இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு!

இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு!

நம் இந்தியக் கடற்படையில் இதுவரை ஆண் விமானிகள் மட்டுமே பணியாற்றி வந்தனர். அதே சமயம் 1991ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக நம் நாட்டின் முப்படைகளான ராணுவம், கடற்படை விமானப் படை ஆகியவற்றில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண் வீரர்களுக்கு இணையாகப் பெண் வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பெண்கள் விமானிகளாக உள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு, போர் விமானங்களிலும் ஆர்வமுள்ள இளம்பெண்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம் என இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா தெரிவித்திருந்தார். மேலும் போர் விமானங்களில் ஆண்களைப்போல் பெண்களும் பணிபுரிய ராணுவ அமைச்சகம் 2015 அக்டோபர் 24ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்த நிலையில் இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்வாகியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஸ்வரூப். இவர் இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக நேற்று முன்தினம் (நவம்பர் 22) தேர்வு செய்யப்பட்டார். மேலும், புதுடெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூவரும் கடற்படையில் ஆயுதம் மற்றும் தகவல் பிரிவில் ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எழில்மா கடற்கடை அகாடமியில் 20 மாதங்கள் பயிற்சி முடித்த பின்னர் இந்தப் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கடற்படை தளபதி சுனில் லம்பாவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்கள் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள்.

இவர்களில் சுபாங்கி சொரூப் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் கூறும்போது, “பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது” என்றார்.

கடற்படையின் செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-”சுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்கு வரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள். என்.ஏ.ஐ. கிளை கடற்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்ள 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள்.

சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுகளும் பயிற்சி பெறுவார்கள்.”என்று அவர் கூறினார்.

error: Content is protected !!