கைலாசாவின் கதவுகள் திறந்து இருக்கின்றன!- நித்தியானந்தா மீண்டும் அறிவிப்பு!

கைலாசாவின் கதவுகள் திறந்து இருக்கின்றன!- நித்தியானந்தா மீண்டும் அறிவிப்பு!

லகமே கொரோனா பீதியில் இருந்த 2020ஆம் வருஷம் டிசம்பர் 16ஆம் தேதி தனது சத்சங்க நிகழ்வின்போது கைலாசாவுக்கு 3 நாட்கள் விசாவில் வர விண்ணப்பிக்கலாம் என்று கூறி அதற்கு எப்படி வர வேண்டும் என்ற விவரங்களை வெளியிட்டிருந்தார் நித்தியானந்தா. அந்த சொற்பொழிவின்போது, “இன்று முதல் கைலாசா விசாவுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வர வேண்டும். அங்கிருந்து கைலாசாவுக்கு வர கைலாசாவுக்கு சொந்தமான தனியார் விமான சேவை உள்ளது. அதன் மூலமாக நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள். தயவு செய்து 3 நாட்களுக்கு மேல் கைலாசாவுக்கு விசா கோரி விண்ணப்பிக்காதீர்கள். அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். விசா கோரி மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கைலாசாவுக்கு வருவதென்றால் ஆஸ்திரேலியாவுக்கு வர ஒரு வார விசாவை வாங்குங்கள். ஆஸ்திரேலியா வந்த பிறகு தனியார் விமான சேவையில் நீங்கள் கைலாசாவுக்கு வரலாம். அந்த விமான சேவையின் பெயர் கருடா சேவை. ஒருவருக்கு தலா ஒரு தரிசனம் மட்டுமே வழங்கப்படும். அது 10 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம்வரை இருக்கும். அதற்கு மேல் தருமாறு அழுத்தம் கொடுக்காதீர்கள். இங்கு வருவதற்கு எவ்வித பொருளாதார தேவையும் இல்லை. ஆஸ்திரேலியாவரை மட்டுமே நீங்கள் சொந்த செலவில் வர வேண்டும். மற்றபடி ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு வரும் விமான செலவு, கைலாசாவில் தங்குமிடம், உணவுச்செலவு எதுவும் கிடையாது. எல்லாமே இலவசம். ஒவ்வொரு நாளும் தலா 10 முதல் 20 பேர் வரை நான் பார்ப்பேன்.”இங்கு வருவோர், எல்லோரையும் நீங்கள் பரமசிவனாக பார்க்க வேண்டும். பரம சிவனுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளது போன்றவற்றை மட்டுமே இந்த முழு ஆன்மிக உலகில் நீங்கள் காண வேண்டும். அதற்காகவே இந்த ஏற்பாடு” என்றெல்லாம், பில்ட் அப் கொடுத்துநித்தியானந்தா அந்த காணொளியில் பேசியிருந்தார். ஆனால் அதை அவர் உள்பட சகலரும் மறந்து விட்ட சூழலில் இப்போது மீண்டும் தனது கைலாசா நாடு எங்கிருக்கிறது என ஜூலை 21ல் அறிவிப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நில அபகரிப்பு, சொத்துகள் மோசடி, இளம் வயதினரை சன்னியாசம் செய்ய நிர்பந்தித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வந்தார் நித்தியானந்தா. அதே சமயம் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த உண்மைத் தகவல் இல்லை. ஆனால் தொடர்ந்து அவரது உரைகள் அடங்கிய காணொலிகள் யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கூடவே தனக்காகவும் தன்னை பின்பற்றுபவர்களுக்காகவும் கைலாசா என்ற நாட்டையே உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா அறிவித்தார். ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாடு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டுக்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார். அதை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் அனுமதி கேட்டு இருப்பதாகச் சில்லி அலப்பறை கிளப்பினார். ஆனால் ஐ.நாவில் அப்படி எந்த நாடும் அனுமதி கோரவில்லை என்று சொல்லி விட்டது. அதே சமயம் தான் வசிப்பதாகக் கூறும் கைலாசாவில் இருந்து அதன் சமூக ஊடக பக்கம், யூட்யூப் வாயிலாக சத்சங்கம் எனப்பெயரில் அன்றாடம் ஆன்மிக சொற்பொழிவை வழங்கி வருகிறார்.அவரது சத்சங்க நிகழ்வு எந்த இடத்தில் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் நேரலை பின்னூட்ட வலைபின்னல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைலாசா நாடு இருக்கும் இடத்தை ஜூலை 21ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக கைலாசா நிர்வாகம் தெரிவித்துள்ளது. குரு பூர்ணிமா விழா கொண்டாடும் போது நேரலையில் நித்தியானந்தா தான் இருக்கும் இடத்தை அறிவிக்க உள்ளாராம்.இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கும் பதிவில்’கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21 ஆம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம், ‘கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்துள்ளனர். நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது.. மனித உடலெடுத்த எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். கைலாசாவின் கதவுகள் திறந்து இருக்கின்றன. கதவை நான் திறந்தாலும் நீங்கள் கால் எடுத்து வைத்தால்தான் உள்ளே வர முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!