கோலிக்கும் ஒரு நாள் வாய்க்கும்!

கோலிக்கும் ஒரு நாள் வாய்க்கும்!

என்ன செய்தாலும் சில தருணங்கள் முற்றிலும் எதிரானதாகவேதான் அமையும். தானே தன்னை அதீதமாக சந்தேகிக்க வேண்டிய நிர்பந்தம் ஒருவருக்கு வாய்க்கும்போது, ஏதாவது செய்தே ஆகவேண்டும் என என்ன செய்தாலும் அது அவர்களுக்கு எதிராகவே முடியும்.சரி செய்யவே முடியாதா என்றால், இப்போது ஆம் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம், சரி செய்திருக்க வேண்டிய எளிய தருணத்தை எதன் நிமித்தமாகவோ ஏற்க மறுத்து அல்லது தவறவிட்டிருப்போம். அப்போது பொருத்தமான காரணங்களும் இருந்திருக்கலாம்.

எல்லோருக்கும் தெரிந்ததுதான். கோலி மூன்றாவது நிலையில் இறங்கியிருந்திருந்தால் இன்றைய நிலை வேறாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் அணி வைத்திருந்த திட்டம் மற்றும் தொடரும் அணியின் வெற்றிகள் ஜெய்ஸ்வாலை இறக்கவும், துபே அல்லது வேறு ஒருவரை கழட்டி விடவும் தடுத்துக் கொண்டேயிருக்கலாம். வாழ்ந்து கெட்ட குடும்பங்கள், அடுத்தடுத்து எது செய்ய முற்பட்டாலும் அது சரியானதாக அமையாது என்பதுபோல், உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கும் சந்தேகம், எல்லோரின் நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் விமர்சன அழுத்தங்கள் ஆகியவற்றில் சிக்கி உழலும் சூழலில் விராட் கோலி, எப்போதும் இருந்த விராட் கோலியாக இருக்க முடியவில்லை.

சூர்யக்குமார், ஹர்திக், ரிஷப் பந்த் மற்றும் பந்து வீச்சாளர்கள் மாறி மாறி காப்பாற்றுவது அணியை மட்டுமல்ல, விராட் கோலியையும்தான். ஒவ்வொரு போட்டியிலும் யாரோ ஒருவர் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறுவார்கள். இந்த உலகக்கோப்பையில் இதுவரையிலான ஏழு போட்டிகளில் ஐந்தில் அது விராட் கோலியாக இருப்பது உண்மையிலே சாபம்தான்.

எல்லோருடைய கொடுங்காலத்திலும் ஏதோவொரு கரம் காப்பாற்றியிருப்பதை பலரும் உணர்ந்திருப்போம். இப்போது கோலிக்கு அது கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் ட்ராவிட் ஆகியோரின் கரங்கள். 2023ல் ஒட்டுமொத்த மைதானத்தை மௌனிக்க வைத்த கம்மின்ஸை சிக்ஸருடன் வரவேற்றது, 2022ல் விக்கட் இழப்பின்றி வென்ற இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது என கேப்டனாகவும், ஹிட்டராகவும் ரோகித்துக்கு இந்த நாட்கள் வாய்த்தது போல், கோலிக்கும் ஒரு நாள் வாய்க்கும்.

ஏனெனில், ‘எல்லோருக்கும் ஒரு நாள் வாய்க்கும்’ என்பது ஆழமான நம்பிக்கை மட்டுமல்ல வரலாறும்கூட…!

~ ஈரோடு கதிர்

error: Content is protected !!