கலைஞர் கருணாநிதி அறிவாலயம் விசிட்!

கலைஞர் கருணாநிதி அறிவாலயம் விசிட்!

திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டாக வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முரசொலி அலுவலகம் சென்றார். அங்கு பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் . அதன் பிறகு திடீரென்று இன்று (டிசம்பர் 15) இரவில் அறிவாலயம் விசிட் அடித்தார். ஸ்டாலின், ராசாத்தி அம்மாள், செல்வி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

தமிழக அரசியலின் தனிப் பெரும் சக்தியான திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை பாதிப்பு மற்றும் மூப்பு பிரச்னைகளால் சென்னை கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது முக்கிய நபர்கள் மட்டுமே அவரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கருணாநிதி அண்மையில் முரசொலி பவள விழாவையொட்டி முரசொலி அலுவலகத்தில் கண்காட்சியை காண அழைத்து வரப்பட்டார். பிரதமர் மோடி நலம் விசாரிக்க வந்தபோது, வீட்டு வாசல் வரை அழைத்து வரப்பட்டு, தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.

அதையடுத்து கலைஞர் கருணாநிதியை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று (15-ம் தேதி) இரவு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து வந்தனர். இன்று இரவு 9 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், மகள் செல்வி, முதன்மை செயலாளர் துரைமுருகன், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் அவருடன் வந்தனர்.

கருணாநிதி சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே அறிவாலயத்தில் இருந்தார். அறிவாலயத்தில் வழக்கமாக அவர் அமரும் அறைக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்தார். அங்கிருந்த வருகை பதிவேட்டில் அவரை கையெழுத்திட வைத்தனர். கலைஞர் டி.வி.யில் மட்டுமே அவரது வருகையை பதிவு செய்தனர். வேறு மீடியா அனுமதிக்கப்படவில்லை. கருணாநிதி ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அறிவாலயம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு தேதி நெருங்குகிற சூழலில், கருணாநிதியின் அறிவாலயம் வருகை திமுக தொண்டர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!