ஒடிசா ரயில் விபத்து; 300 பயணிகள் பலி? 1000 பேர் படுகாயம்!

ஒடிசா ரயில் விபத்து; 300 பயணிகள் பலி? 1000 பேர் படுகாயம்!

முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பாலேஸ்வர் அருகே சாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இந்த ரயிலின் சுமார் 12 பெட்டிகள் சரிந்து, அடுத்திருந்த ரயில் தடத்தில் விழுந்தன. சற்று நேரத்தில், விரைந்து வந்த யஷ்வந்த்பூர் – ஹௌரா ரயில், கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதில் இரண்டாவது விபத்து நேரிட்டது. இதில் ஹௌரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்தில் இணைந்திருக்கிறது.

இந்த விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 350 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது. கவிழ்ந்த பெட்டிகளின் அடியே மேலும் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிக்கான ரயில்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே உறுதி செய்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோருக்கு ரூ.10 லட்சம், படுகாயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம், என நிவாரணம் குறித்த அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

சேதம் அதிகமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் பாலசோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதால் மீட்பு, நிவாரணப் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. விபத்து காரணமாக அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா முதல்வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் என்பதால் தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் 850 பேர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் தமிழர்கள் அதிகம் பாதிப்படையவும் வாய்ப்புள்ள அச்சம் நிலவி வருகிறது.

மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஒடிசா செல்கின்றனர். அவர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூவரும் செல்ல உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக ரயில்வே துறை அறிவித்திருக்கும் அவசர உதவி எண்கள் விபரம்: ஹௌரா 033-26382217, காரக்பூர் 8972073925, பாலசோர் 8249591559 மற்றும் சென்னை 044 – 25330952.

தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் செயல்படும் 24 மணி நேர உதவி மையத்தை, 044-25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!