விழுப்புரத்திலிருந்து பிரிந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகிறது – முதல்வர் அறிவிப்பு!

விழுப்புரத்திலிருந்து பிரிந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகிறது – முதல்வர் அறிவிப்பு!

ஒவ்வொரு மாவட்டம், வட்டம், ஊராட்சி பகுதிகளும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, நிர்வாக வசதிகளுக்காக வேண்டி தனித்தனியாக பிரிக்கப்படும். ஏனென்றால் அதிக அளவு மக்களுக்கு சேவை செய்ய அரசு இயந்திரமும், அதிகாரிகளும் சற்று சிரமமப்படுவார்கள். அரசின் நலத் திட்டங் கள் மக்களுக்கு கிடைக்க தாமதமாகும். எனவேதான் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.


நம் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக 14 வட்டங்கள், 22 ஒன்றியங்களுடன் 7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடப்பது விழுப்புரம் மாவட்டம். கள்ளக்குறிச்சி அருகே கல் வராயன் மலைப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள், விழுப்புரத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், முதல் நாள் இரவிலேயே மலைப் பகுதிகளில் இருந்து சுமார் 15 கி.மி வரை நடந்தே வந்து, அங்கிருந்துப் பேருந்தைப் பிடித்து கள்ளக்குறிச்சி சென்று பேருந்து நிலையத்தில் உறங்கிவிட்டு, அதன் பிறகு காலையில் பேருந்தைப் பிடித்து, 5 மணி நேரம் வரை பயணம் செய்து விழுப்புரம் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதற்கிடையே நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்படும் போதெல்லாம், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்கிற கோரிக்கை எழுவதும் பின்னர் அடங்குவதுமாக இருந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வாக்கில், ஜெயலலிதா தலைமையிலான அரசு கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக உருவாக்க அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பியது. ஆனால், அந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது. 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான பிரபு, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்குவேன் என்று தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் சட்டசபையின் இறுதி நாளான இன்று (ஜனவரி 8) ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு இருவரும் விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனைப் பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். இதனைப் பரிசீலித்து விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார்” என்று அறிவித்தார். இதற்கு உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர்.  இதன் படி தற்போது
தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகும் நிலையில், இதற்கு அப்பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை மறுவரையரை செய்து 12 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்காக ‘தமிழ்நாடு மாவட்டங்கள் மறுவரையரை ஆணையத்தை’ தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!