குமாரசாமி ஆகிய நான் ..!- கர்நாடகா முதல்வராகிறார்!

குமாரசாமி  ஆகிய நான் ..!- கர்நாடகா முதல்வராகிறார்!

சுப்ரீம் கோர்ட் தலையிட்டதால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி வரும் மே 21ம் தேதி கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற பின் 15 நாட்களில் சட்டமன்றத்தில் குமாரசாமி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை இடத்தை பிடிக்கவில்லை. பாஜக 104 இடங்கள், காங்கிரஸ் 78 இடங்கள் மற்றும் மஜத 38 இடங்களை வென்றது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் உரிமை கோரியது. ஆனால் ஆளுநர் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து கடந்த 17ம் தேதி கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் உத்தரவிட்டார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் எடியூரப்பா 19ம் தேதியே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்காலிக சபாநாயகராக கே.ஜி. போபையா நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இன்று காலை கர்நாடக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களின் பதவியேற்பு நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு சட்டமன்றத்தில் உணர்ச்சிகரமாக பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, “கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை வேட்பாளராக அறிவித்தனர். கர்நாடக மக்களின் பிரச்னைகலை தீர்த்து வைக்க பாடுபடுமாறு எனக்கு கட்டளையிட்டனர். கர்நாடகாவில் தனி பெரும்பான்மை கட்சியாக பாஜகவை தேர்வு செய்ததற்கு நன்றி. பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எங்களுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களை அளித்துள்ளனர்.

காங்கிரசும் மஜதவும் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதுதான் மக்களின் தீர்ப்பு. ஆனால், காங்கிரசும் மஜதவும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றன.கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மேலும், மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னை, குடிநீர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும் மஜதவும் செயல்பட்டு வருகின்றன. மாநில பிரச்னைகளில் அக்கறை காட்டாதவர்கள் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

நான் பதவியேற்றதும் முதல் கையெழுத்தே விவசாய கடன் தள்ளுபடிதான். ஏரி, குளங்களை பராமரித்து விவசாயிகளுக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டேன். உயிர் மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன்.கர்நாடகாவை முன் மாதிரி மாநிலமாக மாற்ற பிரதமர் மோடி பல திட்டங்களை என்னிடம் கலந்துரையாடினார். கனிம வளத்தை அதிகமாக கொண்டது கர்நாடகா. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் நன்மை தரும் பல திட்டங்கள் கிடைக்கும்”என்று பேசி விட்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

எடியூரப்பா இன்று பதவி விலகியதை தொடர்ந்து மஜத தலைவர் குமாரசாமி இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ், மஜத கூட்டணி அரசின் முதல்வராக குமாரசாமி வரும் மே 21ம் தேதி பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற 15 நாட்களில் குமாரசாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.

மே 21ம் தேதி நடக்கப்போகும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கும் விரைவில் அழைப்பு அனுப்பப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோர் முதலமைச்சராக பொறுப்பேற்கும் மஜத தலைவர் குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது சரி யார் இந்த குமாரசாமி!

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச் டி தேவகௌடாவின் மகனாவார். இவர் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு பிறந்தார்.  தந்தை முன்னாள் இந்திய பிரதமராக இருந்தாலுமே கூட ஆரம்பக் காலக்கட்டத்தில் குமாரசாமிக்கு அரசியல் மீது பெரிதாக ஆர்வம் ஏதும் இல்லை. சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தான் குமாரசாமிக்கு ஈர்ப்பு இருந்தது. இவர் பல கன்னட வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயது முதலே கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் தீவிர ரசிகர் குமாரசாமி. ராஜ்குமார் படங்களில் அணிவது போன்ற உடைகளை தனக்கென பிரத்தியேகமாக வடிவமைத்து உடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு குமாரசாமி ஒரு தீவிர ராஜ்குமார் ரசிகராக இருந்து வந்தார்.குமாரசாமிக்கும் அவரது முதல் மனைவி அனிதாவிற்கும் பிறந்த நிகில் கௌடா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட திரையுலகில் அறிமுகமானார் .

இதனிடயே 2003ல் இருந்து 2007ம் ஆண்டு வர கன்னட திரை உலகில் ஒரு வெற்றிகரமான நாயகியாக வலம்வந்து கொண்டிருந்தார் குட்டி ராதிகா. இவர் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றன. இந்த காலக்கட்டத்தில் தான் குட்டி ராதிகாவிற்கும் – குமாரசாமிக்கும் இடையே தொடர்பு உண்டானது. குமாரசாமியிடம் ஒரு ஜோதிடர் உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும். அதற்காகவே இவர் குட்டி ராதிகாவுடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தகவல் பரவியது. அத்துடன் முதல் முறை குட்டி ராதிகா கருவுற்று, ஸ்கேனிங்கில் அது பெண் குழந்தை என தெரியவந்து கரு கலைப்பு செய்ததாகவும். பிறகு, மீண்டும் கருவுற்று அதுவும் மகள் என அறிய வந்ததாகவும், இம்முறை குட்டி ராதிகா கரு கலைக்க தயாராக இல்லை என்பதாலும் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் குமாரசாமி என்று செய்திகள் வெளியாகின.

அதே சமயம் ஆரம்பத்தில் குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவிற்கும் இருந்த உறவு மறுக்கப்பட்டு வந்தது. குட்டி ராதிகாவும் திடீரென நான்கு ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். வெளியே தலைக் காட்டவில்லை. குட்டி ராதிகா எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. 2011ம் ஆண்டு லண்டனில் இருந்து தனது மகளுடன் இந்தியா வந்தார் குட்டி ராதிகா. தன் மகள் பெயர் ஷமிகா குமாரசாமி என்றும். தன் மகளின் தந்தை முன்னாள் முதல்வர் குமாரசாமி தான் என்றும் பகிரங்கமாக பேட்டி அளித்தார். குமாரசாமியும் இதை ஒப்புக் கொண்டார். 2006 ம் ஆண்டே இவர்கள் இருவரும் இரகசிய திருமணம் செய்துக் கொண்டார் களாம். அதையெல்லாம் கன்னட செய்தியாளர்கள் இப்போது நினைவூட்டி ஜோசிய சொன்னது போல் குட்டி ராதிகா யோகத்தால் முதல்வராகி விட்டர் என்று உரத்தக் குரலில் சொல்லி வருகிறார்கள்  . 

 

error: Content is protected !!