பன்னாட்டு இசை நாள்!

பன்னாட்டு இசை நாள்!

லக இசை தினம்’ சாதாரண நாள் அல்ல. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இசை வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. அதற்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அமெச்சூர் மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்கள் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இசைக்கலைஞர்கள் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நினைத்து பார்க்கவும் இந்நாள் அவசியம். இசை ஒரு மனிதனை பண்பட்டவனாக மாற்றும் வல்லமை கொண்டது. மனநல சிகிச்சையில் கூட இசைக்கு அளப்பரிய பங்குள்ளது.

ஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசை மீட்டெடுக்க கூடியது. இசையின் வடிவங்கள் வேறாகலாம். இந்தியாவை பொறுத்தவரை திரை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி, கஜல், பறை என ஏராளமான இசை வடிவங்கள். இதில் திரையிசை முதல் பறையிசை வரை இந்தியாவில் தனி மனிதனின் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை பயணப்பட்டுக் கொண்டிருக்கும்.

உலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன அதில் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி, ஹார்டு ராக், ஹெவி மெட்டல் உள்ளிட்ட இசை வகைகள் உலகளவில் பிரபலம்.

இந்தியாவில் இரண்டு இசை வகைகள்தான் பிரபலம். ஒன்று வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி பின்பு தென்னகத்தின் கர்நாடக இசை. அதிலும் கர்நாடக இசை வடிவம் கடவுள் அளித்த கொடையாக இன்றும் பார்க்கப்படுகிறது. கர்நாடக இசை வடிவங்களின் பிதாமகர்களான தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும், ஷாமா சாஸ்திரிகளும் கடவுளே இந்த இசை வடிவத்தை அளித்துள்ளதாக தங்களது பல்வேறு கீர்த்தனைகளில் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றிவிட்டாலும். வெளிநாடுகளில் இசை உருவானது எப்படி என்றால் விலங்குகளில் இருந்து மனிதன் தன்னை பாதுகாக்க எழுப்பிய சத்தத்தின் மூலம் உருவானதுதான் இசை. இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் “ஹிப்ஹாப்” இசை வடிவம் இப்படி உருவானதுதான் என்பது பிரபல இசை ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்தியாவில் மிகவும் போற்றப்படும் இசைக்கு ஒரு காலத்தில் தடை இருந்தது. ஆம், மொகலாய மன்னன் அவுரங்கசிப் காலத்தில் இசைக்கு தடைப் போடப்பட்டிருந்தது. எங்கும் எதிலும் இசை என்பதை அவுரங்கசிப் வெறுத்தார். இஸ்லாத்துக்கு எதிரானது என அவர் ஆட்சி செய்த காலம் வரை இசைக்கு தொடர் தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இசைக் கலைஞர்கள் பலர் கடும் தண்டனைகளையும் விதித்தார். இத்தனை துயரங்களையும் மீறி பல்வேறு வடிவங்களில் இசை இன்னும் இந்திய இசை வாழ்ந்து வருகிறது.

அறிஞர்களின் பார்வையில்…

🎼 இசை ஒரு அன்பின் உணவு; விளையாடுங்கள் – ஷேக்ஸ்பியர்

🎼இசை எனது மதம் – ஜிமி ஹென்றிக்ஸ்

🎼இசை, உன் மனதை வெளிக்கொண்டு வரவேண்டும் – மிஸி எலியாட்

🎼இசை, உணர்ச்சியின் சுருக்கம் – லியோ டால்ஸ்டாய்

🎼 கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் – பிளாட்டோ

🎼 இசை, உலகை மாற்றும். ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது – போனோ.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!