மது விலக்கு விவகாரம்: நம்ம தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கிட்டு சிந்திக்கோணும்!

மது விலக்கு விவகாரம்: நம்ம தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கிட்டு சிந்திக்கோணும்!

தமிழ்நாட்டின் எல்லா எதிர்க்கட்சிகளும் தற்சமயம் கையிலெடுத்திருக்கும் மது விலக்குப் பிரச்னை உலகின் பல நாடுகளிலும் பெரிய பிரச்னையாக உருவாகி, பின் அதை நடைமுறைப்படுத்த முடியாத காரணத்தால் கைவிடப் பட்டது என்கிற உண்மை பலருக்கும் தெரியாது. எல்லா வகையிலும் மிகவும் சிறப்பான கட்டுப்பாட்டுடன் அரசின் துறைகள், குறிப்பாக காவல் துறை இயங்கி வரும் அமெரிக்காவிலேயே 1920 முதல் 1933 நடைமுறைப்படுத்தப்பட்ட மது விலக்கு தோல்வியைச் சந்தித்தது. அதன் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும், முழு மது விலக்கு ஒரு நாட்டின் மக்களுக்கும், அந் நாட்டுக்கும் நன்மையை விடவும் தீமைகள் பலவற்றையே செய்கிறது என வாதிடுகிறார்கள்.
edit aug 7a
“குற்றச் செயல்களையும், ஊழலையும் குறைப்பது, சமூகப் பிரச்னைகளை சமாளிப்பது, சிறைகள், ஏழைகளுக்கான அடைக்கல இல்லங்களுக்கு ஆகும் அதிக அரசுச் செலவுகளைக் குறைப்பது, மக்களின் உடல்நலத்தையும் சுகாதாரத் தையும் பேணுவது’ ஆகியவை முழு மது விலக்கு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களாக அமெரிக்காவில் கூறப்பட்டன. ஆனால், மது விலக்கு அமலில் இருந்தபோது இந்த அம்சங்கள் எதுவும் நிறைவேறாமல், இவை எல்லாமே மேலும் சீர்கெட்டுப் போனது என்பது அனுபவரீதியாக உணரப்பட்டது.

மது விலக்கு அமல் செய்யப்பட்ட உடனேயே அமெரிக்காவில் ஒட்டுமொத்த மக்களின் மது பயன்பாடு குறைந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல மது பயன்பாடு அளவு கூடி கடைசியில் மது விலக்கு இல்லாத காலத்தை விடவும் அதிகமான அதிர்ச்சி நிகழ்வு நடந்தேறியது. மேலும், கள்ளத்தனமாகத் தயாரான மதுவை மக்கள் அருந்தியதால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும்படியான சூழ்நிலை உருவானது.குற்றங்கள் அதிகமாகி, அவை கட்டுக்கோப்பாக மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதிக குற்றச் செயல்கள் உருவாகி, நீதிமன்றங்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு குற்ற வழக்குகளும், சிறைகளில் கொள்ள முடியாத எண்ணிக்கையில் தண்டனை பெற்ற கைதிகளும் உருவாகி ஆட்சியாளர்களைத் திணற அடித்தது.

“காட்பாதர்’ திரைப்படத்தில் வருவதுபோன்ற மாஃபியா கும்பல்கள் உருவாவதற்கு, அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட மது விலக்குதான் காரணம் என்று சமூக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மது விலக்கினால் அரசு அதிகாரிகளின் ஊழல் பெருகியது. மது விலக்கு நடைமுறைக்கு வந்தால் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து, உற்பத்தித் திறன் வளர்ச்சியடையும் என வாதிட்டவர்கள் கையைப் பிசைந்து கொண்டு ஆச்சரியப்படும் வகையில், வேலைக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் குறைந்து பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

அதேவேளையில் மதுவிலிருந்து வரும் அரசின் ஆயத்தீர்வை, வரி வருமானமும் இல்லாமல் போனது. மதுப் பழக்கத்திலிருந்த பலரும் மது கிடைக்காமல் மாற்று போதைப் பொருள்களான ஓபியம், மரிஜுவானா, கோகைன் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நிலை உருவானது. இதுபோன்ற பொருள்கள் தரும் கேடுகள் பயன்படுத்துபவர்களுக்கு பெரிய உடல் சீரழிவுகளை உருவாக்கின.

சிறிய அளவு போதைப் பொருள்கள்கூட மிகப் பெரிய சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கும் என்பது ஆய்வாளர்களின் வாதம். மாஃபியா கும்பல்களின் வளர்ச்சிக்கு இதுதான் அஸ்திவாரமாக அமைந்தது.கள்ளச் சாராயம் அல்ல. இர்விங் ஃபிஷர், கிளார்க் வார்பர்ட்டன் எனும் இரண்டு அமெரிக்கப் பொருளாதார ஆய்வாளர்கள் மது விலக்கு அளித்த மாறு தல்களை ஆராய்ந்து சில முக்கியமான குறியீடுகளை வெளியிட்டார்கள். மது விலக்கு அமலாக்கப் பட்ட ஆரம்ப வருடங்களில் சுமார் 20% மக்கள் அருந்தும் மதுவின் அளவு குறைந்தது. அதாவது, மது விலக்கினால் மக்களின் மது அருந்தும் பழக்கம் முழுமையும் தடுக்கப்பட்டு விடவில்லை.

கள்ளத்தனமாக நிறைய அளவில் மது உற்பத்தி செய்யப்பட்டு அதை மக்கள் அருந்தினார்கள். மது விலக்கை நடைமுறைப் படுத்த அரசில் புதிய அதிகாரிகளும், ஊழியர்களும் நியமிக்கப்பட்டு அதனால் அரசின் செலவு அதிகமானது. மது விலக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் ரூ.28 கோடியே 60 லட்சம் என இருந்த மதுத் துறையின் ஆண்டு செலவு, 1920-ஆம் ஆண்டு மது விலக்கு அமல் செய்யப்படும்போது ரூ.87 கோடியாக உயர்ந்தது. அண்டை நாடுகளிலிருந்து மது பானங்கள் அமெரிக்காவுக்குள் புகுந்துவிடாமல் இருக்க புதிய போலீஸôர் நியமனம் செய்ய அதே அளவு பணம் செலவிடப்பட்டது.

சமூகச் சீர்கேடு என்ற வகையில் மக்கள் தரமான மது வகைகளை அருந்தாதபடி, கலப்படம் செய்யப்பட்ட மது வகைகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டன. உதாரணமாக, அமெரிக்காவில் நிறைய பெரியவர்களுக்கும், பெண் களுக்கும் பீர் அருந்தும் பழக்கம் உண்டு. அது மிதமான போதை தரும் ஒரு மது. ஆனால், அதிக அளவில் பீர் உற்பத்தி செய்யப்பட்டு பல இடங்களுக்கும் கள்ளத்தனமாகக் கொண்டு செல்லப்படுவது கடினமான செயல் என்பதால் கள்ள மது விற்பனையாளர்கள் பீர் வியாபாரத்தைக் கையில் எடுக்கவே இல்லை.

கடினமான மதுவான விஸ்கி, பிராந்தி போன்றவற்றை வடித்து புட்டிகளில் அடைத்து விற்பனை செய்தார்கள். அதனால், பீர் பழக்கம் உள்ளவர்கள் கடுமையான போதை தரும் பிராந்தி, விஸ்கிகளை கள்ளச் சந்தையில் வாங்கி அருந்தினார்கள். இதுபோலவே, திராட்சைப் பழங்கள் மூலமாகவே தயாரிக்கப்பட்ட ஒயின் கண்ணியமான பலதரப் பட்ட ஆண்களாலும், பெண்களாலும் அருந்தப்பட்டு வந்தது. ஆனால், இவற்றைக் கள்ளச் சந்தையில் தயாரிக்க முடியாது என்பதால் ஃபோர்ட் ஒயின் எனப்படும் ஸ்பிரிட் கலந்த அதிக போதையைத் தரும் கள்ள மது பானங்களை பலரும் அருந்தியதால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

மது விலக்கு நடைமுறைக்கு வந்த 1920-ஆம் ஆண்டு மது காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்ட மரணங்கள் 1,064. 1925-ஆம் ஆண்டு மது விலக்கு நடைமுறையில் இருந்தபோது கள்ளச் சந்தையில் மது அருந்தியதால் மரண மடைந்தவர்கள் 4,154 பேர் என்கிறது அந்நாட்டின் கட்டுக்கோப்பான மக்கள் கணக்கீடு.மது விலக்கு அமலுக்கு வரு முன் அமெரிக்காவில் சலூன்கள் எனப்படும் மதுபான விடுதிகள், பார்கள், கவுண்டிகள் எனப்படும் பஞ்சாயத்து அலுவலகங்களின் உரிமம் பெற்று நகரின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டன. அந்த சலூன்கள் பள்ளிகளுக்கு அருகிலும், ஆலயங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு அருகிலும் அமைக்க உரிமங்கள் வழங்கப்படவில்லை. மது விலக்கு அமல்படுத்தப்பட்டபின் சலூன்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.
url
அதன் பின்பு, “ஸ்பீக் ஈசி’ எனப்படும் கள்ள மது வியாபாரம் செய்யும் கடைகள் டீ, காபி, பிஸ்கெட் போன்றவற்றை வியாபாரம் செய்யும் போர்வையில் துவக்கப்பட்டுவிட்டன. அதைவிடவும் கொடுமை, முற்காலங்களில் சலூன்கள் எனும் மதுக் கடைகள், கிறிஸ்தவ ஆலயங்களில் நடத்தும் வழிபாடுகளை பாதிக்காத வகையில் ஞாயிற்றுக்கிழமை களில் மூடப்பட்டிருக்கும். ஆனால், மது விலக்கு காலத்தில் “ஸ்பீக் ஈஸி’ கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தேர்தல் நாள்களிலும் திறந்திருந்து ஜாம் ஜாம் என வியாபாரம் செய்து தேர்தலையும், பிரார்த்தனைகளையும் பாதித்தன.

மது அருந்திப் பழக்கப்பட்டவர்கள், மது விலக்கினால் அது கிடைக்காமல் போனதால் ஆல்கஹால் கலந்து தயாரிக்கப் பட்ட மருந்துகளை அதிகம் வாங்கி குடித்தனர். மேலும், மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் எனப்படும் எரிசாராயத்தை கள்ளத்தனமாக வாங்கி போதைப் பழக்கமுள்ள பலரும் அருந்தினார்கள். 1923 முதல் 1931 வரையிலும் அமெரிக்காவில் மது விலக்கு அமலில் இருந்த காலத்தில் மேலே குறிப்பிடப்பட்ட மருந்து வகைகளின் விற்பனை 95 சதவிகிதமும், நேரடி ஸ்பிரிட் 400 சதவிகிதமும் அதிகமாக விற்பனையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மது விலக்கு அமலுக்கு வந்தால், மக்கள் தாங்கள் மது அருந்தி வீணடிக்கும் பணத்தை தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், நிறைய சத்துள்ள உணவு வகைகளுக்காகவும், வங்கிகளில் சேமிப்பாகவும் பயன்படுத்துவார்கள் என பல சமூக ஆர்வலர்கள் அமெரிக்காவில் பிரசாரம் செய்தனர்.ஆனால் இது எதுவும் நடைபெறவில்லை.மேலும், மதுப் பழக்கத்தினால் உருவாகும் பல வியாதிகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “மது விலக்கு அமலுக்கு வருவதற்கு முன்பு 1.5 சதமாக இருந்த கல்லீரல் நோய்கள் பாதித்த சாவுகள், மது விலக்கு காலத்தில் 4 சதவீதமாக இருந்தது’ என்று கூறுகிறார் உலகப் புகழ்பெற்ற மாயோ மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் ஸ்நெல்.

மது விலக்கு வேண்டும் என வாதிட்ட பாதிரியார் பில்லி சண்டே 1920-ஆம் ஆண்டில் மது விலக்கு அமலுக்கு வந்தவுடன் கூறினார்: “பயங்கரமான வாழ்க்கை முறை நாட்டில் ஒழிந்துவிட்டது. குடிசைப் பகுதிகள் ஒழுக்கமாகி விடுகின்றன. நமது சிறைகள் இனி தொழிற்சாலைகளாகவும், தானியங்களை தேக்கும் இடங்களாகவும் ஆகி விடும். ஆண்கள் கெளரவமாகவும், பெண்கள் மலர்ந்த முகத்துடனும் தெருக்களில் வலம் வரலாம். நரகத்தில் ஆள்கள் இல்லாமல் அது வெற்றிடமாகி விடும்.’ அதாவது, குற்றங்கள் குறைந்து சுபிட்சம் பரவும் என்பது அவரது உண்மை யான எதிர்பார்ப்பாக இருந்தது. பாதிரியார் சண்டேயின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அமெரிக்காவில் நடந்த இந்த நிகழ்வுகள் மற்ற எல்லா நாடுகளுக்கும் பாடமாக அமைந்தன. இந்தப் படிப்பினையை மனதில் கொண்டு, நமது அரசியல் தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்.

என். முருகன்

error: Content is protected !!