இங்க நான் தான் கிங்கு – விமர்சனம்!

இங்க நான் தான் கிங்கு – விமர்சனம்!

க்டர் சந்தானம் நிஜமாகவே ஒரு வீடு வாங்க கடன் கேட்டு ஃபைனான்சியரும், புரொட்யூஸருமான அன்புசெழியனிடம் போன போது ஒரு படத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து தங்கள் பேனரில் ஒரு படம் நடித்துக் கொடுக்கும்படி சொன்னதை அடுத்து உருவாகி இருக்கும் படமே இங்க நான் தான் கிங்கு படம்..!ஆனால் அதற்காக எழுச்சூர் அரவிந்தன் கையில் எடுத்த கதை அதர பழசாகவே இருக்கிறது. அதிலும், சிலபல கமர்ஷியல் டைரக்டர்களின் பாணியில் பல்வேற்ய் காட்சிகளும், வசனமும் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனமாக இருந்தாலும், இயக்குநர் ஆனந்த் நாராயண், அந்த பலவீனத்தை மறைத்து ரசிக்கும்படி முதல்பாதி படத்தை நகர்த்தி செல்கிறார். ஆனால், செகண்ட் ஆப்பில் காமெடியே இல்லாமல் இருப்பதாலும், தேவையில்லாத கதாபாத்திரங்கள் பலவற்றை திணித்து ரசிகர்களை வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதாலும் கொஞ்சம் சறுக்கிவிட்டது.

கதை என்னவென்றால் 90ஸ் கிட் சந்தானம் மேரேஜ் ஆகாமல் இருக்கிறார். சொந்த வீடு, நல்ல சம்பாத்தியம் இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்று சிலர் சொன்னதால் அதையும் சம்பாதிக்கிறார். ஆனால் பெண் கிடைத்த பாடில்லை. ஒரு சூழலில் பெண் பார்க்கும் புரோக்கர் மனோபாலா ஜமீன்தார் வீட்டு பெண் இருப்பதாக கூறி சந்தானத்தை அழைத்து செல்கிறார். ஜமீன்தார் பங்களாவில் முறைப்படி தடபுடலாக பெண் பார்க்கும் படலம் மற்றும் உடனடி திருமணமும் நடக்கிறது. அதன் பிறகுதான் தெரிகிறது . பெண்ணின் தந்தையான ஜமீந்தார் தம்பி ராமையா 10 கோடி ரூபாய் கடன் வாங்கி வெத்துவேட்டாக நிற்கிறார் என்ற விவரம். ஏற்கனவே வீடு வாங்குவதற்காக சந்தானம் 25 லட்சம் கடன் வாங்கி தவித்துக் கொண்டிருக்க தற்போது பத்து போடி ரூபாய் கடனுடன் மாமனார் குடும்பமும் கூட சேர்ந்து கொண்ட நிலையில் வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் ஒன்று சென்னைக்குள் நுழைகிறது. அவர்கள் மூலம் சந்தானத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்க கூடிய வாய்ப்பு கிடைக்க, அது என்ன?, 50 லட்ச ரூபாய் அவருக்கு கிடைத்ததா? என்பதை கொஞ்சம் காமெடியாகவும், பெரும்பாலும் கடியாகவும் சொல்லி இருப்பது தான் ‘இங்க நான் தான் கிங்கு’.

நாயகன் சந்தானம் வழக்கம் போல் தன் பணியை செவ்வனே செய்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். ஆனால் ஆனால் ‘டபரா மூஞ்சி’ போன்ற பிறரை புண்படுத்தும்படியான ‘உருவகேலி’யை காமெடி என்று செய்வதை விடவில்லை என்பது கோபத்தை வரவழைக்கிறது. நாயகி பிரியாலயா கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு அடுத்தபடியாக கைதட்டல் வாங்கும் தம்பி ராமையா, தனது அப்பாவித்தனமான காமெடிகளாலும் ‘அடப்பாவி’ தனமான தொந்தரவுகளாலும் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் டோஸாக இருந்தாலும், அது குறையாகத் தெரியவில்லை. பாலசரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த் ஆகியோருடன் சந்தானம் & கம்பெனி நடிகர்களான மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சிரிக்க வைப்பதாக, நினைத்து அதிகமாக கடுப்பேற்றுகிறார்கள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே அவரது இசையில் வெளியான பாடல்கள் சாயல்களில் இருந்தாலும் கேட்கும் ரகமாக இருக்கிறது.
கேமராமேன் ஓம் நாராயண் படம் முழுவதையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் மற்றும் பின்னணி படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, காமெடி படத்தையும் தாண்டி ஒளிப்பதிவை ரசிக்க வைக்கிறது.

ஆனாலும் முன்னரே சொன்னது போல் கடனுக்கு செய்யப்பட்ட படமென்பதால் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல், அவ்வப்போது காமெடி என்று நம்பிய சீன்களைக் கோர்த்து கெத்தான தலைப்புடன் வந்தாலும் உதட்டை பிதுக்க வைத்தே அனுப்புகிறது .

மார்க் 2.5/5

error: Content is protected !!