சச்சினின் ஒரு நாள் உலக சாதனையை சமன் செய்தார் கோலி!

சச்சினின் ஒரு நாள் உலக சாதனையை சமன் செய்தார் கோலி!

ம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில், 119 பந்துகளில் 100 ரன்களை எட்டிய விராட் கோலி தனது 35வது பிறந்தநாளில் தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்தார். விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 79 சதங்களை அடித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று விராட் கோலி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுவதால், சதம் விளாசி அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

முன்னதாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் சதம் விளாச வாய்ப்பு கிடைத்தும் விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது விராட் கோலி ரசிகர்களின் கரகோஷத்திற்கு நடுவில் களமிறங்கினார். இதன்பின் தொடக்கத்திலேயே தனது ட்ரேட் மார்க் ஷாட்டான கவர்ஸ் திசையில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார். இதனால் விராட் கோலி தொடக்கத்திலேயே நல்ல மனநிலையில் இருப்பதாக பார்க்கப்பட்டது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் அடிக்க, கொல்கத்தா மைதானமே உற்சாகத்தில் கொண்டாடியது. இதன்பின் ஆடுகளம் மாறியதால் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களிலும், கேஎல் ராகுல் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது.

இதன்பின் தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசி நிதானம் காத்த விராட் கோலி, 119 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்கள் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் 451 இன்னிங்ஸ்களில் 49 சதங்களை விளாசினார். ஆனால் விராட் கோலி 277 இன்னிங்ஸ்களிலேயே 49வது சதத்தை விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிறந்தநாளன்று சதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். விராட் கோலி சதம் விளாசிய பின், கொல்கத்தா மைதானத்தில் நிரம்பியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை அளித்தார்கள்

error: Content is protected !!