நீட் தேர்வு எதிரொலி ; அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை!

நீட் தேர்வு எதிரொலி ; அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை!

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தலித் மாணவி அனிதா (17) இன்று தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவருடைய தாய் இறந்து விட்டார். தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வருகிறார்.

அனிதாவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 12ம் வகுப்பு தேர்வில் அவர் 1200க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கட் ஆப் 196.75. இந்த மதிப்பெண்ணுக்கு முந்தைய முறைப்படி அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த முறை நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
நீட் தேர்வில் அனிதாவுக்கு 700க்கு 86 மதிப்பெண்களே கிடைத்தன. அதனால் அவரால் மருத்துவப்படிப்பில் சேர இயலவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

நீட் எதிர்த்து போராடி தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததுடன் ரூ. 7 லட்சம் நிதி உதவி வழங்குவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை அறிவித்தார்.அனிதாவின் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவருக்கு அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். மேலும் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் விபரீதமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக முதல்வர் தெரிவித்தார். தமிழக மாணவ – மாணவியரின் நலன் கருதி தமிழக அரசு என்றும் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!