‘உலக பிளாஸ்டிக் ஒழிப்பு நாள்’!

‘உலக பிளாஸ்டிக் ஒழிப்பு நாள்’!

ம்மில் வியாபித்துக் கிடக்கும் பிளாஸ்டிக்கை, அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாதுதான். மருத்துவம், வணிகம், அறிவியல் உள்ளிட்டவற்றில் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதும் பிளாஸ்டிக்கே. எனினும் அதன் குறைந்த எடை, மலிவு விலை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களே அதன் தாராளப் பயன்பாட்டுக்குக் காரணமாகிஇயற்கையை அழித்து வருகிறது.குறிப்பாக பிளாஸ்டிக் மாசுபாடு நிலம் முதல் கடல்வாழ் உயிரினங்கள் வரையிலான இயற்கை சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏகப்பட்ட கடல்வாழ் உயிரினம் கொல்லப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உலக பிளாஸ்டிக் ஒழிப்பு நாள்’ இன்று(ஜூலை.3) அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் மூன்று முக்கிய சுற்றுச்சூழல் பேரிடர்களை பட்டியலிடுமாறு கேட்டால், நம்மில் பலர் புவி வெப்பமயமாதல், காடழிப்பு, காற்று மாசுபாடு என்போம். ஏன் முதல் ஐந்து இடங்களில் கூட பிளாஸ்டிக் மாசுபாடு இல்லை. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 11 கிலோ பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தித் தூக்கிப்போட்ட கழிவுகளில் பெரும்பாலானவை கடலில்தான் கலக்கின்றன. இப்போதெல்லாம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வலை விரித்தால், மீன்களைவிட பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகம் சிக்குகின்றன. பொதுவாக, வலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் கடலிலேயே கொட்டிவிடுவதுதான் மீனவர்களின் வழக்கம். அதைக் கரைக்குச் சுமந்துவரச் சொல்லி நாம் எதிர்பார்க்கவும் முடியாது.இந்தியாவில் ஒரு நாளைக்கு 35,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன என்று ஒன்றிய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார். உலகளவில் கணக்கிட்டால், ஆண்டுக்கு 30 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. இது மொத்தமுள்ள மக்களின் எடைக்கு சமமாகும்.பிளாஸ்டிக்கால் உணவுச் சங்கிலியில் ​​மாடுகள், ஆடுகள், கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமே உயிரிழக்கின்றன என்று நாம் கருதுகிறோம். உண்மை அதுமட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களிலும் லட்சக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?. ஒவ்வொரு வாரமும் சுமார் 2,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை நாம் உட்கொள்கிறோம். எளிதாக சொன்னால் பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கள், குவலைகள் உள்ளிட்டவை வாயிலாக உண்ணுகிறோம், சுவாசிக்கிறோம்.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை பிளாஸ்டிக் மாசுபாட்டை உலகளாவிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம் கடல்களில் கொட்டப்படும் குப்பைகள் பூதாகரமாக வளர்ந்து பெரும் தீவுகளாக உருமாற்றம் பெற்றுவிட்டன. நிலைமை எவ்வளவு மோசமானது என்றால், கடலில் கழிவுகளை உண்டு உயிர் வாழும் பிளாங்க்டன் உயிரினத்தின் மொத்த அளவை ஆறு மடங்கு அதிகமாக கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன.எளிதாக சிதையக்கூடிய உயிரினங்கள் போல் அல்லாமல், சிதைவதற்கு 300 ஆண்டுகள் ஆகக்கூடிய பிளாஸ்டிக்கை ஒவ்வொரு நாளும் நாம் உருவாக்கிறோம் பயன்படுத்துகிறோம். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அகற்றுவதற்கும் இன்று (ஜூலை.3) உலக பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் முக்கிய முடிவை எடுங்கள். உலகளவில் சிந்தியுங்கள், உள்ளூர் அளவில் செயல்படுங்கள். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக நிறைய பைகளை பயன்படுத்துங்கள். நாம் ஏற்கனவே துணி, சணல், கித்தான் உள்ளிட்டவை பயன்படுத்தியிருக்கிறோம். எளிதாக உங்களது பழைய ஜீன்ஸ், பருத்தி ஆடைகளில் கூட பைகளை உருவாக்கலாம். இதனை பேஷன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். தற்போது அதைதான் மக்கள் விரும்புகிறார்கள்.

உங்கள் ஊரில் யரேனும் இயற்கை முறையில் மக்கக்கூடிய பைகளை தயாரிக்கிறார் என்றால் அதனை வாங்கிப் பயன்படுத்துங்கள். உங்களது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். 2002ஆம் ஆண்டு முதல்முறையாக பங்களாதேஷ் பிளாஸ்டிக் பைகளை தடை செய்தது. இந்தியா 2006ஆம் ஆண்டில் தடை செய்தது. இன்று பெரும்பாலான மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையான விதித்துள்ளன. இருப்பினும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் தனிமனித முயற்சி என்பது முக்கியமான ஒன்று.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!