திமுக-வை வாழ வைப்பது வன்னியர்கள்தான்!

திமுக-வை வாழ வைப்பது வன்னியர்கள்தான்!

மைச்சர் சிவசங்கர் அவர்களே!

வன்னியர்களை வாழவைப்பதே திமுகவும் கருணாநிதி அவர்கள் குடும்பமும் என்பது போல சட்டசபையில் பேசியிருக்கிறீர்கள். வன்னியர்களுக்கு கருணாநிதி அவர்கள் ஏதோ அள்ளிக் கொடுத்தது போல நீங்கள் பேசியிருப்பதான் மூலம், உங்களுக்கு அரசியல் வாழ்வு அளித்த வன்னியர் மக்களின் போராட்டங்களையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்திவிட்டீர்கள்.

MBC 20 சதவீத இட ஒதுக்கீடு :

மிகவும் பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு வன்னியர்களின் பல வருட போராட்டங்களில் விளைந்தது. 1989 இல் ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு அக்கறையில் தான் வழங்கியிருப்பார் என எல்லோரும் நினைத்திருக்கலாம். 1987 இல் இட ஒதுக்கீடு தியாகிகளின் உயிர் அதிமுக ஆட்சியில் தான் பறிபோனது. ஆனால் பறிபோகும் நிலைக்கு காரணமே அன்று முப்பெரும் விழாவை நடத்திய திமுக தான். இன்று வரை மரம்வெட்டி என்ற அவப்பெயரையும் சுமப்பதற்கு திமுக தான் காரணம். அந்த பாவத்தைக் கழுவவும், நம்ம ஆட்சிக்கு எதிராகவும் போராட்டத்தை பெரிதாக நடத்திவிடுவார்களோ என்ற அச்சத்திலும், நோகாமல் MBC பிரிவில் தன்னுடைய சாதி உட்பட பல சமூகங்களை இணைத்து அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்கி அரசியல் ஆதாயம் பார்க்கலாம் என்பதையெல்லாம் கணக்கிட்டுதான் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டதே தவிர, வன்னியர்களின் மீதான அக்கறையில் இல்லை. அன்று பலரின் உயிரை இழந்து பொருளை இழந்து இரத்தம் வியர்வை சிந்தி ஒன்றுமே கிடைக்கவில்லை, இதற்கு மேலும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து இழப்புகளை சந்திப்பதற்கு பதில், இதாவது கிடைக்கிறதே என ஒப்புக்கொள்ளும் நிர்பந்தம் வன்னியர் சங்கத்திற்கும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு :

அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு கருணாநிதி அவர்கள் தானாக முன்வந்து கொடுத்தாரா? மருத்துவர் அய்யா அவர்கள் கொடுக்க வைத்தார். 20 வருட போராட்டம் என்பது உங்களுக்கு தெரியுமா? 1988 – வன்னியர் சங்க காலத்திலே அருந்தியர் தலைவர் ராமன் அவர்களுடன் இணைந்து ஈரோட்டில் மாநாடு நடத்தி வன்னியர் சங்கம் போராட்டம் நடத்தும் என அறிவிப்பு 1995 – அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கேட்டு அதியமான் அவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்பு . 1999 – அருந்ததியர் சமூகநீதி மாநாட்டில் அருந்ததியருக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சி போராடும் என்று அறிவிப்பு . அருந்தியர் தலைவர் ராமன் அவர்களின் பெயரில் இட ஒதுக்கீடு கேட்டு பாமக வழக்கு தொடுத்தது வழக்குக்கு தேவையான ஆவணங்களை கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பாமக திரட்டிக் கொடுத்தது. அதனைத் தாண்டிய மற்ற உதவிகளையும் பாமக தான் செய்தது. 1996 – 2009 வரை 10 முறைக்கு மேல் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருந்ததியர்களுக்காக பேசியுள்ளனர் 2001 பாமக சார்பில் அந்தியூரில் கிருஷ்ணன் என்ற அருந்ததியரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டது, அவருடைய சமூகத்திற்கு அவர் வாயிலாகவே பாமக கோரிக்கை வைத்தது . 2003 – ஜெயலலிதா அவர்களின் கவன ஈரப்புக்காக ஜிகே மணி அவர்கள் கன்னட மொழியில் பேசி அருந்ததியர் இட ஒதுக்கீடு கேட்கபட்டது 2007 ஈரோட்டில் அருந்ததியர் சிறுபான்மையினர் மாநாடு பாமக நடத்தியது ..2007 – 2008 காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 22 இட ஒதுக்கீட்டு மாநாடுகள் நடத்தபட்டதில் பலவற்றில் பாமக கலந்து கொண்டது 2008 மார்ச் இல் பாமக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது, அதன் பயனாக ஜனார்த்தனன் ஆணையம் அமைக்கபட்டு அறிக்கை பெறபட்டது .2008 நவம்பரில் அருந்ததியர் சமுதாய அமைப்புகள் கூட்டத்தை பாமக நடத்தியது, கூட்டம் நடக்கும் போதே, ஜிகே மணி அவர்களை அழைத்து இட ஒதுக்கீடு அளிப்பதாக அறிவித்தார் கருணாநிதி அவர்கள் . இவ்வாறு பாமக போராட்டத்தில் உருவானது தான் அருந்ததியர் இட ஒதுக்கீடு.

3.5% சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு!

2006 – தேர்தல் அறிக்கையில் பாமக சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டை சேர்த்தது, பாமக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அவர்கள் வாக்குறுதியை மறந்தார். 2007 – 2008 காலத்தில் சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டை கேட்டு 6 மண்டலங்களில் பாமக வாழ்வுரிமை மாநாடு நடத்தியது, 7 ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றதில் மருத்துவர் அய்யா அவர்கள் தீவிர போராட்டத்தை அறிவிப்பேன் என்றதும், அடுத்தே நாளே நீங்கள் கேட்ட இட ஒதுக்கீட்டை கொடுத்து விடுகிறேன் என கருணாநிதி அவர்கள் சொன்னார். 2008 இல் கிறிஸ்தவர் இஸ்லாமியர்களுக்கு தலா 3.5% இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தார் மருத்துவர் அய்யா. பின்னர் கிறிஸ்தவர்கள் நாங்கள் பிற்படுத்தபட்ட பிரிவிலே தொடர்கிறோம் என கூறிவிட்டனர். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும், கொடுத்த கருணாநிதி அவர்களுக்கும் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யபட்ட நிலையில், தனக்கு மட்டும் நடத்திவிட்டு டாக்டர் அய்யாவிற்கு நடத்தக்கூடாது என தடுத்தவர் தான் கருணாநிதி. நன்றியை மறந்த இஸ்லாமியர்களுக்காக இன்று வரை மருத்துவர் அய்யா குரல் கொடுத்து வருகிறார்.

இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு பென்ஷன், மணிமண்டபம் :

கருணாநிதி அவர்களுக்கு உண்மையில் இட ஒதுக்கீடு தியாகிகளின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இருந்திருந்தால் 1989 இல் ஆட்சிக்கு வந்த உடனே பென்ஷன், மணிமண்டபம் அமைத்திருக்காலம். ஆனால் அமைக்கவில்லை. பாமக தொடர்ச்சியாக உயிர்நீத்தவர்களை தியாகியாக அறிவித்து பென்ஷன் அறிவிக்க வேண்டும் பாமக பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில், அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத கருணாநிதி அவர்கள், பாமகவை பலவீனபடுத்த பேராசிரியர் தீரன் அவர்களை பாமகவில் இருந்து பிரித்து, பாமகவில் இருக்கும் வன்னியர்களை அவர்கள் பக்கம் அழைக்கும் நோக்கிலே அன்று பென்ஷன் அறிவிக்கபட்டது. அதவாது அரசியல் லாபத்திற்காக மட்டுமே அறிவிக்கபட்டது. மணிமண்டபம் 2019 இடைதேர்தலின் போது அறிவிக்கபட்டது, ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் முடிந்துவிட்டது. 2018 இல் மறைந்த கருணாநிதிக்கு 39 கோடியில் ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் நினைவுச்சின்னம் அமைக்கத் தெரிந்த ஸ்டாலினுக்கு, வெறுமனே 4 கோடியில் அமைக்கபட இருக்கும் மணிமண்டபம் எங்கே? அண்ணா அமைச்சரவையில் இடம்பெற்ற ஏ ஜி கோவிந்தசாமி மணிமண்டபம் எங்கே? உதயசூரியன் சின்னத்தை வழங்கியவருக்கு திமுக சொந்த செலவிலே கட்டியிருக்க வேண்டாமா?

2019 இல் வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு தருகிறேன் என்று சொன்னாரே ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆச்சே, ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டாரா? பாமக போராடி பெற்றுக்கொடுத்த 10.5% இட ஒதுக்கீட்டை, தேர்தலுக்காக அவர்கள் அறிவித்துவிட்டார்கள், நாங்கள் தான் வந்து அமல்படுத்துவோம் என அடுத்த நாளே காஞ்சிபுரத்தில் பேசினாரே ஸ்டாலின் செய்தாரா? தரவுகள் இல்லை என நீதிமன்றம் சொல்லி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதே தரவுகள் எடுக்க அமைக்கபட்ட ஆணையம் ஒன்றரை ஆண்டுகளாக தூங்குகிறதே, ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? வன்னியர்களின் வாக்குகளை வாங்கி கொடுத்து அவர்களின் சார்பாக அமைச்சராக இருக்கும் மூவரும் சமுதயாத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுத்தீர்களா? எந்த ஒரு மாநில அரசும் உள் இட ஒதுக்கீடு அளிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி தரவுகள் தான் வேண்டும், அதனை திமுக செய்யும் என இரண்டு வருடங்களுக்கு முன்பு ரப்பர் ஸ்டாம்ப் துரைமுருகன் சொன்னாரே செய்தாரா?

உள் இட ஒதுக்கீடு அளிக்க சர்வே போதும் என்ற நிலையில், ஒன்றிய அரசு எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பொய் சொல்வதேன்? அப்போ 2019 2021 காலங்களில் உள் இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்று சொன்னதெல்லாம் பொய் தானே? எதனடிப்படையில் பொய்யான வாக்குறுதி அளித்தீர்கள்? இப்படி மாற்றி மாற்றி பேசி பேசி வன்னியர் சமூகத்தை ஏமாற்றுவதற்கு உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா? பிற்படுத்தபட்டோர் அமைச்சர் பேச வேண்டிய இடத்தில் போக்குவரத்து துறை அமைச்சருக்கு என்ன வேலை? உங்களுக்காகவும், உங்கள் உறவினருக்காகவும் சேர்த்து தான் பாட்டாளி மக்கள் கட்சி பேசி வருகிறது என்பது உங்கள் புத்திக்கு உறைக்கவில்லையா?

திமுகவின் தேர்தல் வரலாற்றை 1957 முதல் எடுத்துப் பாருங்கள், இன்றுவரை அவர்களை வாழ வைப்பது வன்னியர்கள் தான். அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு பச்சைதுரோகம் செய்வது திமுக தானே? வன்னியர்களுக்காக யாரும் கோரிக்கை ஏதும் வைக்காமலே திமுக செய்தது என்ன? இந்தியாவின் சுதந்திரத்திற்கு சில நூறு ஆண்டுகள் போராடி வீழ்ந்து மறைந்த இரத்தம் சிந்தியவர்களைத் தான் நாம் சுதந்திர போராட்டத் தியாகிகள் என்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்தது என கையெழுத்து போட்ட மவுண்ட்பேட்டன் பிரபுவை நாம் கொண்டாடவில்லையே. ஆனால் மருத்துவர் அய்யா அவர்கள் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி வாயிலாகவே எல்லாவற்றையும் எல்லோருக்காகவும் போராடி பல உயிர்களை இழந்து பலரின் பொருளை இழந்து சமூகநீதியை நிலைநாட்டினால், நீங்கள் நோகாமல் கையெழுத்து போட்ட கருணாநிதியின் பெயரில் எல்லாப் பெருமையையும் எழுதுகிறீர்களே வாய் கூசவில்லையா? உங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக உங்கள் சமுதாயத்தினரின் போராட்டத்தையும் தியாகத்தையும் இப்படியா கொச்சைப்படுத்த வேண்டும்? பதில் சொல்வீர்களா?

ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

error: Content is protected !!