மோடி அமைச்சரவையில் மாற்றம்!

மோடி அமைச்சரவையில் மாற்றம்!

பாராளுமன்றத் தேர்தலை 2019-ல் நடத்துவதற்கு பதிலாக அடுத்த ஆண்டின் இறுதியிலேயே நடத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கேற்ற வகையில் மத்திய அமைச்சரவையை மாற்றி சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அனுப்ப பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெற உள்ளது. இது தொடர்பான பட்டியல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே உள்ளிட்டோர் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ளனர். ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே, சஞ்சீவ் கல்யாண் ஆகியோர் கட்சிப் பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். 75 வயதாகும் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவும் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. கல்ராஜ் மிஸ்ரா ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

உடல்நிலையை காரணம் காட்டி உமாபாரதியும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளாராம். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது. அவருக்கு வேறு ஒரு துறை ஒதுக்கப்படலாம். வர்த்தகத்துறை இணை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனும் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது ராஜினாமா ஏற்கப்பட்டால் தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் எனவும் டெல்லியில் பேசப்படுகிறது. தொடர் ரயில் விபத்துகளால் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஏற்கனவே பிரதமர் மோடியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் சுரேஷ் பிரபுவை பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின் ரயில்வே துறை அமைச்சராக நிதின் கட்காரி நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சுரேஷ் பிரபுவுக்கு சுற்றுச் சூழல் துறை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வசம் பாதுகாப்பு துறையும் உள்ளது. இருதுறைகளையும் தாம் நீண்டநாள் வகிக்கப் போவது இல்லை என்று கூறி வருகிறார் அருண்ஜெட்லி. ஆகையால் பாதுகாப்புத் துறைக்கு புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதும் உறுதியாகி உள்ளது. ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் இணைந்த ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருக்கிறது. லோக்சபா தேர்தலை மனதில் வைத்தே பீகார், உபி உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது.

error: Content is protected !!