இதுவா தர்மயுத்தம்? – மு.க. ஸ்டாலின் கேள்வி

இதுவா தர்மயுத்தம்? – மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் உலகின் மிகச் சிறந்த நடிகர்கள் என்பதை மக்கள் முன் நிரூபித்து இருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களுக்கு நீதி கேட்டு, அவரது கல்லறையில் தியானம் என்ற நடிப்பின் மூலம் உருவான மவுனப்படத்திற்கு ‘தர்மயுத்தம்’ என்று தலைப்பிட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியது மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. அதற்காகவே வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக தமிழக தலைமை செயலகத்திற்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். வழக்குகள் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையமே கூறியது. விசித்திரமான முறையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.

அதுபோலவே, சசிகலாவால் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை ஓரங்கட்ட முயன்று எடுத்த நடவடிக்கைகளால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைந்து, ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை இழந்த நிலையில், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவதற்காக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் தயவை நாடினார். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியதும் பாஜக அரசுதான்.

‘மக்களுக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காவும் தர்மயுத்தம் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு பதவி, அதிகாரம், பணபேரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்து உள்ளன’  என்ற குற்றச்சாட்டை அதிமுக எம்.எல்.ஏ.க்களே முன் வைத்துள்ளதையும், உள்நாட்டில் எடுக்கப்படும் திரைப்படத்திற்கு வெளிநாட்டில் பாடல் காட்சிகள் படம்பிடிக்கப்படுவது போல, ‘பணபேரங்கள் துபாய் நாட்டில் நடந்துள்ளது’ என அதிமுக சட்டமன்ற உறுப்பினரே குற்றம் சாட்டியிருப்பதும் அரங்கேறியுள்ளன.

மத்திய அரசின் சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இன்றைக்கு மாயமானது போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் எதுவும் இன்றுவரை வெளிப்படவில்லை. விசாரணை கமிஷன் நியமனம் என்கிற கண்துடைப்பு அறிவிப்பு மட்டுமே வெளிவந்துள்ளது. இன்னும் அதற்கு நீதிபதி யார் என்றே தெரியவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சி.பி.ஐ. விசாரணை, பொறுப்பில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை என்பதையெல்லாம் ‘பதவி’ துண்டுக்காக வசதியாக மறந்து விட்டு, விசாரணை கமிஷன் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறி இரு அணிகள் இணைப்பு என்று ஓ.பி.எஸ் நடத்தியுள்ள நாடகம் என்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை மட்டுமல்ல, அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி பதவி வெறியின் உச்சத்தில் இருந்துகொண்டு அதை மறைப்பதற்கு தர்மயுத்தம் என்று மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண மர்மமும் விலகவில்லை. சசிகலா குடும்பத்தாரையும் அதிகாரபூர்வமாக நீக்கவில்லை. தர்மயுத்தம் என்ற பெயரில் நடந்த பதவி யுத்தத்தில் ஆட்சியிலும், கட்சியிலும் சுகமான இடங்களைப் பெற்றுக்கொண்டு ஜெயலலிதாவின் மரண மர்மத்தையும் ‘அம்போ’ என விட்டுவிட்டு, தர்மயுத்தம் என்ற தலைப்பையும் ‘ஒரு தாய் மக்கள்’ என மாற்றி, புது நடிப்பினை வெளிப்படுத்துகிறார்கள்.

இத்தனை நடிப்பும் மத்திய அரசான பாஜகவினால்தான் திரைமறைவில் இயக்கப்பட்டது என்ற உண்மை மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், டெல்லியில் உள்ள பாஜகவினரும், இங்குள்ள அக்கட்சியின் தலைவர்களும் அதை மறைத்து – மறுத்து வந்தனர். ஆனாலும், திரைப்படத்தின் ஏதோ ஒரு இடத்தில் இயக்கியவர்கள் வெளிப்படுவது போல, ‘இணைப்பு’க்கு ஏற்பட்ட திடீர் சிக்கலின்போது ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் செல்வாக்குள்ளவருமான ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அதிமுகவின் இருதரப்பினரும் ஓடோடிச் சென்று ஆலோசனை நடத்தி, பதவி – அதிகாரங்களை உறுதி செய்து கொண்டதில் ‘இணைப்புக்கு முகமூடியாக’ இருந்து செயல்பட்ட பாஜகவின் செயல் அம்பலமாகிவிட்டது.

தர்மயுத்தம், ஒருதாய் மக்கள் எனத் தலைப்புகள் மாறினாலும், டெல்லியிலிருந்து இயக்கப்படும் கயிறுக்கேற்ப தலையாட்டும் பொம்மைகள் நாங்கள் என்பதை அதிமுகவின் இரு தரப்பினரும் அப்பட்டமாக நிரூபித்துவிட்டனர்.திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றிய பெரியார் மண்ணில் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெறமுடியாது என்பதை நன்றாகவே அறிந்திருக்கும் பாஜகவினர், திராவிடத்தையும் அண்ணாவையும் ‘போலியாக’ பெயரளவில் வைத்துக்கொண்டுள்ள இயக்கமான அதிமுகவின் தலைமையிலான ஆட்சியைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாகத் தமிழகத்துக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள் என்பது இதன் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது. தமிழக நலன் தொடர்பான முக்கியமான தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டுமென்றாலும் பொறுப்பு ஆளுநரைத் தேடி மும்பைக்கு ஆட்சியாளர்கள் சென்ற நிலையில், இரு அணிகளின் இணைப்பு நாளில், மும்பை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு சென்னைக்கு வருகிறார் பொறுப்பு ஆளுநர்.

ஆட்சிக்கு ஏற்கெனவே ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தனியாகக்கூடி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்தும் கூட, இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் ஆலோசனை செய்யாமல் உடனடியாக பதவியேற்பிற்கும், அமைச்சர்கள் நியமனத்திற்கும் ஆணை பிறப்பித்து விட்டார் பொறுப்பு ஆளுநர்.

ஏறக்குறைய பீஹாரில் உள்ள ஆளுநர் காட்டிய அவசரத்தை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரும் காட்டியிருப்பது, பாஜகவின் ஆளுமை இந்த இணைப்பில் எந்தளவிற்கு ஆழமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அணிகள் இணைப்புக்காக இரண்டு நடிகர்களும் கட்சி அலுவலகத்திற்கு கிளம்பிய அதேநேரத்தில், பதவி ஏற்பு நிகழ்வுகளுக்காக ஆளுநர் மாளிகைக்கு விரைகிறார் தலைமைச் செயலாளர். ஆக, அனைத்துமே மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவினால் திரைக்கதை எழுதப்பட்டு, முழுமையாக ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள காட்சிகள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.

மக்களிடம் அம்பலமாக வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை – அவருடைய மரணம் ஆகியவற்றில் உள்ள மர்மங்கள் வெளிப்படவேண்டும் என தர்மயுத்தம் நடத்தியவர்கள், அந்த மர்மங்கள் வெளிப்படாமலேயே ஒருதாய் மக்களாகிவிட்டார்கள் என்றால், மரண மர்மங்களை மறைப்பதில் பாஜக அரசும் உடந்தையாக இருக்கிறதா என்ற கேள்விக்கான விடை கிடைக்க வேண்டும். இங்கு நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளும், ஊழல் பணத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தண்ணீர் போல் வாரி இறைத்தது தொடர்பான நடவடிக்கைகளும் பாஜக அரசால் மூடி மறைக்கப்படுமா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.

நீட் தேர்வு, காவிரி உரிமை என அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தை கேட்க முடியாதவர்களாகி, பதவி வேட்கைக்காக டெல்லியின் எடுபிடிகளாக அதிமுகவின் இரு அணியினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். விழுவதற்கு கால்கள் வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த கொள்கையும் இல்லாத அதிமுகவின் முன்னாள் – இந்நாள் முதல்வர்கள் இருவரும், பாஜக அரசின் பாதத்தில் வீழ்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கல்லறையில் புதைந்துள்ள அவரது மரண மர்மம் வெளிப்படாதவாறு மறைக்கிறார்கள். உண்மைகளை நிரந்தரமாகப் புதைத்து விடமுடியாது.

மக்கள் விரோத அதிமுக அரசு இப்போது தனது கட்சிக்காரர்களுக்கும் சேர்த்து நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளது. மெஜாரிட்டியை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்குப் போகும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு, ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கி விட்டது. அப்போது கல்லறையில் புதைந்துள்ள உண்மைகளும், கஜானாவில் அடிக்கப்பட்ட கொள்ளைகளும் வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!