வெயில் வாட்டுது:பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!

வெயில் வாட்டுது:பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!

மிழ்நாடு அரசு உள்ளிட்ட எல்லா பள்ளிகளுக்கும் வழக்கமாக மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மே மாதம் தொடக்கத்திலிருந்து வாட்டி வதைத்த வெப்ப அலையால் பள்ளித் திறப்பு தள்ளிப்போகலாம் என சொல்லப் பட்டது.

ஆனால், தமிழகத்தில் மே இரண்டாம் வாரத்துக்குப் பின்னர் வானிலை கொஞ்சம் மாறியது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநிலத்தில் இதமான வெப்ப நிலை இரண்டு வார காலமாக நிலவியது. எனவே ஜூன் 6ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருவதால், பள்ளித்திறப்பை தள்ளிவைக்க வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களின் நலன்கருதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 10-ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று இன்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கடுமையான வெப்ப அலையால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!