கங்கணாவை கலாய்த்தும், கேலி செய்தும் பல பதிவுகள்!

கங்கணாவை கலாய்த்தும், கேலி செய்தும் பல பதிவுகள்!

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும் எம்பியுமான கங்கணா ரணாவத் சிஎஸ்ஐஎஃப்பைச் சேர்ந்த ஒரு பெண் காவலரால் தாக்கப்பட்டிருக்கிறார். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கணா தெரிவித்திருந்த ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இந்தக் காவலரை கோபமூட்டி இருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்தப் பெண் காவலரின் தாயாரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் போல. அதனால் கங்கணாவின் கருத்துகள் இவரை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி இருக்கலாம். அதுதான் இந்தத் தாக்குதலுக்கு உந்துதலாக இருந்திருக்கிறது என்பது இப்போதைக்கு நமக்கு இருக்கும் புரிதல்.

இந்த சம்பவத்தை வைத்து பாஜக விமர்சகர்களில் பலர் கங்கணாவை கலாய்த்தும், கேலி செய்தும் பல பதிவுகள் பார்க்கிறேன். பலர் அந்தக் காவலரை வாழ்த்தி, அவர் வீரத்தைப் (!) பாராட்டி வருகின்றனர். இவர்கள் எல்லாம் என்ன யோசிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒருவர் கருத்து என்னை காயப்படுத்தினால் அவர் மீது நான் வன்முறையை பிரயோகிக்கலாமா? இந்தி பெல்ட் மாநில மக்களை ‘வடக்கன்கள்’, ‘பீடா வாயன்கள்’, ‘பானி பூரி’ என்றெல்லாம் கிண்டலும் கேலியும் செய்தவர்கள், செய்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அதனால் கோபம் கொண்டு சென்னை ஏர்போர்ட்டில் பணி புரியும் செக்யூரிட்டி காவலர் ஒருவர் நம்மில் யாரையாவது அறைந்தால், அதை ஏற்றுக் கொள்வீர்களா?

போலவே ‘சங்கி’, ‘மாட்டு மூளை’, ‘கோமியக் குடிக்கி’ என்பதெல்லாம் இந்துத்துவர்களை நோக்கி நாம் சகஜமாக வீசி எறியும் அவதூறுகள். இதில் கோபம் கொண்டு நாளைக்கு இந்துத்துவ சார்புடைய ஒரு காவலர் ஒரு தமிழ் எம்பியை தில்லி ஏர்போர்ட்டில் தாக்கினால் ‘நல்லா வேணும்பா!’ என்று ஆமோதிப்போமா? கங்கணா கண்டனத்துக்குரிய லெவலில் தொடர்ந்து பேசி வருபவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் உதிர்ப்பவை பெரும்பாலும் ஆட்சேபத்துக்குரிய அவலக் கருத்துகளே. ஆனால் அது எதுவுமே அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை நியாயப்படுத்தாது. முக்கியமாக பொதுமக்கள் தாங்களே சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வது என்பது anarchy எனப்படும் கலக சமூகமாகவே நம்மைக் கட்டமைப்பதில் கொண்டு போய் முடியும்.

எனவே, கங்கணாவைத் தாக்கிய காவலருக்கு என் சேதி: மன்னிக்கவும் மேடம். உங்கள் வருத்தம் புரிந்தாலும் நீங்கள் செய்தது பெருந்தவறு. உங்கள் எதிர்வினை கங்கணா செய்ததை விடப் பற்பல மடங்கு மோசமானது. கண்டனத்துக்குரியது. கங்கணாவுக்கு என் சேதி: உங்கள் அவலக் கருத்துகள் கண்ணுக்குத் தெரியாத மக்களை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தில் இருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள். முன்பாவது கூடப் பரவாயில்லை. இப்போது நீங்கள் ஒரு எம்பி. கண்ணியத்துக்குரிய பதவியை ஏற்றிருப்பவர். இனிமேலாவது உங்கள் கருத்துகளை பற்பல முறை யோசித்து கண்ணியமாக வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

Related Posts

error: Content is protected !!