உலக சுற்றுச்சூழல் நாள்!

உலக சுற்றுச்சூழல் நாள்!

1974 ஆம் ஆண்டு முதல் ஐக்கியநாடுகள் சபை சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ருவநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவு, மாசு – போன்ற மனித செயல்பாடுகள் நாம் வாழும் இந்த பூமியை நாளுக்கு நாள் அபாய நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதே வேலையில், பல கோடி மக்கள், உணவு, உறைவிடம், உடல்நலன், வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் தவிக்கின்றனர். அண்மையில் கோவிட் பெருந்தொற்று நமது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. இந்த நிலையை மாற்ற ஒரே வழி அனைவருக்கும் நியாயமான, சமத்துவமான எந்த ஒரு ஏற்றத்தாழ்வும், பாகுபாடும் இல்லாத இயற்கையோடு இயைந்த சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த பூமியை மென்மேலும் சீரழிப்பதை விட்டுவிட்டு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய ஆவன செய்யவேண்டும். இருப்பதை பாதுகாத்து நாம் அழித்ததை மீளமைத்து நாம் அனைவரும் வாழ வழிவகை செய்யும் வளங்குன்றாத எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

குறிப்பாக நீர்நிலைகள், காடுகள், மலைகள், அதிலுள்ள அரிய உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், கடற்கரைகள் என்று அனைத்தும் இயற்கை அன்னை நமக்குத் தாரை வார்த்துக் கொடுத்த இணையற்ற பொக்கிசங்கள். இவற்றைப் பாதுகாத்து நமக்கு விட்டுச்செல்வதில் பேரறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் நமது முன்னோர்கள்.
குறிப்பாக நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்தனர். அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ற கலாச்சாரங்களையும், தொழில்களையும் உருவாக்கினர். நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் வாழ்வின் உயரிய அங்கமாகக் கருதி போற்றி வழிபட்டனர். இதனால் இயற்கையை மாசுபடுத்தாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம், இயல்பிலேயே இருந்துள்ளது. அதுவே எழில்மிகு பூமியை நம்மிடம் விட்டுச்செல்ல வழி வகுத்தது. ஆனால், இன்றைய நவீன அறிவியலின் வளர்ச்சியால் வெளிப்படும் இரசாயன கழிவுகளும், புகைமண்டலங்களும் இனிய சுற்றுச்சூழலை அடியோடு சிதைத்து வருகிறது. நம்மால் சுற்றுச்சூழல் சீரழியும் நேரத்தில், அதன் சீற்றங்களையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் கத்திரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும் இயற்கையில் ஒரு ஒழுங்கற்ற தன்மை உருவாகிக் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் அபாய சாட்சியங்கள். வெப்பமயமாதல் பிரச்னையால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், நிலத்தடி நீர்மட்டமோ அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. இது மனித குலத்தோடு அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது நிதர்சனம். இந்த பூமிப்பந்தில் பயிரினங்கள், கால்நடைகள், விலங்கினங்கள், பறவைகளோடு ஒப்பிடுகையில், மனிதன் கோடியில் ஒரு துளி. ஆனால், இந்தத் துளிகளின் செயல்பாடுகளே இயற்கையை மலடாக்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, இதைத் தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் ஒவ்வொருவர் மூளைக்குள்ளும் உருவாக வேண்டும். அதோடு இயற்கை சீரழிவு, சுற்றுச்சூழல் மாசு இவற்றிற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பருவநிலை அவரசநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் கொள்கைகளை வகுத்து செயல்படும் அரசியல் தலைவர்களை ஆதரித்தல் வேண்டும்.

இயற்கைக்கு இயைந்த நகர்புற வளர்ச்சித் திட்டங்கள், முறையான கழிவு மேலாண்மை, தடையில்லாத பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பெற பாடுபடவேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கைக்கு எதிரான (நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மாசுபடுத்துதல், காடழிப்பு போன்ற) செயல்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமல் அல்லாமல் களத்திலும் போராடவேண்டும். அவற்றிற்கு அறிவியல் பூர்வமாக தீர்வுகளைக் காண முற்படவேண்டும்.

நமது வீடுகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அமைக்கவும் வேண்டும். வாகனங்களைத் தவிர்த்து நடந்து அல்லது மிதிவண்டியில் செல்லுதல், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணித்தல், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருத்தல், நீரை அளவோடு செலவழித்தல், மின்சாரத்தை மிச்சப்படுத்துதல், பதப்படுத்தப்பட்ட, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்த்தல், நாம் வசிக்கும் பகுதிகளில் அருகிலேயே விளையும் தானியங்களையும், உணவுப்பொருட்களையும் வாங்குதல், உணவினை வீணாக்காதிருத்தல், வசதிக்கு ஏற்ப இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்குதல், இயற்கையை அழித்து, சுற்றுச்சூழலை நாசம் செய்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களையும் வாங்காத ஒரு பொறுப்பான நுகர்வோராக இருத்தல், இளைய சமுதாயத்திற்கு புறவுலகை நேசிக்க கற்றுக் கொடுக்க இயற்கையான வாழிடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று இயற்கையின் விந்தைகளை நேரில் காணும் அனுபவத்தை அளித்தல் என நமது அன்றாட நடவடிக்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த வரையில் மாற்றத்தை கொண்டு வந்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

இவை அனைத்தையும் ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அத்துடன் மரம் நடுவது, காடுகள் வளர்ப்பது, மரபுசாரா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றுவது, அதிக மாசுக்களை உருவாக்கும் திட்டங்களைக் கைவிடுவது போன்ற செயல்களால் மட்டுமே, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மறுசீரமைப்பு செய்ய முடியும். எனவே, உலக சுற்றுச்சூழல் நாளில், மாற்றத்தை நம்மிடம் இருந்தே தொடங்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நமக்கு இருப்பது ஒரேயொரு பூமி. அதைப் பாதுகாக்க உறுதியேற்போம்.!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!