாதியினராக கருதி கோவிலுக்குள் விடமறுத்தது எல்லாமே இங்கு ஒருகாலத்தில் நியாயம், சரி, கலாச்சாரம் என நம்பப்பட்டவைதான். இன்று அவற்றினை களைந்திருக்கிறோம் தானே.
ஒரு அரசுமருத்துவரையாவது சொல்ல சொல்லுங்கள். ஜல்லிக்கட்டினால் ஆபத்திலை இல்லை என்று. வருடாவருடம் அவர்கள் கண்கொண்டு பார்க்கிறார்கள்.என் வீட்டுப்பணி உதவியாளர் புதுக்கோட்டைக்கார்ர். குடும்பமே மாடுபிடிக்கும் குடும்பம். கடந்த வருடம் அவரது உறவினர் 45 வயதில் இறந்தருக்கிறார். மூன்று பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு நிற்கின்றனர். அவர்களது இழப்பென்பது கலாச்சாரத்தினால் நிரப்ப இயலாத ஒன்று.
எல்லைகளின் பேரில் நாடுகள் நடத்தும் யுத்தங்களே மனிதகுலத்திற்கு எதிரானது என்று எத்தனை விலை கொடுத்து புரிந்து கொண்டுள்ளோம். யுத்தங்கள் வரலாற்றிலிருந்தும் மதம், கலாச்சாரம் என எதோ ஒரு பெயரில் நிகழ்ந்தவை தானே? அது தவறென அனைத்துத்தரப்பும் புரிந்து கொண்டு உயிர்களின் மதிப்பினை சொல்லி வரும் வேளையில் உயிரைக் கொண்டு போய் தானாக மாட்டுக்கொம்பில் ஏற்றுவதென்பது எத்தனை அபத்தமான செயலாக இருக்கும்?
எல்லாற்றினையும் விட ஒன்றினை ஒன்று அடக்குவதல்ல வீரம் என்பது. இயற்கையின் அனைத்து அலகுகளும் ஒன்றிணைந்து ஒத்திசைந்து வாழ்வது தான் உண்மையான வீரம், பண்பாடு. அது ஆண்,பெண், சகவிலங்குகள், சகநாடு, சக மனிதன், என அனைத்திற்கும் பொருந்தும்.