நம்ம மேற்குத் தொடர்ச்சி மலையை கவனிப்பார் யாருமில்லையா?

நம்ம மேற்குத் தொடர்ச்சி மலையை கவனிப்பார் யாருமில்லையா?

உலகின் பிரமாண்டம் மற்றும் அழகு என்று வர்ணிக்கப்படும் இமயமலையை விட வயதில் மூத்தது மேற்கு தொடர்ச்சி மலை., மொத்தம் ஆறு மாநிலங்களை கடந்து, 1600 கி.மீ. தூரம் நீண்டு பல அதிசயங்களை, பொக்கிஷங்களை தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தேக்கு உள்பட பல அரிய மரங்கள், ஏராளமான உயிரினங்கள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்கள், சபரிமலை, பழநி கோயில் போன்ற இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேற்கு தொடர்ச்சி மலை.

tn mount aug 8

மலையில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மிளா போன்ற மிருகங்கள், மான், சோலை மந்தி, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட 139 வகையான பாலூட்டி இனங்கள், 508 வகை பறவைகள், நிலத்திலும் நீரிலும் வாழும் 176 வகை உயிரினங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் 119 வகை பட்டர் பிளை, பறக்கும் அணில், பறவை கீரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும். இந்த மலையில் தேக்கு மரக்காடுகள் அதிகம் உள்ளன. தேக்கடி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் பூக்கும் மலர்கள், மலையின் அழகை ரம்மியமாக்குகிறது. தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. இதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி அன்னிய செலாவணியை அள்ளித் தருகின்றன.

இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலை வனங்களைப் பாதுகாப்பது, மரங்களை வெட்டுவோரைக் கைது செய்வது, விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்து அவர்களைக் கைது செய்வது, விலங்கினங்களுக்கு உணவுக்காகத் தேவைப்படும் செடிகளை வளர்ப்பது, தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது போன்ற பணிகளை வனச் சரகர் மேற்பார்வையில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் 10 வனச் சரக அலுவலர் பணியிடங்களுக்கு 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் 26 வனச் சரகர் அலுவலர் பணியிடங்களில் 4 பேர் மட்டுமே உள்ளனர். இதே நிலை தான் மதுரை, திருநெல்வேலி உள்பட தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வனச் சரகர் காலிப் பணியிடங்களின் அளவு 70 சதவீதமாக உள்ளது. பணியில் இருக்கக் கூடிய 30 சதவீத வனச் சரக அலுவலர்களில் பெரும்பாலானோர் 55 வயதைக் கடந்த நிலையில் உள்ளனர். இதனால், காடுகளில் ரோந்து சுற்றி வருதல், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்தல், விலங்கினங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுத்தல் ஆகிய பணிகளைச் சரிவர மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டு வனத் துறை சீருடைப் பணியாளர் மூலம் தேர்வு செய்யப்பட்ட வனவர் 120 பேருக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. வனத் துறை அலுவலர்கள் இல்லாததால், மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத் துறை அலுவலக வட்டாரங்கள், “மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தில் வனச் சரக அலுவலர், வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர் காலிப் பணியிடங்களின் அளவு 70 சதவீதமாக உள்ளது. பணியில் உள்ள 30 சதவீத அலுவலர்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் முழுமையாக ரோந்துப் பணியில் ஈடுபட முடியாது. இதனால், சிலர் அரிய வகை மரங்களை வெட்டிச் செல்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் மான்கள், காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆகவே, வனத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

error: Content is protected !!