பொய்யான உண்மைகளைக் கண்டறிந்த ஐகோர்ட்!
மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில் நுட்ப சட்டம் 2023ஐ ரத்து செய்து பாம்பே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்: மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க மத்திய அரசே உண்மை அறியும் குழு ஒன்றை அமைக்கும். (Face Checking Unit – FCU). இந்தக் குழு எதையெல்லாம் உண்மையல்ல என்று அறிவிக்கிறதோ அவற்றை அந்தந்த சேவை நிறுவனங்கள் தத்தமது சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும். அதாவது ஒருவர் மத்திய அரசை விமர்சித்து ஏதாவது எழுதினால் அது தவறு என்று மத்திய அரசின் FCU தன்னிச்சையாக அறிவிக்க முடியும். அதை முகநூல் நீக்கியாக வேண்டும்.
இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர் குனால் காம்ராதான் இந்த மனுவை முதலில் பதிந்தவர். ஊடக ஆசிரியர்கள் சங்கமும் இணைய சுதந்திர இயக்கமும் பின்னர் இந்த மனுவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ‘இந்தப் சட்டம் அரசை கேலி கிண்டல் செய்வதற்கு அனுமதிக்கவில்லை,’ என்ற குனால் காம்ராவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் எதிர் எதிர் நிலையில் தாங்கள் தீர்ப்பை எழுதினர். எனவே வழக்கு முடிவுக்கு வராமல் மூன்றாவது நீதிபதி வசம் போனது. இதில் தீர்ப்பு வரும் வரை மத்திய அரசின் உண்மை அறியும் குழுவின் செயல்பாட்டின் மீது சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
மூன்றாவது நீதிபதி சந்தூர்கர் நேற்று தனது தீர்ப்பில் இந்த சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். மத்திய அரசின் இந்த தகவல் தொழில் நுட்ப சட்டம் 2023, அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கிறது. Article 14 – சமத்துவ உரிமை, Article – 19 – கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை, Article 19(1)(g) தங்கள் (ஊடகத்) தொழிலில் சுதந்திரமாக செயல்படும் உரிமை போன்றவற்றுக்கு எதிராக உள்ளது என்று தீர்ப்பு சொல்கிறது. கூடவே, மத்திய அரசின் சட்டத்தில் உள்ள ‘fake, false and misleading’ என்ற சொற்கள் எப்படிப்பட்ட செய்திகளை குறிக்கின்றன என்பதில் தெளிவில்லை. எனவே மத்திய அரசு எதை வேண்டுமானால் சகட்டு மேனிக்கு fake என்று வகைப்படுத்திவிட முடியும்; அதனால் ஒரு விதமான சென்சார் போலவும் இது செயல்படும் ஆபத்து இருக்கிறது,’ என்றும் கூறுகிறது.
மத்திய அரசுக்கு தகவல்களின் உண்மைத்தன்மையில் எந்த அக்கறையும் இல்லை, இருந்ததும் கிடையாது என்பதை இரண்டு உதாரணங்களின் மூலம் நிறுவ முடியும். ஒன்று: ‘செய்தி (பாஜகவுக்கு) சாதகமாக இருந்தால், கவலையே படாமல் பரப்புங்கள். அது உண்மையா, பொய்யா என்று யோசித்துக் கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள்,’ என்று பாஜகவின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அமித் ஷாவே முன்னர் பேசி இருக்கிறார். அந்த வீடியோ அப்போது வைரல் ஆனது. அதனை சிரமேற்கொண்டு பாஜக ஐடி செல்லும் கண்டமேனிக்கு இந்தியா முழுக்க குப்பைகளை பரப்பிக் கொண்டிருந்தது. இன்றளவும் செய்து கொண்டிருக்கிறது.
இரண்டாவது, Fact Checkஐ நிஜமாகவே உருப்படியாக உபயோகித்த நிறுவனம் Alt News. சகட்டுமேனிக்கு பொய் செய்திகளை அம்பலப் படுத்தி வந்தது. வருகிறது. செய்திகளின் உண்மைத்தன்மை மீது மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் அதன் நிறுவனர் முகமது சுபேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி இருக்க வேண்டும். ஆனால் ஒரு சப்பை வழக்கில் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள். சுமார் ஆறு மாதங்கள் கழித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசை திட்டி அவரை விடுதலை செய்தது. மத்திய அரசின் கோபத்துக்குக் காரணம் சுபேர் அம்பலப்படுத்தியவற்றில் பெரும்பாலானவை பாஜக ஐடி செல்லின் பொய்கள்தான். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட மத்திய அரசு நிறுவும் உண்மையறியும் குழு நியாயமாக நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
பாஜக ஐடி செல் எடுக்கும் வாந்திகளை அப்படியே கண்டுகொள்ளாமல் கடப்பார்கள். வேற்றுக் கட்சிகள் மற்றும் எதிர்க் கருத்து கொண்டோரின் பதிவுகளில் நொட்டை, நொள்ளை சொல்லி அவற்றை நீக்குவார்கள். ஏற்கனவே பாரபட்சத்துடன் நடந்து கொள்ளும் சமூக ஊடகங்கள் மத்திய அரசின் அடிமைகளாகவே மாறி நிற்கும். அப்படிப்பட்ட அவல நிலையில் இருந்து தேசத்தைக் காப்பாற்றிய நீதிபதி சந்தூர்கர் அவர்களுக்கு நன்றிகள். இந்த வழக்கை முன்னெடுத்து மத்திய அரசுக்கு செக் வைத்த குனால் காம்ராவுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.