நெடும்பாறை-அம்பாநாடு-பிரியா எஸ்டேட் ஒரு நாள் பயணம்!

நெடும்பாறை-அம்பாநாடு-பிரியா எஸ்டேட் ஒரு நாள் பயணம்!

ந்த ஆண்டு முழுவதும் என் வாழ்வு பயணங்களால் நிரம்பி இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டும் இந்த ஆண்டின் முதல் பாதியில் பல சவால்களை கொடுத்தாலும், இது போன்ற சில பயணங்கள் நண்பர்களால் உருவாக்கப்பட்டு அவர்களால் வழிநடத்தப்பட்டு அவர்களே உடனிருந்து மகிழச் செய்கிறார்கள். இந்த பயணங்களில் இடத்தை சொல்வதும், அதற்குத் திட்டமிட்டு தேவையான தொடர்புகளை கொடுத்து உடன் செல்வதும் மட்டுமே என் பணி. கடந்த வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டமே ஆனித் தேரோட்ட கொண்டாட்டத்தில் இருந்த போது, தேர் இழுக்க தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே தென்காசி எல்லையை கடந்து சென்று கொண்டிருந்தோம். மிகக் கடுமையான சவால்கள் நிறைந்த ஒரு பாதை, பயணம் தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு திடீரென்ற உடலளவிலும் வாயு கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி என்று பல்வேறு சிக்கல்கள் அதை தாண்டி டேக் என்று சொல்லும் போது வீடியோ முன்பு உற்சாகமாய் பேசினேன் கட் சொல்லவும் சுருங்கி ஜீப்பில் கிடந்தேன்.

உங்கள் வாழ்க்கையில் உள் அமைதியைக் கண்டறிய மலைகள் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையின் அழகை மீண்டும் கண்டறியவும், இயற்கையானது தனக்குள்ளேயே வாழ்க்கையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதையும் அவை உங்களுக்கு உதவும். வரலாறு முழுவதும், மக்கள் அமைதியைக் காண மலைகளுக்குத் திரும்பினர். மெதுவாகச் செல்வதன் முக்கியத்துவத்தை மலைகள் உங்களுக்குக் கற்பிக்கின்றது என்கிறார்கள் மனோவியல் ஆய்வாளர்கள். வெவ்வேறு ஒலிகள், வாசனைகள் மற்றும் சத்தங்களை தொடர்ந்து சந்திப்பது நகர ஒலிகளை விட மூளையை வேறுபடுத்துகிறது, மேலும் இவை அனைத்தும் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. நீங்கள் மனச்சோர்வடைந்தால் அல்லது வாழ்க்கையைப் பற்றி மிகவும் குறைவாக உணர்ந்தால், ஏறுங்கள். ஒரு மலையில் ஏறுவது உடல் ஆபத்து பற்றிய பயத்துடன் நெருங்கிய தொடர்பில் வரும்போது உங்கள் வாழ்க்கையின் மதிப்பைக் காண உதவும். உங்கள் அச்சங்களை எதிர்கொள்வது உங்கள் நேரம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதைப் பார்க்க உதவும் இதெல்லாம் பல வருடமாக மலை ஏறுபவர்கள் சொன்ன தகவல்கள்.

எப்பொழுதும் இதைப் பற்றி எல்லாம் அதிகம் தெரிந்து கொண்டு ஆசையோடு காத்திருக்கிறேன். இந்த முறை 12 மணி நேரம் மலை, மேகம், மழை, அருவி, காடு, தோட்டம், சுத்தமான காற்று கரடி, காட்டு மாடு இறுதியாக பலமுறை ட்ரெக்கிங் அழைத்து வந்த போது காத்திருந்து பலருக்கும் கிடைக்காத காட்சி காட்டு யானை ஒற்றை கொம்பனை அருகில் பார்க்கும் வாய்ப்பு. நிறைவான மகிழ்ச்சியோடு அடுத்தடுத்த சுற்றுலா திட்டங்களோடு ஊர் திரும்பினோம். பயணத்தில் மறக்க முடியாதது. கீழிருந்து மழைக்கு பிழைக்கச் சென்ற ஐம்பது அறுபது ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்க கூடிய மக்களின் மனோநிலை அவர்கள் காட்டிய அன்பு அவர்களின் கவனிப்பு உடல்நிலை சரியில்லை என்றதும் அவர்கள் தங்கள் வீட்டில் ஒரு நபரைப் போல தாங்கு தாங்கு என்று தாங்கி என்னை கவனித்தார்கள்.

இந்த முறை நான் மட்டும் ஏற்கனவே சென்றிருந்த மினி மூணார் என்று அழைக்கப்படும் அம்பநாடு எஸ்டேட் பகுதிக்கு நாங்கள் சென்று இருந்தோம்.வலிமைமிக்க மலைகள் மற்றும் புல்வெளிகள், மின்னும் நீரோடைகள், பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகள் மற்றும் குறைந்த தொங்கும் மேகங்களின் மூச்சடைக்கக்கூடிய பரந்த காட்சிகள் என என்றென்றும் நினைவில் வைத்திருக்க கூடிய இடம். கொல்லம் மாவட்டத்தின் புனலூர் தாலுக்காவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அச்சன்கோவில் வனப்பகுதியில் மறைந்திருக்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக உள்ள படம். கொல்லத்தின் ஒரே தேயிலை தோட்டம் உள்ள இடம் இதுதான். தோட்டம் இதுவாகும். பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய இடம். இன்றைக்கும் அவர்கள் பயன்படுத்திய கோட்டைகள் பயன்படுத்தப்படாமல் ஆனால் சிதிலமடையாமல் இருக்கும்.

அம்பாநாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் எது தெரியுமா?தனிமை. தனிமை தான் எனக்கு பிடிக்காத விஷயம் எப்போதும் மனிதர்களோடு இருப்பேன். ஆனால் இந்த ஊர் வந்த பிறகு நீண்ட நேரம் தனியாக இருக்கவே தோன்றியது. அவ்வளவு அழகு நிறைவு. இங்கே மேலே மலை உச்சியில் உள்ள பிரியா எஸ்டேட்டில் தான் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் மாஞ்சோலை பிரச்சனைக்கு ஒரு முன்மாதிரி இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எஸ்டேட் முதலாளி ஊழியர்களுக்கு எதுவும் கொடுக்காமல் ஓடி சென்ற போது இவர்கள் போராடி வழக்கு தொடர்ந்து மொத்தமுள்ள 456 ஏக்கர் இடத்தில் 250 ஏக்கரை வனத்துறை எடுத்துக் கொள்ள 150 ஏக்கரை முதலாளி வழக்கு தொடர்ந்து எடுக்க போராடிக் கொண்டிருக்க மீதி 50 ஏக்கர் எங்களுக்கு வேண்டும் என்று போராடி 30 குடும்பம் மலையில் இன்னும் இருந்து விவசாயம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மிகச் சாதாரணமாய் புலி யானை என்று விலங்குகள் வந்து செல்லும் இந்த ஊரில் இதுவரை யாரையும் எந்த விலங்கும் தாக்கியது இல்லை என்ற செய்தி வியப்புக்குரியது. இங்கே சந்தித்த நண்பர் ஒருவர் அவரின் வீட்டு வளர்ப்பு நாயை கவ்வி தூக்கி சென்ற புலியை கல்லால் புலி விரட்டிய கதையை சொன்ன போது நிச்சயம் அது கற்பனையாக தெரியவில்லை நிஜத்திற்கு நெருக்கமாக இருந்தது. சாட்சியாய் அந்த ராஜபாளையம் நாய் கழுத்தில் புலி கடித்த காயத்தோடு இன்றும் உலாவி வருகிறது. விரைவில் ஒருநாள் அங்கு வந்து புலியை பார்ப்பேன் என்று கூறிவந்துள்ளேன். ஆம் புலியை அங்கு பார்க்கும் வரை பிரியா எஸ்டேட் இருக்கும் அம்பாநாடு மலைகளுக்கு நான் சென்று கொண்டே தான் இருக்கப் போகிறேன்.

வெங்கட்ராமன் முருகன்

error: Content is protected !!