மறக்கப்பட்ட தேடியந்திரம்- பாய்ண்டர்ஸ்.கோ.யூகே!

மறக்கப்பட்ட தேடியந்திரம்- பாய்ண்டர்ஸ்.கோ.யூகே!

ந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன… !கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. நார்த்தன் லைட்ஸ் இதற்கு ஒரு உதாரணம். நார்த்தன் லைட்ஸ் பற்றி தனியே பார்க்கலாம், இந்த பதிவில் இன்னொரு மறக்கப்பட்ட தேடியந்திரத்தை பார்க்கலாம். பாய்ண்டர்ஸ்.கோ.யூகே – (www.pointers.co.uk ) !

பாய்ண்டர்ஸ் தேடியந்திரத்தின் சுவட்டை கூட இப்போது இணையத்திலும், கூகுளிலும் பார்க்க முடியாத நிலையில், இந்த அபூர்வ தேடியந்திரத்தின் பழைய வடிவத்தை இணைய காப்பகத்தில் மட்டுமே காண முடிகிறது. பாய்ண்டர்ஸ் தேடியந்திரம் இரண்டு விதங்களில் முக்கியமாக அமைகிறது. கூகுளுக்கு முன்னால் தோன்றியது என்பது மட்டும் அல்லாமல், கூகுளுக்கு முன்னரே கூகுள் அலெர்ட் சேவை போன்ற தேடாமல் தேடும் வசதியை இது பிரதானமாக வழங்கியது தான். ’இன்பார்மர்’ எனும் தகவலாளி வாயிலாக வழங்கிய இந்த சேவை அந்த காலத்து சாட்பாட்டாக கருதப்படலாம் என்பது தான் இந்த தளத்தின் இன்னொரு முக்கியத்துவம்.

பிரிட்டனை ( யூகே) மையமாக கொண்ட இந்த தளம், வழக்கமான தேடியந்திரம் அல்ல: இதில் தேடுவதற்கு முன் பயனாளிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவின் போது தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பயனாளிகள் தேட வேண்டிய அவசியமே இல்லை. மாறாக, இந்த தேடியந்திரத்தில் கேள்வி கேட்டால் போதும், தேவையான தகவலை பயனாளிகள் சார்பில் உருவாக்கப்பட்ட மென்பொருள் சேவகர்கள் (Software Agents ) தேர்வு செய்து தரும். தேவையற்ற தகவல்களை எல்லாம் பட்டியலிடாமல் தேவையான தகவலை மட்டுமே கொண்டு வந்து தருவதாக சொன்னது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சேவகர்கள் இணையத்தில் துழாவி, பயனாளிகள் ஏற்கனவே அவர்களைப்பற்றி தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் பொருத்தமான தகவலை அளிக்கும் வகையில் செயல்பட்டன.

பயனாளிகள் தங்களுக்கான மென்பொருள் சேவகரை உருவாக்கி கொள்ளலாம். இந்த தகவலாளிகள், பயனாளிகள் சமர்பித்த குறிச்சொல்லுக்கு ஏற்ப, இணையத்தை கண்காணித்து அவர்கள் குறிப்பிட்ட இணையதளம் புதுப்பிக்கப்படும் போதெல்லாம் இமெயிலில் தகவல் தரும். ( பல ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் அலெர்ட்ஸ் எனும் பெயரில் கூகுள் இந்த சேவையை அறிமுகம் செய்தது). அதே நேரத்தில், மென்பொருள் சேவகர்களிடம் பயனாளிகள் கேள்வி கேட்டும் பதில் பெறலாம். இப்போது சாட்ஜிபிடி செய்வதாக சொல்லப்படுவது போல, இந்த மென்பொருள் பயனாளிகள் சார்பில் தேடி பொருத்தமான பதிலை அளிக்கும்.

பயனாளிகள் சார்பில் சாட்பாட் தகவல்களை தேடும் வசதி 1996 லேயே அறிமுகமானது வியப்பு தான் அல்லவா!இத்தகைய புதுமையான சேவை ஏன் வெற்றி பெறவில்லை எனத்தெரியவில்லை. இந்த தேடலை வர்த்தகமாக வழங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம். பயனாளிகள் போலவே, இணையதளங்களையும் இந்த தளம் பதிவு செய்ய அழைத்தது. பதிவு செய்யப்படும் தளங்களுக்காகவும், மென்பொருள் சேவகர்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் முக்கிய தகவல்களை பயனாளிகளுக்கு அளித்தன. விளம்பர நோக்கில் அமைந்த இந்த உத்தி, பயனாளிகள் தேவையை நிறைவேற்றும் வகையில் இருந்தா எனத்தெரியவில்லை.

ஆனால், மற்ற தேடியந்திரங்கள் போல, லட்சக்கணக்கான இணைய பக்கங்களை எல்லாம் பட்டியலிடலாமல், மிக குறைந்த பக்கங்களை பட்டியலிட்டு, அவற்றில் இருந்து தனிநபர் தளங்கள், பயனற்ற பக்கங்கள், விவாத குழுக்கள், போலி பக்கங்களை எல்லாம் நீக்கி விட்டு தகவல்கள் கொண்ட பக்கங்களிலேயே தேடியதாக இந்த தளம் தெரிவிக்கிறது. ஒரு போதும் கூகுளால் அளிக்க முடியாத வசதி இது. சாட்ஜிபிடிக்களாலும் முடியாது.

சைபர் சிம்மன்

error: Content is protected !!