ஏழைகளின் எட்டாத உயரத்துக்கு போய்விட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்!

ஏழைகளின் எட்டாத உயரத்துக்கு போய்விட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்!

சிங்கார சென்னை 2.0 திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், நகருக்குள் பொழுதுபோக்கு மையங்களை கொண்டு வந்திருக்கின்றன. அப்படி ஊருக்குள் பொழுதுபோக்க வந்த ஒன்று கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது இந்த நகர்ப்புற சதுக்கம்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கத்திப்பாரா சந்திப்பில் பிரம்மாண்ட மேம்பாலம் 2008ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ் காலியாக உள்ள 5,38,000 சதுர அடி பரப்பளவில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்யப்பட்டது.ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய அனைத்து முக்கிய சாலைகளிலிருந்து அணுகக்கூடிய வகையில் இருக்கும் இந்த கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் நகர்ப்புற சதுக்கம் அமைந்திருக்கிறது. இதனாலேயே ஏராளமான மக்களுக்கு இளைப்பாறும் இடமாக அமைகிறது.

பேருந்து நிறுத்துமிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்ட மல்டி மாடல் போக்குவரத்து மையம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சதுக்கம் 4 மண்டலங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உட்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. வணிக வளாகத்தில் மொத்தம் 56 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையும் 200 முதல் 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இதில் 18 கடைகள் உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே நேரத்தில் 128 கார்கள், 340 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்வையாளர்களுக்கு போதிய அளவு வாகன நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டு  இருந்தது.

நகர்ப்புற சதுக்கத்தின் முழுப் பகுதியும் சூரியசக்தி விளக்குகள், நிலப்பரப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்கிருக்கும் பொருட்கள் எதையும் சாமானியார்களால் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகின்றன. குழந்தைகள் விளையாடும் பகுதியில், மிகெப்பெரிய பலூன் போன்ற மேலே ஏறி, குதித்தபடி சறுக்கும் அமைப்பு ஒன்று இருக்கும். முதலில், 50 ரூபாய் கட்டணம் என்றார்கள். குழந்தைகள் ரயிலில் சுற்ற 50 ரூபாய் என்றார்கள்; தற்போது 700 ரூபாய் குறைந்தபட்சம் கொடுத்து ஒரு கார்டு வாங்கினால்தான், அதில் விளையாட முடியும் என்கிறார்கள். அங்கு 200- 300 ரூபாயுடன் போனால்கூட பணக்காரர்கள் விளையாடும் எந்த ஒன்றிலும் ஏழைக் குழந்தைகளால் ஏற முடியாது.

அங்கு விற்கப்படும் உணவுகளின் விலையும் மிகமிக அதிகம். இருப்பதிலேயே குறைந்தபட்ச விலை கொண்ட ஐஸ்கிரீம் 50 ரூபாயாம். இவ்வளவு காசு கொடுத்து ஒரு குடும்பம், ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டுமென்றால், ஒரு நாள் சம்பளமே அங்கு காலியாகிவிடும். சுற்றி சுற்றி உயர்ரக உணவகங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை போல.

போதாக்குறைக்கு, பைக்கை பார்க் செய்யவும் இப்போது கட்டணம் வசூலிக்கிறார்கள். காசே இல்லாதவன் அங்க போகவே கூடாது என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள் போல. அங்கிருக்கும் கடைகள் எல்லாமே அப்பர் மிடில் க்ளாசுகளுக்கானவையாகவே இருக்கின்றன. இதைத்தானே மால்களும் வழங்கி வருகின்றன. தனியார் மால்கள் செய்யும் ஒரு விஷயத்துக்கு, அரசே நிதி ஒதுக்கி செலவு செய்து அந்த இடத்தை தயார் செய்து கொடுப்பதெல்லாம் எதற்காக?

முன்பெல்லாம் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மெரினா என்பார்கள். எப்போதும் ஏழைகள் மெரினாவுக்கு மட்டுமே செல்ல வேண்டுமா என்ன?

ரகுராமன்

error: Content is protected !!