ரயில் என்று மாறிய வடக்கன் – விமர்சனம்!

ரயில் என்று மாறிய வடக்கன் – விமர்சனம்!

ழகர்சாமியின் குதிரை, நான் மகான் அல்ல, எம் மகன் என்பது உட்பட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி தனி முத்திரைப் பதித்த பாஸ்கர்சக்தி ரயில் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். வடக்கன் என்று பெயர் வைக்கக் கூடாது என்று சென்சார்போர்டு எதிர்ப்பு தெரிவித்ததால் ‘ரயில்’ என்று மாற்றப்பட்டதாம்.

80 களில் மும்பைக்கு பிழைக்கச் சென்ற தென்மாநில மக்களை மெட்ராசி என்று எள்ளி நகையாடிய சூழல் மாறி இப்போது வட மாநிலங்களில் இருந்து பிழைக்க தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் மக்கள் வடக்கன் வந்தேறி என்பது உட்பட பலப் பெயர்களில் எள்ளல் செய்யப்படுகிறார்கள்..இப்படி அரை ஜான் வயிற்றிற்காக இடம் பெயரும் வட இந்தியர்களைப் பற்றிய கதையை தமிழ் சூழலுடன் இணைத்து உணர்வுகளுடன் கலந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி. அரசியல் ரீதியான விமர்சனங்கள் உண்டு..!

ஆரம்ப காட்சிகள் சற்று பொறுமையை சோதித்தாலும் இடைவேளைக்குப் பின் படம் கொஞ்சம் வேகம் எடுக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நம்ம ஊர் இளைஞர்கள் எப்படி போதையில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.. வட இந்தியர்கள் எப்படி வேலைக்குப் போகிறார்கள்.. அவர்கள் மீது நடக்கும் உழைப்புச் சுரண்டல் என்பதையெல்லாம் நன்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜனனியின் பின்னணி இசையும் பாடலும் சிறப்பாக இருக்கிறது.

நாயகன் குங்குமராஜ் உட்பட அனைவரும் நன்கு நடித்திருக்கிறார்கள். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வரும் காட்சிகளில் நகைச்சுவை விளையாடுகிறது. திரையில் ரத்தத்தை தெறிக்க விடுவது.. ரத்தத்தில் குளிப்பது என்று மாறிவரும் வணிகத் திரைச்சூழலுக்கு நடுவில், தன் முதல் படைப்பில் மொழிகளை நிலங்களைக் கடந்த மனித உணர்வுகளைப் பேசும் சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி..

அதற்கு முதல் பட தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் துணை நின்றிருக்கிறார்..

அனைவருக்கும் வாழ்த்துகள்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா

error: Content is protected !!