இந்தியத் தேர்தல் – ஒரு உலக சாதனை – தேர்தல் ஆணையம் பெருமிதம்!

இந்தியத் தேர்தல் – ஒரு உலக சாதனை – தேர்தல் ஆணையம் பெருமிதம்!

ந்தியப் பாராளுமன்றத்துக்கான 7 கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைந்து நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அது போல இந்தியா முழுக்க அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்க உள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தல் நடவடிக்கைகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் செய்தியாளர்ளை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்திய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் சொன்ன தகவல்களிதோ:

“மக்களவைத் தேர்தல் 2024 நடந்து முடிந்துள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன் மார்ச் 16ம் தேதி நாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்தோம். தேர்தல் முடிந்துள்ள நிலையில் மீண்டும் சந்திக்கிறோம். இடையில், தேர்தல் ஆணையத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகள் மூலம் நாங்கள் எங்கள் தரப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.தேர்தல் மாரத்தான் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது 97 கோடி வாக்காளர்கள், 1.50 கோடி தேர்தல் அதிகாரிகள், 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள், 68,763 கண்காணிப்புக் குழுக்கள், 4 லட்சம் வாகன பயன்பாடு என பிரம்மாண்டமான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை.“ என்றார். மேலும் ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தேர்தல் கமிஷனர்கள் அனைவரும் எழுந்து நின்றி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசும் போது “கடந்த 2019 மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 2019ல் 540 மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இம்முறை 39 மறுவாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த 39-ல், 25 தொலைதூரப் பகுதிகளான அருணாச்சலப் பிரதேசத்திலும் மணிப்பூரிலும் நடந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளது பாராட்டுக்குரியது.

பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதையும் இந்த தேர்தலில் நாங்கள் காணவில்லை. வன்முறைச் சம்பவங்கள் நடந்த ஒரு சில இடங்களிலும் நாங்கள் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினோம். தேர்தல் காலத்தில் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடியை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். 2019ல் கைப்பற்றப்பட்ட மதிப்பை விட இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். பணம், இலவசங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றின் விநியோகம் இம்முறை மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இவை தொடர்பான 495 புகார்களில் 90% க்கும் அதிகமான புகார்கள் மீது தீர்வு காணப்பட்டது. தவறான தகவல்கள் பரப்பப்படுவதையும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தி உள்ளது. இத்தகைய பகிர்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை சமூக ஊடகங்களில் பரவவிடாமல் தடுக்கும் பணிகளை எங்கள் நிபுணர்கள் குழு சிறப்பாக மேற்கொண்டது.

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரிதமாக செயல்படுவது, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, பதில்கூறும் பொறுப்பை ஏற்று செயல்படுவது என நாங்கள் செயல்பட்டுள்ளோம். அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நிகரற்ற நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது உண்மையில் ஒரு அதிசயம். உலகில் இதற்கு இணை எதுவும் இல்லை. 23 நாடுகளைச் சேர்ந்த 75 பார்வையாளர்களைக் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் அற்புதத்தால் பரவசமடைந்தனர்.” என்று கூறினார்.

error: Content is protected !!