ராகுல் நடந்த பயணமும் ஒரு சுயநவகாளிதான்!

ராகுல் நடந்த பயணமும் ஒரு சுயநவகாளிதான்!

11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
25 கட்சித் தலைவர்கள் மிரட்டி இழுக்கப்பட்டனர்.
211 முன்னாள் MLA/MP விலை போனார்கள்.
கட்சிகள் சிதைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சூழ்ச்சி செய்தது.
மீடியாக்கள் துரோகம் செய்தது.
நீதிமன்றங்கள் கைவிட்டது.
வருமானவரித்துறை நோட்டீஸ் விட்டது.
அமலாக்கத்துறை நெருக்கியது.
மதவாதம் பொய் பரப்பியது.
கார்ப்பரேட்டுகள் கைவிரித்தனர்.

இதை எல்லாம் தாண்டி இந்திய கூட்டணி 232… காரணம் ஒற்றை மனிதர் ராகுல்காந்தி🔥🔥🔥

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ஒற்றை தேசியத்தின் பெயரால் நடக்கும் மதக்கூப்பாட்டை இந்திய மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஸ்டாலின், மம்தா, அகிலேஷ், தேஜஸ்வி என இன தேசிய ஆளுமைகள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்த முடிவு சரி என நிரூபித்திருக்கிறார்கள். மம்தாவின் தனித்து செல்லும் முயற்சி அவருக்கு உரிய நியாயமான வெற்றியைக் கொடுத்துள்ளது என்றால், ஸ்டாலினின் அரவணைத்துச் செல்லும் முயற்சி 100% வெற்றியை கொடுத்துள்ளது. இந்த தேர்தல் உ.பி-களின் தேர்தல். தெற்கேயும், வடக்கேயும் உ.பிகள் நிர்ணயித்த தேர்தல். இவ்வெற்றியில் மிகுந்த புகழுக்குரியவர் அகிலேஷ் தான். மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் கமல்நாத்தால் அவமானப்படுத்தப்பட்ட பிறகும் சுயகர்வியாக இல்லாமல் மிகுந்த முதிர்ச்சியோடு நாடாளுமன்றத் தேர்தலை அணுகினார் அகிலேஷ்.

காங்கிரஸை மிகச்சிறப்பாக அரவணைத்து, அதிக இடங்களை ஒதுக்கி, உத்திரபிரதேசத்தின் பிரச்சார முகத்தை மிகச்சிரத்தையோடு வ டிவமைத்த அகிலேஷ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ‘இந்தியா’வுக்கு வழங்கியிருக்கிறார். உண்மையில் இன்றைய வெற்றியின் நாயகன் அவரே. உத்திரபிரதேசத்தில் கடந்தமுறை பாஜக வென்ற 30 இடங்களை உடைத்து நொறுக்கியிருப்பதே இந்தத்தேர்தலின் மாஸ்டர் ஸ்ட்ரோக். பீகாரில் 75%, சத்தீஸ்கரில் 90%, மத்தியபிரதேசத்தில் 100%, குஜராத்தில் 95%, டெல்லியில் 100% என உத்திர பிரதேசத்தை சுற்றியிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக அலையே வீசியுள்ளது இம்முறையும். பற்றி எரியும் காட்டுக்கு நடுவே தன் தானியக்கிடங்கை காப்பாற்றியிருக்கிறார் அகிலேஷ். வேறு இடங்களில் வெற்றிபெற்று இந்த எண்ணிக்கை கிடைத்திருந்தால் அது சாதாரணமாக பட்டிருக்கும். ஆனால், உத்திரபிரதேசம் வசமாகியிருப்பது பகுத்தறிவு ஜனநாயக சக்திகளுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த வெற்றி இந்தி பிராந்தியத்தின் தனிப்பெரும் தலைவராக அகிலேஷை உயர்த்தியுள்ளது. அந்த உயர்வு ஒற்றைத்தேசியக்கனவுக்கான சம்மட்டி அடி.பீகார் கொஞ்சம் கைகொடுத்திருந்தால் முடிவுகள் மொத்தமாகவுமே மாறியிருக்கும்.

*
இச்சூழலில் மீண்டும் மீண்டும் நினைவில் வைக்க வேண்டிய சொற்கள் இவை. ராகுல் நிச்சயம் நேருவோ, இந்திராவோ, ராஜீவோ, சோனியாவோ கூட அல்ல. ராகுல் உருவெடுப்பதற்கு முன்பாகவே ஒழிக்கப்பட்டவர்; தன் ஒழிப்பை வீழ்த்தி இன்று ஒளிரத்தொடங்கியிருக்கிறார். இந்திய அரசியல் சகாப்தத்தில் அவதூறுகளையும், அதீத வன்ம குரோதத்தையும் கடந்த வல்லமை பிதாமகர்களுக்கு மட்டுமே உண்டு. காந்தி, பெரியார், கலைஞர் அதில் பிரதானமானவர்கள். அம்மூவரும் தத்துவாத அரசியலிலிருந்து எழுந்து வந்தவர்கள். ஒரு தத்துவத்துத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவுமே மாறியவர்கள். தனிமனித தலைமை என்ற எல்லையைக் கடந்து ஒரு காலகட்டமாகவே நிலைத்தவர்கள்.அவர்கள் தான் அந்த காலம் ; அந்த காலம் தான் அவர்கள் ! ராகுல் விதிவிலக்கு.

ராகுல் திட்டமிட்ட இலக்குக்காக தன்னை தயார்படுத்த நிர்பந்திக்கப்பட்டவர். அத்திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பாகவே அவரது பாதையும், கால்களும் நொறுக்கப்பட்டிருந்தது. ராகுல் ஒருவகையில் நேரு. மிக நீண்ட கால அவகாசமும், வசதி வாய்ப்புகளும், அதிகார செல்வாக்கும் அவருக்கு கிடைத்தன. ஆனால், நேரு காந்தி என்ற பேராகிருதியால் வளர்க்கப்பட்டவர். ராகுல் தன்னந்தனியாக தனித்துவிடப்பட்டவர். தான் மட்டுமல்ல, 100 ஆண்டு கடந்த தன் குடும்பத்தின் – இயக்கத்தின் முழு பாரம்பரியமும் அர்த்தமற்றதாக சிதைக்கப்பட்ட நேரத்தில் அரசியலுக்கு வந்தவர் ராகுல். உயிராய் நேசித்த பாட்டி, தந்தை இருவரின் கொடும் மரணத்தை சுமந்தபடி தொடங்கப்பட்ட பயணம் அது. இன்றுவரை அவரை, அவரது குடும்பத்தை துர்மரணம் குறித்த அச்சம் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. பாதைகளும், கால்களும் நொறுக்கப்பட்ட ஒருவன், மரணங்களின் ரணத்தோடு தேடி அலைந்தது தனுக்கும், தன் இயக்கத்துக்குமான ‘தத்துவம்’. பாரத தேசியத்துக்கும், இன தேசிய நலன்களுக்கும் இடையிலான நல்லுறவே அந்த தத்துவம் என்பதே ராகுல் கண்டுணர்ந்த இந்தியா.

இந்திய சுதந்திர வரலாற்றில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான அத்தியாயம், காந்தியின் நவகாளி பயணம். ஹிட்லருக்குக்கூட அகிம்சையை போதித்த மகாத்மா தன் சொந்த சிசுக்கள் மதத்தின் பெயரில் வெட்டிக்கொண்டு செத்த ரத்தக்களறியை தடுத்து நிறுத்த சென்றுபோது வழியெங்கும் அத்தந்தையின் பிள்ளைகள் மலத்தையும், முட்களையும் கொட்டி வைத்திருந்தார்கள். நினைவில் கொள்க. ஒன்று மலம் – அவமானத்தின் குறியீடு. இன்னொன்று முள் – வன்முறையின் குறியீடு. இரண்டையும் தன் கையால் அள்ளி சுத்தப்படுத்திக்கொண்டே மகாத்மா சென்றபின்பு அமைதியான வங்காளத்தைப் பார்த்து மவுண்ட்பேட்டன் சொன்னார் ‘பிரிட்டிஷ் ராணுவமும், காவல்துறையும், பீரங்கிகளும், துப்பாக்கி ரவைகளும் சாதிக்காததை 77 வயது கிழவர் சாதித்திருக்கிறார். ஒரு தனிமனித ராணுவமாக’ என்று.

அதே போல் தன்னையும், தன் இயக்கத்துக்கான காலமாற்றத்தையும் ஒருசேர கண்டுபிடிக்கும் பயணமாக ராகுல் நடந்த பயணமும் ஒரு சுயநவகாளிதான். தாயையும், சகோதரியையும் வேசி என விமர்சிக்கும் கூட்டம், தந்தையை திருடன் என்று பழிசொல்லும் இழிசொல், மூளை வளர்ச்சி இல்லாதவன் என குயுக்திக்கப்பட்ட அவமானங்கள் அத்தனையும் இன்று உடைந்திருக்கின்றன. ராகுலை ஒரு தோல்வியின் முகமாக சித்தரிக்கும் 25 ஆண்டுகால அரசியல் இன்றோடு பொசுக்கப் பட்டுள்ளது.ராகுல் எழுந்துவிட்டார். அணுகுண்டு வீசப்பட்ட நிலத்தில் முளைத்த முதல் சிசுவாக.

வாழ்த்துகள் ‘இந்தியா’.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!