யுவனின் சென்னை YMCA இசைநிகழ்ச்சி ஹைலைட்ஸ்!

யுவனின் சென்னை YMCA இசைநிகழ்ச்சி ஹைலைட்ஸ்!

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா . இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தந்தையின் சாயல் துளி கூட இல்லாமல் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 படங்களை கடந்து, 24 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு.

இயக்குனர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என பல இயக்குனர்களும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்கவே முடியாது என பல மேடைகளில் பதிவு செய்துள்ளனர். இதுவே தமிழ் சினிமா இயக்குனர்கள் யுவன் சங்கர் ராஜா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன் குரலால் தனிமுத்திரை பதித்துள்ள யுவன்சங்கர்ராஜா, பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். பிற இசையமைப்பாளர்ளை தனது இசையில் பாட வைத்தும், இசையமைப்பாளர்களுக்கு இடையே நட்பு பாராட்டுவதில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறார்.

அப்பேர்பட்ட யுவனின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிசயம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர்.

இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே பரிசளித்தார்.

error: Content is protected !!