இனி இந்தியாவின் எதிர்காலம்?

இனி இந்தியாவின் எதிர்காலம்?

தற்கு மேல் முடிவுகளில் பெரிய அளவுக்கு மாற்றம் வர வாய்ப்பில்லை. மீண்டும் என்டிஏ ஆட்சிதான்.!ஆனால் அப் கீ பார் 400 பார் எல்லாம் போய் 300க்கே ததிங்கணத்தோம் போடுகிறது. ராம் மந்திர் என்று கூவிப் பார்த்தும், ராமர் கோவில் இருக்கும் அயோத்தியிலேயே ஆட்டம் கண்டு விட்டது. அமேதியில் சிலிண்டர் ராணி தோல்வியில் கூடுதல் சந்தோஷம். குறிப்பாக, ஜல்சா கட்சி தனி மெஜாரிட்டியில் கூட வரவில்லை. எனவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தயவில்தான் ஆட்சி நடத்த வேண்டும். இனி அந்த அகங்காரம் திமிர் எல்லாம் அடங்கி விடும். (திமிர் அடங்கிய நிர்மலா சீதாராமனின் முகத்தைப் பார்க்க ஆவல்.)

கிட்டத்தட்ட வாஜ்பாயி தலைமையிலான ஆட்சி நடந்ததே அதே நிலைதான். வாஜ்பாயி கால ஆட்சி குறித்து இங்கே எத்தனை பேருக்குத் தெரியும், நினைவிருக்கும் என்று தெரியாது. குறிப்பாக 1990களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்குத் தெரிந்திருக்காது. (அந்தக் காலத்தில் நான் தில்லியில் ஊடகத் துறையில்தான் இருந்தேன்.). வாஜ்பாயியைப் பற்றி the right man in the wrong party என்பா்கள். அது எவ்வளவுக்கு சரி அல்லது தவறு என்றாலும், வாஜ்பாயி இன்றைய ஜல்சா கட்சித் தலைவர்களுடன் ஒப்பிட்டால் எவ்வளவோ மேலானவர்தான். மனசாட்சி உடையவர். அவர் காலத்திலேயே காவிமய வேலைகள் நடக்கத் தொடங்கின. முரளி மனோகர் ஜோஷி முதன்மையானவராக இருந்தார். என்றாலும்கூட கடந்த பத்தாண்டுகளில் நடந்ததுபோன்ற திமிர்த்தனமான நடவடிக்கைகள் அப்போது இருக்கவில்லை.அதற்கான காரணங்களில் முக்கியமானது – என்டிஏவுக்கு மெஜாரிட்டி இருக்கவில்லை.

வாஜ்பாயி அமைத்த ஆட்சியில் திமுகவும் என்டிஏவுக்குள் இருந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் என்டிஏவுக்கு வெளியே இருந்து ஆதரவளித்தது. நாயுடுவின் அந்த யுக்தி குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் ஆட்சியில் பொறுப்பேற்காமல், ஆட்சியை ஆட்டி வைக்க முடிந்தது. தனது மாநிலத்துக்கென சிறப்பு பேக்கேஜ்கள் பெற்றுக் கொண்டார். சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் பெற்றார். மக்களவைத் தலைவர் பதவி தன்னுடைய கட்சிக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டார். சொல்லப்போனால், ஹைதராபாத்தை ஐடி மையமாக ஆக்கியவர் சந்திரபாபு நாயுடுதான். (அதே நாயுடு அடுத்த தேர்தலில் தோற்றார் என்பது வேறு விஷயம்.) . கவனிக்க வேண்டிய விஷயம், சந்திரபாபு நாயுடு தனக்கான காரியங்களை சாதித்துக் கொள்வதில் திறமையானவர். பாஜக கொஞ்சம் இப்படி அப்படி அசையப்பார்த்தாலும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக மிரட்ட முடியும். (வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்துதான் மீண்டும் தேர்தல் நடந்து பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்தது.) நிதீஷையும் சொல்லவே வேண்டாம். இதுவரை நான்கைந்து முறை அணி மாறியவர். சந்திரபாபு நாயுடு.

ஆக மொத்தம், அடுத்து வரப்போவது ஜல்சா கட்சி அரசல்ல. என்டிஏ அரசு. ஆதரவுக் கட்சிகளின் இழுப்புக்கு ஏற்ப ஆட வேண்டிய கூட்டணி அரசு. இனி ஒரே நாடு ஒரே போடு என்கிற கோஷங்கள் எல்லாம் செல்லாது. குறிப்பாக வடை மாஸ்டர் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறிக்கொண்டு திரிய முடியாது. இதெல்லாம் ஜல்சா பார்ட்டிக்குத் தெரியாதது அல்ல. எனவே, சந்தான பாரதி வழக்கம் போல கட்சிகளை உடைத்து ஆட்களை இழுக்கும் வேலையை ஆரம்பிக்க நிச்சயமாக முயற்சி செய்வார். இதற்கு முன்பு வரை சந்தான பாரதியின் வேலைகள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், வெல்லப்பட முடியாதது அல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டதால், இனி அந்த முயற்சிகள் அவ்ளவு எளிதாக வெற்றி பெறாது. எதிர்க்கட்சிகள் இதை சமாளிப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது. சொல்லப்போனால், இத்தனை காலம் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை இந்தியா கூட்டணியினர் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. (தார்மீகக் கோபம் காரணமாக வந்த ஆசை.)

எதிர்க்கட்சிகளின் இந்த வெற்றிக்கான பெருமை து-ரு-வ் ரத்-தி-க்கும் நிச்சயம் சேரும். தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளுக்குள் ஓர் அச்சம் இருந்து கொண்டே இருந்தது. அது கோவையைப் பற்றியது. பயிரை மேய வந்த ஆட்டை விரட்டிய கோவை மக்களுக்கு சிறப்புப் பாராட்டு. அடுத்தது, வெகுநேரத்துக்கு உறுத்திக் கொண்டே இருந்த தருமபுரி. கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் பன்னீரின் மகன் வென்று 39க்கு 39 என்று வாங்க முடியாமல் போனது உறுத்திக் கொண்டே இருந்தது. (கடைசியில் அவன் தகுதியிழந்தான் என்பது வேறு விஷயம்.) அதேபோல இப்போது தருமபுரியும் செய்து விடுமோ என்ற அச்சம் தீர்ந்தது. நாற்பதும் நமதே என்று காட்டி, எங்கே என்ன ஆனாலும் தமிழ்நாட்டில் தாமரை கூந்தலில் கூட மலராது என்று காட்டிய என் இனிய தமிழ் மக்களே… 🌹 🙏

ஷாஜஹான்

error: Content is protected !!