பன்னாட்டு பட்டினி நாள்!

பன்னாட்டு பட்டினி நாள்!

லக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அப்போதே பாடினார், பாரதி. ஆனால் உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இச்சேதியைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி‘ஏம்மா… பசிக்குது… 2 பீட்சா பர்கர், சிக்கன் பிரியாணி ஆர்டர் போடட்டுமா…’ என்று கூறிவிட்டு, வீட்டில் இருந்தபடியே செல்போனில் செயலியை தட்டி ஆர்டர் போட்டு சாப்பிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதே நேரம் ஒரு வேளை உணவுக்காக கடும் போராட்டம் நடத்தி, அதுவும் கிடைக்காமல் உயிரை விடுபவர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருவது வருத்தம் தரும் விஷயம். ஆக இன்று உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது. இந்தியாவில் சுமார் 24 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டினியோடு வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை எல்லாம் நினைவூட்டி உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தவே உலக பட்டினி தினம்னுசரிக்கப்படுகிறது.

அதாவது மனிதன் உழைப்பதற்கு முக்கியமான காரணம் உணவு. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு உழைக்கும் தொழிலாளியும், தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உறங்கும் தாய்மார்களும், காலையில் காசு இல்லாமல் 2 இட்லி மட்டும் அல்லது டீ குடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் இங்கு ஏராளம்.ஒரு வேளை உணவுக்காக யாசிக்கும் கைகளைத் தினமும் பேருந்து நிலையங்களில், கடற்கரைகளில், தெருக்களில் பார்க்கலாம். இவர்களுடைய நிலைக்கு அவர்களா காரணமாக இருக்க முடியும்? கண்டிப்பாக இல்லை.இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக கட்டமைப்பு.

அதே சமயம் மக்கள் உணவின்றி தவிப்பதற்கு போர், உள்நாட்டு நெருக்கடி, பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர், பெருந்தொற்று, உணவு பங்கீட்டில் குறைபாடு, சுரண்டல் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. போரும், சுரண்டலும், உணவுப் பங்கீட்டில் குறைபாடும் மனிதர்களால் ஏற்படக்கூடியது. 1943 – 1944 ஆண்டுகளில் உலக மக்களின் கவனத்தைப் பெற்ற பெங்கால் வறட்சியில் (Bengal Famine) லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கு உணவுப் பற்றாக்குறையைக் காட்டிலும் முறையான உணவுப் பங்கீடு இல்லாததுதான் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் பட்டினியும் வறுமையும் நிறைந்திருக்க காரணம் உணவும், பொருளாதாரமும் குறிப்பிட்ட மக்களிடம் குவிந்து கிடைப்பதே என்பதும் உண்மை.

நம் நாட்டில் தற்போதைய ஆட்சியில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் பல இருந்தும் நடைமுறை சிக்கல்கள் ஏராளம். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக, பசியால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இருக்கின்றன. ஆனால், மக்களும் அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை; நிர்வாகமும் சரியாக இல்லை.பெருந்தொற்று, பேரிடர் போன்ற காலங்களில் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான முறையான மேலாண்மை திட்டம் அரசிடம் இல்லை. கொரனா காலங்களில் தொழில்கள் முடங்கியபோது எண்ணற்ற மக்கள் உணவுக்கும் பாலுக்கும்கூட காசு இல்லாமல் தவித்தனர். ஆனால், இவர்களுக்கு அரசால் என்ன செய்ய முடிந்தது. சிறிய நிவாரணம் மட்டுமே கொடுக்க முடிந்தது. அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம், பெரும்பணக்காரர்களிடம் தேக்கி வைக்கப்பட்ட பணத்தை எல்லாருக்குமானதாக பங்கிட்டிருந்தாலே வறுமை ஒழிந்திருக்கும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75 மில்லியன் டன் உணவு வீணாகிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் சராசரியாக 70 கிலோ உணவை வீணாக்குவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது, உணவை வீணாக்குவோரில் இந்தியாவின் பங்கு 9 சதவீதம் ஆகும். சரி.. உணவுகள் எங்கெங்கு வீணாகின்றன. வீடுகளில் 60 சதவீதம், ஓட்டல்களில் 26 சதவீதம், சில்லறை விற்பனை கடைகளில் 14 சதவீதம் உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. பயன்படுத்தாமல் விட்ட உணவுகளை முறையாக சேகரித்தாலே பசியோடு இருக்கும் பல கோடி மக்கள் வயிறார சாப்பிடலாம்.

ஆனால் இன்றைக்கும் எத்தனையோ நாடுகள் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அந்நாட்டு மக்கள் உணவுக்கே போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. நம்மால் அனைவரின் பசியையும் போக்குவது சிரமம். முடிந்தளவு இன்றைய பட்டினி தினத்திலாவது, நம் வீட்டருகே, தெருவில், ஊரில் பசியோடு இருக்கும் ஒருவருக்கு ஒரு வேளை உணவாவது வழங்கலாமே…? செய்யலாமா?

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!