”ரஜினி எல்லாம் தலைவரில்லை ; நடிகர்தான் ”! – சீமான் பேச்சு

”ரஜினி எல்லாம் தலைவரில்லை ; நடிகர்தான் ”! – சீமான் பேச்சு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார்.  சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது, “நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்று இருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்.. இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்..

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது.. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது.. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.. ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்” என்றார்

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்.. படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை.. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை..

நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என கூறினார்

இயக்குனர் சேரன் பேசும்போது, “இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்ததும் அதில் இடம் பெற்றுள்ள நல்லதொரு வீணை பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன்.. பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது.. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன்.. அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம்பெற செய்து விட்டார்.. அனேகமாக அந்த பாடல் இப்போது நிலவி வரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப் பொருத்தமான பாடலாக இருக்கும்.

இந்த படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.. காரணம் கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான்.. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான்.

குறும் படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்து விட்டாய்.. உன் மீது பரிதாபம் வந்துவிட்டது.. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி.. உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்.. கவலை வேண்டாம்” என கூறினார்

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்த படத்தின் திரைக்கதை டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது.. இங்கே வந்து போதுதான் அது ஜெகன் என எனக்கு தெரிந்தது.. பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் அது நன்றாகவே தெரியவருகிறது. தான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம்.. நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன் ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போது தான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது.. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மை தான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் காவல் துறையின் கடமையாக இருக்க வேண்டும்.. அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது..

ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வருகிறோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகி விட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை.. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை.. தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள்.. அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.

இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.. ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது.. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.

இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.. இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும்.. ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார் ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம்.

சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்து விட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.. பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.

https://twitter.com/aanthaireporter/status/1090969066502647813

இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன்.. தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள்.. அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே” என கூறினார்

இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு எல்லா முகமும் உண்டு.. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிகமிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான்.. இந்த படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன்.. ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்த படத்தை இயக்கினாயா என்று கேட்டேன்.. அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.

எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளை பேசுகிறான் என்கிறார்கள்.. பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை.. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறான்.. அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்கலே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார். வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்து இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா.. வழக்கு எண் முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்து போய் அடிக்கத் தோன்றும் விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன் அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம் என என்னிடம் கூறினார்கள்.. அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம்.. இந்த தீ இன்னும் அணையவில்லை.. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள்.. அதில் பலபேர் கிளம்பிவிட்டார்கள் இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன..

தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம் இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்” என்று கூறினார் பாரதிராஜா

error: Content is protected !!