நான் ஏன் “ரௌத்திரம்” படிக்க மாட்டேன்.. ?

நான் ஏன் “ரௌத்திரம்” படிக்க மாட்டேன்.. ?

செப்டம்பர் மாத ரௌத்திரம் இதழை நேற்று (4-9-2016) தான் படித்தேன். அதில் இதழாசிரியர் தமிழருவிமணியன் அவர்கள் “அன்பிற்கினிய நண்பர்களுக்கு..” என வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ரௌத்திரம் இதழின் ஆண்டுச் சந்தாவான ரூ. 180-யை உடனடியாக அனுப்பி வையுங்கள்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனக்கு வேதனையும் கோபமும் ஒன்றை ஒன்றை முந்திக்கொண்டு எட்டிப்பார்த்தது. தமிழகத்தில் இப்போது பேச்சாளர்களுக்குத்தான் நல்ல வாய்ப்பும் வசதியும். நாடறிந்த நல் அறிஞர். நல்ல பேச்சாளரும்கூட. 108 போற்றி சொல்லி பதவி பெறலாம். ஆளும்கட்சிக்குச் சாதகமாக ஜால்ரா அடித்து இனோவா காரும் பதவியும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க தமிழகத்தில் அணி திரட்டியவராயிற்றே அவர். அதனால், மத்தியில் கவர்னர் பதவியோ ஏதோ ஒன்றை வாங்கிக்கொண்டு நிம்மதியாக வடகிழக்கு மாநிலத்தின் இயற்கை வளங்களை ரசிக்கலாம். கலவரங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். இரண்டும் பிடிக்கவில்லையா? ஜெயலலிதாவை திட்டித்தீர்த்து எதிர்கட்சியில் முக்கிய பிரமுகராகலாம். பதவியும் கிடைக்கும் பரபரப்பும் மிஞ்சும். இப்படி எவ்வளவோ வாய்ப்பு அவருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு 180 அனுப்பு என்று கேட்கிறார். நாம் ஓர் ஆண்டுக்கு காபி அல்லது டீ அல்லது சிகரெட் அல்லது ஒரு முறை குவாட்டருக்குச் செலவு செய்வதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதிதான் அவர் கேட்கும் 180 ரூபாய். என்றாலும், பணம் அனுப்புமாறு நம்மை கேட்க இவர் யார்..? இவருக்கு யார் அதிகாரத்தைக் கொடுத்தது..?

edit sep 5

மனிதர் தெரியாமல் கேட்டுவிட்டார் என்று முடிவுக்கு வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின்னர் ரௌத்திரம் இதழை முடித்து விட்டு யோசித்தால் தாங்கமுடியவில்லை.இதழைத் திறந்தவுடன் கேள்விப்பதில். அதில் அரசியல், அறிவியல், ஆன்மிகம், வரலாறு, பண்பாடு பற்றிய ஏராளமான கேள்விகள். அவற்றிற்கெல்லாம் பதிலிருக்கிறது. ஆனால், என் நீண்டநாள் சந்தேகமான, என் ரசிப்பிற்குரிய தலைவரின் கட் அவுட்டிற்கு எந்த “பிராண்ட்” பால் வாங்கி ஊற்றலாம் என்ற கேள்வியும் இல்லை. கேள்வி இருந்தால் அல்லவா பதில் இருப்பதற்கு? “ஆரோக்கியா” வாங்குவதா? “ஆவின்” வாங்குவதா? என்ற என் குழப்பத்தைத் தீர்க்காத கேள்விப்பதில் பகுதி எனக்கு எதற்கு? அதற்கும் மேல், திரிஷா நடித்த “நாயகி” படத்தின் நிலை என்ன? என்பது போன்று என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியோ பதிலோ இல்லை. கேள்விப்பதில் பகுதியில் “கண்டவர்கள் தூற்றும் அளவுக்கு காந்தி என்ன தவறு செய்தார்?” என்று ஒரு கேள்வி. அதில் நம்ம ராகுல்காந்தி, சோனியா காந்தி படத்துக்குப் பதிலாக, நம்ம ரூபாய் நோட்டில பொக்கை வாய் உடன் இருக்கும் நபர் படத்தை போட்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அபத்தம்..? சினிமா “அறிவை” வளர்த்துக்கொள்ள இயலாத, கேள்வி பதில் பகுதியை நான் ஏன் படிக்கவேண்டும்?

ஜரோம் ஷர்மிளா என்ன செய்யப்போகிறார்? என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. நடிகை ஐஸ்வர்யராய் ஏதோ நடிகரிடம் நெருக்கம் காட்டியதால் குடும்பத்தில் குழப்பம் என வைரலாக பரவும் செய்தி குறித்தானக் கட்டுரை இல்லை. வெறுப்பா இருக்கு சார்.

தேசிய அளவில் பேசப்பட்டு வரும் புதிய கல்விக்கொள்கை குறித்து பல பேராசிரியர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்திருக்கும் ஒரு கட்டுரையும் இருக்கிறது. கல்வி எப்படி போனா நமக்கென்ன? விலை கொடுத்து வாங்கப் போறோம். விலை கொடுக்க முடியல்லையா? கடன் வாங்கிச் சேர்க்கப்போறோம்? பிறகு கடன் கட்டமுடியல்லேன்னா நம்ம பிள்ளைக தற்கொலை செய்து கொள்ளும். அதெல்லாம் நமக்கு தெரியாதா? இல்ல.. நாமதான் இதையெல்லாம் டீல் செய்ய மாட்டோமா..? கல்விக்கொள்கையை பேச வந்துட்டாங்க..

“உணவில் உறையும் வாழ்வியல் அறம்..”ன்னு ஒரு கட்டுரை. 99 ரூபாய்க்கு வயிறு நிறைய பீட்சா தாரோம்ன்னு ஒரு விளம்பரம் ஓடிட்டு இருக்கு. அது பற்றி பேசாமல “காற்றும் ஓர் உணவே” என்கிறார் கட்டுரையாளர் சாவித்திரி கண்ணன். எதுக்கு இதெல்லாம்?. பாஸ்ட் புட் சாப்பிட்டமா? அது செரிக்க கோலா குடிக்கோமா? தொடர்ந்து குடித்து செத்தோமா..ன்னு இருப்பதை விட்டுட்டு..

மற்றவங்களை எழுத்த வச்சது போதான்னு தானும், நா.பா.வின் குறிஞ்சிமலர் பற்றியும், கட்சிதாவல் பற்றியும், கலையுலகின் பொற்காலம் பற்றியும் தமிழருவியார் எழுதியிருக்கிறார். அதாவது, இலக்கியம், அரசியல், கலை.. தலைப்புகளில் எழுதியிருக்கிறார்ன்னு சொல்லலாம். இதையெல்லாம் வாசிக்க வைத்து நம்மை சரி படுத்திடலாம் என நினைக்கிறார் போல. அவரை என்ன சொல்ல? காந்தி ஜெயந்தி அன்றைக்குக் கூட தொலைக்காட்சியில் கவர்ச்சி நடிகையின் பேட்டியை எதிர்பார்ப்பவங்க நாம..

“தமிழ் சினிமா மக்களை நோக்கி வருகிறதா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை துளியளவுகூட கிசுகிசு இல்லை. அதுதான் வேண்டாம் சார்.. மணிரத்தினத்திடம் தமிழ் கற்கும் நடிகை அதிதிராவ் படத்தையாவது போட்டிருக்கலாமில்லையா? தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாராவைப் பற்றியோ, “என் லிப் வேணும்னா சம்பளத்தை டபுளாக்கிடுவேன்..” என கடுப்பில் காஜல் சொன்னதையோ கூட போடல்லேன்னா எப்படி சார்.. அது சினிமா கட்டுரையாகும்?

சுற்றுப்புற சூழல் குறித்த ஒரு கவிதை. சுற்றுச்சூழல் பற்றி நமக்குத் தெரியாதா? நம்ம வீட்டுக் குப்பையைப் பெருக்கி அடுத்த வீட்டில போடணும்னு? மணல் கொள்ளை போயிடுச்சு.. ஆற்றைக் காணல்லேன்னு கவிஞர் அலறுறாரு. என்ன செய்யமுடியும்? அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பிழைக்கவேண்டாமா? காலங்காலமாக நடந்துட்டு இருக்கிறதை, “வேண்டாம்”ன்னு சொல்ல இந்த இதழுக்கு யார் அனுமதி கொடுத்தது? 110 விதியின் கீழ் தனி அனுமதி பெற்றிருக்காங்களா? ஆசிரியர் குழு கொஞ்சம் அடக்கி வாசித்தால் பரவாயில்லை.

ஜி.எஸ்.டி. வரி பற்றி பொருளாதார நிபுணர் பேராசிரியர் இராம. சீனிவாசன் கட்டுரை எழுதியிருக்கிறார். சிரிப்பு வருது. பாஸ். நீங்க எவ்வளவு பெரிய ஆளு.. இதையெல்லாம் விட்டுட்டு அடுத்து என்ன இலவசம் தரலாம் என அரசுக்கு யோசனை சொல்லற மாதிரி கட்டுரை எழுதுங்க..

“நாங்களும் பேசுவோமில்ல..” என்கிற புதிய பகுதி. இதில் பதினைந்து விஷயங்கள் சொல்லியிருக்காங்க. பலருக்குத் தெரியாத விஷயங்கள்தான். எனக்குக்கூட எல்லாம் புதுசாதான் இருந்துச்சு. ஆனால் என்ன பிரயோசனம்? ஒண்ணுல கூட கிளுகிளுப்பு இல்லையே? “நடிப்புக்காக அதை இழந்தேன்..” என நடிகை தன்ஷிகா ஒரு பேட்டியில சொல்லி பட்டையைக் கிளப்பியிருந்தாங்க.. அதுல உள்ள “கிக்” துளியளவு கூட இதுல இல்லையே.. ஏதோ அரசியல், அறிவியல், பொருளாதாரம், மனிதாபிமானம் போன்ற விஷயங்களைப் பேசிட்டு..? எதுக்கு இந்த புடலங்காயெல்லாம்?

“அழிவின் விளிம்பில் ஓர் அற்புதக் கலைக்கூடம்” முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இனி கற்சிலைகளெல்லாம் காணாமல் போயிடும் என பதறுகிறார். வரலாறு எதுக்கு சார்..? ஷீலா தீட்சித்தை விட அம்மா அதிககாலம் பதவியில் இருக்கிறாங்க.. மோடியின் கோட் சூட் அதிக ஏலத்துக்குப் போச்சு.. இந்த வரலாற்றை பேசுங்க.. ஏன்னு கேட்கிறீங்களா.. இன்றைய செய்தி நாளைய வரலாறு சார். வரலாறு முக்கியம்.

வேப்பிலை ஆடை உடுத்தி, உருண்டு கொடுத்து, மண்சோறு சாப்பிட்டு தலைமையைக் கவருவது எப்படி என்பன போன்ற நம்மை உயர்த்திக் கொள்வதற்கான டிப்ஸ் ஏதும் இல்லாத இதழாக ரௌத்திரம் இருக்கிறது. என் சொறிதலுக்கான விஷயங்கள் இல்லாத இதழை நான் ஏன் வாங்க வேண்டும்?

நாற்பத்தெட்டு பக்கம்.. பதினைந்து ரூபாய்க்கு இவ்வளவு விஷயங்களைச் சொல்லி இம்சை தரணுமா? மக்களை பற்றி எதுக்கு சார் சிந்திக்கணும். மண்ணும் மக்களும் அழிவை நோக்கி போனாலும் சரி… அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டுவைக்காமல் இயற்கை வளங்களை இன்றைய ஆட்சியாளர்கள் சூறையாடிச் சென்றாலும் சரி.. நாம கவலைப்படுவது வீண். அப்படியிருக்கையில் நாம் ஏன் கவலைப்படணும்? எவ்வளவோ பத்திரிகைகள் இல்லையா? நீங்க மட்டும் என்ன வித்தியாசமாய் செய்யணும்னு நினைக்கிறீங்க?

அரசுகளுக்கு அனுசரணையா இருந்தோமா.. மாதத்துக்கு அஞ்சு விளம்பரம் வாங்கினோமா? இதழாசிரியர் என்ற முறையில் பிரதமருடன் வெளிநாடு போனோமா..ன்னு இல்லாமால் ஏன் இப்படி? இது பல்லக்குத் தூக்குபவனின் காலம் சார்.. அறம் சார்ந்த பத்திரிகை நடத்துபவருக்கான காலம் அல்ல.. மக்கள் மனம் மாறி உங்க இதழை வாங்கினால் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மக்கள் என்ன செய்யப்போறாங்க…?

இதுதான் நானும் மக்கள் முன் வைக்கும் கேள்வி..? என்ன செய்யப்போகிறீர்கள்? நல்ல இதழை வாங்குதல் சுத்தமான காற்றினை சுவாசித்தல் போல. சுத்தமான காற்று உங்கள் உடலை, மனதை ஆரோக்கியமாக்கும். நல்ல காற்றை சுவாசிக்க இனியாவது ஆசை படுங்கள் மக்களே..

ப. திருமலை

error: Content is protected !!