கருத்துக் கணிப்பைக் காண்பித்து களவானித்தனம்- ராகுல் குற்றச்சாட்டு!

கருத்துக் கணிப்பைக் காண்பித்து களவானித்தனம்- ராகுல் குற்றச்சாட்டு!

டந்து முடிந்த 2024 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. சிலர் பணம் சம்பாதிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதவியுள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்

இந்திய தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதற்கு பிறகு பங்குச் சந்தைகள் 3.39 சதவீதம் உயர்வுகண்டன. அதேவேளையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் பங்குச் சந்தைகள் 6 சதவீதம் சரிவு கண்டன. இதனால், பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

தேர்தலின் போது, ​​பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததை, இப்போதுதான் முதல்முறையாகக் பார்க்கிறேன். அப்போது, பங்குச் சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 அன்று பங்குச் சந்தை உயரும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதிக்கு முன் பங்குகளை வாங்குங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சிலர் பணம் சம்பாதிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதவியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், “இது அதானி பிரச்சினையை விட மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் அதானி பிரச்சினையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நேரடியாகப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருடன் தொடர்புடையது. ஏனென்றால் உண்மையான தேர்தல் முடிவுகள் குறித்த இண்டர்போல் அறிக்கைகள் அவர்களிடம் உள்ளன. அவர்களிடம் தங்கள் கட்சி குறித்த சொந்த தரவுகளும் உள்ளன. ஆனால் அவர்கள் முதலீட்டாளர்களை பங்குகளை வாங்க அறிவுறுத்துகிறார்கள். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தவறானவை என்ற தகவல் பிரதமரிடம் உள்ளது. அவரிடம் இண்டர்போல் தரவுகள் இருப்பதால், தேர்தலுக்குப் பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரியும்.

பங்குச் சந்தை உயர்வு குறித்து எதற்காக மோடி வெளிப்படையாக பேச வேண்டும். பாஜகவினருக்கு பங்குச் சந்தை குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்பை திணித்துள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. அது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். பொறுப்புள்ள இடத்தில் அமர்ந்துகொண்டு இவர்கள் போலியான கணக்கைக் காட்டியுள்ளனர்” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!