உபி ஆன்மிகச் சாவுகளின் பின்னணி இதுதான்!

உபி ஆன்மிகச் சாவுகளின் பின்னணி இதுதான்!

ள்ளச் சாராய மரணங்களுக்காக, திமுக ஆட்சி கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. ஆனால், உபியில் நடந்த ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்ட நெரிசலில் 116 பேர் உயிரிழந்ததைக் கடுமையாக விமர்சிக்க முடியுமா? இறந்தவர்களுக்காக அனுதாபம்தான் தெரிவிக்க முடியும். காரணம், அங்கே நடப்பது பாஜக முதல்வரான யோகி ஆதித்ய நாத்தின் ‘அப்பழுக்கற்ற’ ஆன்மிக ஆட்சி. அவரை விமர்சிப்பவர்கள், ஒன்று தேச விரோதிகளாக இருக்க வேண்டும். அல்லது இந்துக்களின் விரோதியாக இருக்க வேண்டும். அதனால் பின்னணியை மட்டும் பணிவோடும் பயபக்தியோடும் பார்ப்போம்…. !

‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்று அரசமரத்தடியில் புத்தருக்கு ஞானம் கிடைத்ததைப் போலவும் ‘நான் ஏனையோரைப் போல தாய்-தந்தைக்குப் பிறந்தவனல்லன்; கடவுளால் நேரடியாக பூமிக்கு அனுப்பப் பட்டவன்’ என்பதைப் போலவுமான ஒரு ஞானம், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருக்குப் பிறந்தது. அவர் பெயர் சூரஜ் பால். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பட்டியாலி கிராமத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவருக்குத்தான் ஆன்மிக ஞானம் பிறந்தது. அவர் பல்வேறு துறவிகளைச் சந்தித்தாலும் காவியின் மேல் நாட்டம் ஏற்படவில்லை. ஆன்மிகச் சொற்பொழிவாற்றுவதில்தான் நாட்டம் பிறந்தது. ஆரம்பித்தார்; தொடர்ந்தார். நல்ல வரவேற்பு. அதனால், காவல் பணியோடு, கடவுள் பற்றிய சொற்பொழிவுகளிலும் கவனம் செலுத்தினார். வந்த வருமானத்தை அவரே ‘ஸ்வாஹா’ செய்து விடாமல், ஏழை மக்களுக்கும் வாரி வழங்கினார். பிறகு கூட்டத்திற்குக் கேட்பானேன்?

கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதால், தனது காவல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தனது பட்டியாலி கிராமத்தில் முதல் ஆசிரமத்தைத் தொடங்கினார். கிராம மக்கள் இவரை அன்புடன் ‘போலே பாபா’ (அப்பாவி பாபா) என்று அன்புடன் அழைக்க ஆரம்பித்து விட்டனர். நாளடைவில் இந்தப் பெயரே ‘சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி’ என்னும் திருநாமத்தையும் அடைந்து விட்டது. ஆன்மிகம் என்பது, சாதாரண மக்களுக்கு அவர்கள் இறந்த பிறகு மேலோக சொர்க்க வாழ்வைத்தான் தரும். ஆனால், ஆன்மிகத்தைப் புத்திசாலித்தனமாகக் கையாள்பவர்களுக்கோ பூலோக வாழ்வையே சொர்க்கமாக்கித் தரும்.

போலே பாபாவுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், இவர் மனைவியும் ‘மாதாஶ்ரீ’ என்னும் திருநாமத்துடன் பாபாவுடன் மேடையேறினார். கூட்டமும் அலை பாய்ந்தது. ஆசிரமத்தின் கிளைகளும் அதிகரித்தன. அப்படியும் போதவில்லை. ஆன்மிக வாழ்வில் நஷ்டமென்பதேது? அதனால்,பக்கத்து மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசம் என ஆலமர விழுதுகள்போல் ஆசிரமக் கிளைகள் பெருகின. இவருடைய ஆன்மிகக் கூட்டங்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாராண எளிய மக்களே என்பதால், காவல் பாதுகாப்பில் யாரும் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இப்போது உபி ஹாத்தரசில் நடை பெற்ற பெருங்கூட்டத்திலும் அதிகமான காவலர்கள் இல்லையென்றும் சொல்லப் படுகிறது. காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம், மூன்று மணிநேரம் நடந்திருக்கிறது.

கூட்டம் முடிந்து வெளியேறுவதற்கான வழியும் குறுகலாக இருந்ததாம். கூடவே கோடை மழையால் ஏற்பட்ட சேறும் சகதியும். இந்நிலையில் கூட்டத்தில் ஒருவர் தடுமாறி விழ…அவரைத் தொடர்ந்து பலரும் ஒருவர்மீது ஒருவர் விழுந்து நெரிசலாக… 116 பேர் பலியாகி விட்டனர். இறந்தவர்களில் பெரும் பகுதியினர் பெண்களும் குழந்தைகளுமே என்பதுதான் சோகத்திலும் பெரும் சோகம். கள்ளச் சாராயச் சாவுகளுக்கு அரசின் மெத்தனம்தான் காரணம். இந்த ஆன்மிகச் சாவுகளுக்கு யார் காரணம்? அரசின் மெத்தனமா? கடவுளின் மெத்தனமா? நம் போன்ற ஆன்மிக ஞானமற்ற பன்னாடைகளுக்கு எப்படிப் புரியும்?

பின்குறிப்பு: பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாகச் சொல்கிறார்கள்.

செ. இளங்கோவன்

error: Content is protected !!