நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்த கக்கன்!

நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்த கக்கன்!

ம் தமிழ்நாடு அரசியலில் தன்னலமற்ற சேவகன் மாண்புமிகு கக்கன். மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியில் பிறந்த வெள்ளை மனது கொண்ட கருப்பு சிங்கம் கக்கன் அவர்கள் இந்திய விடுதலை போரில் பங்கு கொண்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1957 முதல் 67 வரை பல்வேறு துறை சார்ந்த அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர் கக்கன். அதாவது சுதந்திர இந்தியாவில் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் அமைச்சரவையில் போலீஸ் துறை மட்டும் இல்லாது வேளாண்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், மதுவிலக்கு அமைச்சர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், சிறைத்துறை அமைச்சர், நீதித்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தவர் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையை உயிர் மூச்சாக கொண்டிருந்தார்.

அவரது காலத்தில் தான் வைகை அணை கட்டப்பட்டது.மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது…! அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார். காமராஜரை போலவே கக்கனும் பந்தபாசங்களை துறந்து தனது ஆட்சி அதிகாரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்தியது கிடையாது. அவர் மிகவும் நேர்மையானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை கூறலாம்.

பழிச்சொல்லுக்கு அஞ்சியவர்

ஒரு முறை தனது சகோதரர் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் பனி செய்ய விருப்பம் ஏற்பட்டு. அவரது உடல் தகுதியை உயர்த்திக்கொண்டு காவல்துறை தேர்வெழுதினார். விஸ்வநாதனுக்கு நன்றாக தெரியும் நமக்கு அண்ணன் கக்கன் சிபாரிசு செய்யமாட்டார் என்று. எனவே நன்றாக பயிற்சி பெற்று தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றிபெற்று. பணி நியமன ஆணையும் வாங்கிவிட்டார். அப்போது காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் காதுக்கு செய்தி எட்டியதும். இவ்விகாரம் வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் தன் உறவினர்களுக்கு லாபம் ஏற்பட தன் அதிகாரத்தை பயன்படுத்துவர் என்ரு நினைக்க வாய்ப்பிருப்பதால், உடனடியாக அவர் பணி நியமன ஆணையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

தங்கப்பேனா தகுதிக்கு மீறியது:

ஒருமுறை மலேசிய அமைச்சர், கக்கனை சந்தித்தார். கக்கன் வைத்திருந்த பழமையான பேனாவை பார்த்து விட்டு, தனது பேனாவை அவர் தந்தார். அந்த தங்கப்பேனாவை வாங்க மறுத்த கக்கன், அந்த தகுதி தனக்கு இல்லை என்றார். எனினும் விடாப்பிடியாக அவர் தர, வேறு வழியில்லாமல் பெற்றுக்கொண்ட கக்கன், ஊழியரை அழைத்து அதனை அலுவலக புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். ‘இது அரசுக்கு அல்ல; உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தான் தந்தேன்’ என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லை. ‘நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த தங்கப்பேனாவை தந்திருப்பீர்களா? மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள் பரிசுப்பொருட்களை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள கூடாது’ என்றார் கக்கன்.’உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல், அரசுப்பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்’ என அந்த அமைச்சர் கூற ‘நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று தங்கப்பேனாவை திருப்பி தந்து விட்டார் கக்கன்.கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பதற்கு இந்த சம்பவம் சிறு உதாரணம்.

மனைவி என்றாலும்:

ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கக்கன் வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அரசு ஊழியர் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்கி வருவதை கண்டார். ‘யார் வாங்கி வரச்சொன்னது’ என்று கக்கன் கேட்க, ‘அம்மா தான்(கக்கன் மனைவி) வாங்கி வரச்சொன்னார்’ என்று ஊழியர் கூற, மனைவியை அழைத்து அவர்கள் முன்னிலையில் சத்தமிட்டார். ‘இவர் யார் தெரியுமா? அரசு ஊழியர். உனக்கு ஊழியம் செய்பவர் அல்ல’ என்று திட்டி தீர்க்க கண்ணீர் மல்க நின்றார் கக்கன் மனைவி. ‘அதோ ரோட்டில் மண்ணெண்ணெய் கேன் உள்ளது. நீயே வீட்டிற்கு எடுத்துப்போ’ என்றார். அரசு ஊழியர்கள் அரசுப்பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்பது கக்கன் கருத்து.

அரசு உண்டியலில் அம்மா நகை :

கக்கனின் மூத்த மகன் பத்மநாபனின் மகள், தீயணைப்பு துறையின் முதல் பெண் அலுவலர், வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தன் தாத்தா பற்றி கூறுகிறார்.என் அம்மா கிருஷ்ணகுமாரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்பையாவின் மகள். எங்க அப்பாவிற்கு அம்மாவை திருமணம் செய்ய முடிவு செய்த காலகட்டம் அது… தாத்தா கக்கன், அம்மாவின் அப்பாவை அழைத்து, ”அமைச்சர் வீட்டில் சம்பந்தம் செய்ய போகிறோம் என கடன் பட்டு விடாதே, பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும்,” எனக் கூறி விட்டார்.ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர் தாத்தா. நேர்மை, ஒழுக்கம், அன்பை இறுதி வரை பேணியவர். அமைச்சரான பிறகும் கூட அவர் இரண்டு வேட்டிகள், இரண்டு சட்டைகள் மட்டுமே வைத்திருந்தார். மறுநாள் அரசு விழா என்றால், முதல் நாள் இரவு ஒரு சட்டை, வேட்டியை துவைத்து காய வைப்பார். அரசு பணம் வீணாக கூடாது என இறுதி வரை செயல்பட்டார். அவர் அரசு வீட்டில் இருந்தால், அவரது அறையில் மட்டும் தான் விளக்கு எரியும்.உலக போர் நடந்த போது, மறைந்த பிரதமர் நேரு அழைப்பின் பேரில் என் அம்மா உட்பட வீட்டுப் பெண்களுடைய வளையல், செயின் போன்ற நகைகளை எல்லாவற்றையும் தாத்தா வாங்கி அரசு உண்டியலில் போட்டு விட்டார்.1966ல் அவர் மாம்பலத்தில் அரசு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த போது, ஒரு முறை அரசு பஸ்சில் பயணித்துள்ளார். அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அவரிடம் போதிய காசு இல்லை. அவரை தெரிந்து கொண்ட கண்டக்டரும், ‘இருக்கிறதை கொடுங்க,’ எனக் கூறியுள்ளார். ஆனால் தாத்தா, தன்னிடமிருந்த காசை கொடுத்து விட்டு அதற்கான ஸ்டாப் வந்ததும் இறங்கி நடந்து சென்றுள்ளார். அவரது பேத்தி என்பது எனக்கு பெருமை.

அதிகார நடைமுறை தெரிந்தவர்:

பொதுப்பணித்துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் மதுரை வந்த அவர், தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். (அந்த விடுதியே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தான்.) ஆனால் அங்கு வேறு அதிகாரி யாரோ தங்கியிருந்தார்கள். இதையறிந்த கக்கனுடன் வந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது. தனியார் விடுதிக்குச் செல்லலாம் என்றார்கள் உடனிருந்த அதிகாரிகள். பயணியர்விடுதி கண்காணிப்பாளருக்கோ பதற்றம். “தங்கியிருப்பவரை எழுப்பி விடுகிறேன்” என்றார். ஆனால் கக்கன், “வேண்டாம். அதிகார நடைமுறைப்படி அமைச்சருக்கு தான் இங்கு முன்னுரிமை என்றாலும் இங்கு தங்கியிருப்பவரும் நம்மைப் போன்றவர் தான். தூக்கத்தில் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்” எனக் கூறிவிட்டு மதுரையிலுள்ள ஒரே அறை கொண்ட தனது தம்பி வீட்டிற்குச் சென்று இரவு தங்கினார்.

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார்.

ஒரு சூழலில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்…நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப் போனார்.

கக்கன் பிறந்த நாள் பகிர்வு

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!