இடித்து தரைமட்டமாக்கப்படும் கிரிக்கெட் ஸ்டேடியம்!

இடித்து தரைமட்டமாக்கப்படும் கிரிக்கெட் ஸ்டேடியம்!

மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்களுக்கு சில திரையரங்குகளில் இன்றோடு இப்படம் நிறைவடைகிறது என்று போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்திருப்போம்..!அதே போல நேற்றோடு ஒரு மைதானம் அழிக்கப்படுகிறது என்பதை கேட்க சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆம்.. உலகக்கோப்பைக்காக மிகப் பிரம்மாண்டமாக மிக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட நியூயார்க் மைதானம் நேற்றோடு விடைபெற்றது. இந்தியா – அமெரிக்கா ஆடும் ஆட்டமே இறுதி ஆட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டி20 உலகக் கோப்பைக்காக தற்காலிகமாக கட்டப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் சுமார் 34,000 பேர் அமரக்கூடிய வசதி அமைக்கப்பட்டது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் அனைத்து சீட்களும் நிரம்பி வழிந்தது. நியூயார்க் நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள டிராப் – இன் பிட்சுகள் அமைக்க 8 முதல் 10 மாதங்களே ஆனது. இதுவே இந்த ஸ்டேடியத்தின் சராசரி ஸ்கோர் முதல் இன்னிங்ஸில் 108 ரன்களாக இருப்பதற்கு காரணம். முன்னதாக, 900 பரப்பளவில் இருந்த சுற்றுவட்டார பகுதியில் அடிலெய்டு ஓவலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்ணை கொண்டு 30 மில்லியன் டாலர் செலவில் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 250 கோடி) 8 மாதங்களுக்குள் இந்த ஸ்டேடியம் ஐசிசியால் கட்டப்பட்டது. இதன் காரணகாவே சீரற்ற பவுன்ஸ், மோசமான அவுட் பீல்டு என பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது.

ஆனாலும் மொத்தமே 8 ஆட்டங்கள் தான். இந்த உலகக்கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய மைதானம் என்றால் இது தான். இம்மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 107 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 105 ரன்கள் மட்டுமே. 20 ஓவர் போட்டிகளுக்கு இது மிகவும் குறைவானது தான். இம்மைதானம் 8 ரன்களுக்கு 1 விக்கெட் வேண்டும் வேண்டும் என கேட்டு வாங்கிக் கொள்கிறதாம். இம்மைதானம் ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை பலி வாங்கிவிட்டது. இம்மைதானத்தில் தப்பித்தவர்கள் என்றால் அது தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தான். இந்தியா மட்டும் இங்கே தோல்வி பெற்றிருந்தால் மிகப்பெரிய சர்ச்சையே வெடித்திருக்கும்.

வெறும் 8 போட்டிகளோடு தனது ஆயுளை நிறைவு செய்யும் இம்மைதானம் இடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாசாவ் கிரிக்கெட் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அடுத்த மாத இறுதிக்குள் இருந்த தடயமே இருக்காது. மேலும், தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட இந்த டிராப் – இன் பிட்சுக்கள் அமெரிக்காவிலேயே இருக்குமா..? அல்லது மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே கொண்டு செல்லப்படுமா? என்பது தெரியவில்லை.!

ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

error: Content is protected !!